எதை அடைய முயல்கிறோம்?
Capernaum
Lebanese | 2018 | Nadine Labaki
தி கார்டியன், 21ம் நூற்றாண்டின் 100 டாப் படங்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அதிலொரு படம் கேப்பர்நாம் (Capernaum).
ஸெய்ன் யெல் காஜ் எனும் சிறுவனை மையமாகக் கொண்ட கதை. ஒரு ஆசிரியனாக எனது அனுபவத்தில் ஸெய்னைப்போல் பல கிராமத்துக் குழந்தைகளைக் கடந்து வந்திருக்கிறேன்.
கேப்பர்நாம் லெபனான் படம். லெபனான் நம் தமிழ்நாட்டைப் போலவே இருக்கிறது. ஒரு உதாரணம். ஆகஸ்ட் 4 ஆம் தேதி (2020), லெபனான் தலைநகர் பெய்ரூட் கடற்கரையருகே 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள்கள் வெடித்தது. பல ஆண்டுகளாக கேட்பாரற்றுக் கிடந்த வெடிமருந்துப் பொருளவை. நூற்றுக்கும் அதிகமானோர் இந்த விபத்தில் இறந்தனர்.
மறுநாள் நமது நாளிதழ்களில் செய்தி வருகிறது. சென்னை கடற்கரையில் 740 டன் அமோனியம் நைட்ரேட் வெடிபொருள் கடந்த ஆறு ஆண்டுகளாக வைக்கப்பட்டிருக்கிறது என்று!
நம்மூரைப்போலவே வறுமை. நம் ஊரைப்போலவே அறியாமை. நம் ஊரைப்போலவே குழந்தை வளர்ப்பில் அக்கறை செலுத்த முடியாமல் போதைக்கு அடிமையான பெற்றோர்கள். நம் ஊரைப்போலவே குழந்தை தொழிலாளர்கள். நம் ஊரைப்போலவே சிறார் குற்றவாளிகள்.
படத்தின் தொடக்கக் காட்சியே மனசைக் கவ்வுகிறது. 12 வயதான சிறுவன் ஸெய்னை விலங்கிட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து வருகிறார்கள். ஒருவனை கத்தியால் குத்தியதற்காக, இச்சிறு வயதில் ஐந்தாண்டு சிறை தண்டனை.
குற்றவாளிகளாக வேண்டும் என யாரும் விரும்பிப் பிறப்பதில்லை. அரசியல், பொருளாதாரம், பண்பாடு போன்றவை தரக்கூடிய புற அழுத்தம், குடும்ப சூழல், போன்றவைதான் மனிதர்களை குற்றவாளிகளாக மாற்றுகிறது.
வறுமையால் ஸெய்னின் அப்பா குற்றச் செயல்கள் புரிகிறான். அடிக்கடி சிறை செல்கிறான். அவன் ரிலீசாகிறபோதெல்லாம் ஸெய்ன் அம்மா கர்ப்பமடைகிறாள். அந்த சின்ன வீட்டில் குழந்தைகளைத் தவிர வேறு எதுவுமே இல்லை. பத்து பதினைந்து குழந்தைகள்.
மருந்து கடைகளில் மாத்திரை வாங்கி அதைத் தண்ணீரில் கலக்கி போதை மருந்துபோல மகனை விற்றுவரச் சொல்கிறாள் ஸெய்யினின் அம்மா. பிறந்ததிலிருந்து அழுக்கை அருந்துபவன். கந்தலை அணிபவன் ஸெய்ன். இதே லெபனான் தேசத்தில் கலீல் ஜிப்ரான் என்றொரு கவி இருந்தான். இப்படிதான் அவனும் ஒரு கவிதை எழுதினான்.
‘நான் பிறந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தன.
தொட்டிலில் இருந்தவாறு என் புதிய உலகத்தை ஆர்வத்துடன்
பார்த்துக் கொண்டிருந்தேன்..
என் அம்மா, செவிலித் தாயிடம் கேட்டாள்.
‘என் மகன் எப்படி இருக்கிறான்?’ அவள் சொன்னாள்.
‘மிகவும் நன்றாக இருக்கிறான்.
இதுவரை மூன்று முறை பாலூட்டி விட்டேன்.
இவ்வளவு மகிழ்ச்சியான ஒரு குழந்தையை
நான் இதுவரை கண்டதேயில்லை!’
எனக்குக் கோபம் வந்தது. கத்தினேன்.
‘அம்மா, அது உண்மையில்லை!
என் தொட்டில் மிகவும் கடினமாக உள்ளது.
நான் குடித்த பால் கசப்பாக இருந்தது.
அவள் மார்பகங்களின் வாசம் கூட எனக்குப் பிடிக்கவேயில்லை.
நான் மகிழ்ச்சியாய் இல்லை! நான் மிகுந்த துன்பத்தில் இருக்கிறேன்!’
ஸெய்னுக்காகவே கலீல்ஜிப்ரான் எழுதியதுபோல் இருக்கிறது. அவனது 11 வயது சகோதரி சாகர். இரண்டு கோழிகளை வாங்கிக் கொண்டு அதற்கு பதிலாக, அவளைவிட வயது முதிர்ந்த அவர்களின் முதலாளிக்கு அவளை திருமணம் செய்து தர பெற்றோர்கள் முடிவு செய்கின்றனர். ஸெய்ன் எதிர்க்கிறான். அப்பா, அம்மா இருவருமே அவனை அடித்து துரத்திவிட்டு சாகரை முதலாளி ஆசாத்தோடு அனுப்பி வைக்கிறார்கள்.
பசியால் அலைந்துதிரியும் ஸெய்ன்னுக்கு எத்தியோப்பிய அகதியான ராஹில் அடைக்கலம் தருகிறாள். தன் கைக்குழந்தையை ஸெய்னின் பாதுகாப்பில் விட்டு, வேலைக்குச் செல்கிறாள். அவளது குடியுரிமை காலவதியாவதால் போலீஸ் அவளை கைது செய்கிறது.
ராஹில் திரும்பாததால் அந்தக் கைக்குழந்தையை வளர்க்கும் பொறுப்பும் ஸெய்ன்னுக்கு சேர்கிறது. சூழலால் முரடான ஸெய்னின் அன்புள்ளம் வெளிப்படும் இடம் இது. சிறுவன் ஸெய்ன், சில நாட்கள் அந்த குழந்தைக்கு தாயாக தந்தையாக மாறுகிறான். சிறையில் பாலூறிய முலையின் வலி பொறுக்காமல் பிழிந்து ஊற்றுகிறாள் தாய் ராஹில்.
ஸெய்னால் குழந்தையை வளர்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. ஆஸ்ப்ரோ என்பவன் ஸெய்னிடம், ‘உன்னை ஸ்வீடனுக்கு அனுப்புகிறேன். பதிலாக இந்தக் குழந்தை எனக்கு தத்து கொடு’ என்கிறான். வேறு வழி தெரியாமல் ஸெய்ன் சம்மதிக்கிறான். ஆஸ்ப்ரோ, ஸெய்னை ஸ்வீடன் அனுப்ப அவனது அடையாள அட்டையை கேட்கிறான்.
தன் வீட்டுக்கு திரும்புகிறான் ஸெய்ன். வீட்டில் அப்படி எந்த அடையாள அட்டையும் இல்லை. அங்கு, தன் கருவுற்ற சகோதரி சாகர் இறந்த செய்தியை அறிகிறான். கோபத்தில் கத்தியை எடுத்து ஓடும் ஸெய்ன், ஆசாத்தை குத்திவிடுகிறான்.
திருட்டுத்தனமாக வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் ஆஸ்ப்ரோ கைது செய்யப்பட்டு, குழந்தை அதன் தாய் ராஹிலிடம் ஒப்படைக்கப்படுகிறது. மிக அலட்சியமாக நீதிபதியை எதிர்கொள்கிறான் ஸெய்ன். நீதிபதி, ‘இறுதியாக நீ உன் பெற்றோருக்கு என்ன சொல்ல விரும்புகிறாய்? ‘என்கிறார்.
‘அவர்களை இனியாவது பிள்ளை பெற்றுக் கொள்ளாமல் இருக்கச் சொல்லுங்கள்!’ என்கிறான். அப்போது அவன் அம்மா கர்ப்பிணி. சிறுவன் ஸெய்ன் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை பெறுகிறான். அவனுக்கு அடையாள அட்டை வழங்க ஃபோட்டோ எடுக்கிறார்கள். பிறப்புச் சான்று இல்லை. பள்ளி சான்று இல்லை. ரேஷன் கார்டு எதுவும் இல்லை. இதுதான் அவனது முதல் ஐடி கார்டு. போட்டோ கிராபர் சிரிக்கச் சொல்கிறான். ஸெய்னுக்கு சிரிப்பு வரவில்லை.
‘It’s your ID card, not your death certificate!’ என்கிறான் ஃபோட்டோகிராபர். ஸெய்ன் சிரிக்கிறான். நமக்கு அழுகை வருகிறது. படமும் முடிகிறது.
பசி நோயால் உலகில் தினந்தோறும் 15,000 குழந்தைகள் சாகிறார்கள். ஓர் ஆண்டில் மட்டும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 5.6 மில்லியன் பேர் மரணத்தை தழுவுகிறார்கள் (WHO, 2016). ஊட்டச்சத்து பற்றாக் குறையால் ஆண்டுதோறும் 3.1 மில்லியன் குழந்தைகள் மரணிக்கிறார்கள் (UNICEF, 2018).
ஆனால், நாம் பசித்திருக்கும் குழந்தைகளிடம், ‘பெற்ற தாய் பசித்திருந்தாலும் சான்றோர் பழிக்கும் வினையை செய்யாதே!’ எனக் கூறுகிறோம். கவிஞர்களும் நீதிமான்களும் கொட்டுகிற பேரன்பைத் தின்று குழந்தைகளால் உயிர்வாழ முடியாது.
மீண்டும் கலீல் ஜிப்ரானிடம்தான் வரவேண்டி இருக்கிறது. ‘வேர் என்பது புகழை மறுத்த பூவின் வடிவம்!’ என்கிறான் ஜிப்ரான் . ஸெய்ன் அப்படி ஒரு குழந்தை. தன்னுடைய எல்லா கிளைகளையும் இந்த சமூகம் வெட்டியபோதும், தன் வேரால் உண்ட நீரை, இன்னொரு குழந்தைக்கு தரும் அன்பின் பேருருவம்.
மீண்டும் மீண்டும் லெபனான் கவியிடம்தான் சரணடைய வேண்டியிருக்கிறது. ஸெய்ன் சிறுவயதில் ஐந்தாண்டு சிறை தண்டனையை அடைகிறான். கலீல் ஜிப்ரான் சொல்கிறார்.
மனிதனின் முக்கியத்துவம்
அவன் எதை அடைகிறான்
என்பதில் அல்ல;
எதை அடைய
அவன் முயல்கிறான்
என்பதில் தான்!
ஸெய்ன் அடைய நினைத்தது தன் சகோதரி சாகிர், ராஹிலுடைய குழந்தை, இவர்கள், அமைதியாகவும், வசதியாகவும், நிம்மதியாகவும் வாழவிரும்பிய, அன்பு நிறைந்த உலகம். ஆனால் அவன் அடைந்ததோ சிறைத்தண்டனை. இது ஸெய்னின் தவறில்லை. நம் அதிகார சமூகத்தின் தவறு!