அழிந்த உணர்ச்சிகள்!
எங்கள் கிராமத்துக்குச் சென்றிருந்தோம். ஹரப்பா, மொகஞ்சதாரோ காலத்தைச் சேர்ந்தது எங்கள் கிராமத்து வீடு. வெகுகாலமாக அது பூட்டிக்கிடந்தது. அதற்குள் வௌவால்களும், பால்ய நினைவுகளும் மட்டுமே இப்போது குடியிருக்கின்றன. சமீபத்தில் அந்த வீட்டின் ஓடுகளை மாற்றும் வேலை நடைபெற்றது.
வெளியே சென்று திரும்பும் போதெல்லாம் முற்றத்து அண்டாவில் நீரெடுத்து கால் கழுவும் அப்பா. அடுப்பங்கரையின் மண் அடுப்பில், கடலை எண்ணெய் தடவி தோசை சுடும் அம்மா.கொலுசொலி ஒலிக்க ஓடி விளையாண்ட தங்கைகள், புழக்கடை வாசலில் ராணிமுத்து படிக்கும் அக்கா. தோட்டத்தில் மலர்ந்திருந்த சாமந்தி , டிசம்பர் பூக்கள். இப்படி மனம் இறந்த காலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது.
அந்த வீட்டின் அமைப்பு , அதில் இருந்த பொருட்கள் பலவற்றை நாங்கள் வாழக்கூடிய இந்த நவீன காலம் பொருளற்றதாகிவிட்டது. பெரிய செப்பு அண்டாக்கள், குவளைகளை விளக்கி அம்மா பரணில் கவிழ்த்துவிட்டாள். நாங்கள் விதைகளை சேகரித்து வைத்திருந்த குதிர்கள் இடத்தை அடைத்துக் கிடந்தன. விளக்குத் தண்டுகளின் மீதும் , விளக்கு மாடங்களிலும் இருள் அமர்ந்திருந்தது. தாத்தாக்களும் பெரியப்பாக்களும் அமர்ந்து மாட்டு சந்தை கதைகள் பேசிய திண்ணையில் தெருப்புழுதி மண்டிக்கிடந்தது.
இப்படி பழைய ஞாபகங்களை சேகரித்து அதில் சிறிது நேரம் வாழ்ந்து பார்ப்பதை
ஏக்கம் (Nostalgia ) என்கிறோம். இன்று விதை நெல் அந்த வீட்டில் இல்லை. ஒரு காலத்தில் எங்கள் கட்டுத்தறியில் முப்பது மாடுகள் இருந்தன. மாடுகளுக்கு தண்ணீர் காட்டி பெரிய கருங்கல் தொட்டி இருந்தது. மாடுகள் நீரருந்திய கல் தோட்டிகளைக் கவிழ்த்து, துணி துவைக்கும் கற்களாகப் பயன்படுத்தினோம். மாடுகளை எங்கே பிடித்தோம் என்று பேசிய மனிதர்களும் இன்றில்லை. மாடுகள் குறித்த கதைகள் எதுவும் இல்லை. மாடு என்றால் செல்வம் எனக்கற்றுத் தந்த குறளை மறந்தோம்.
மனிதர்களும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களும் அழியும்போது அந்தக் காலம் மட்டுமல்ல , மனிதர்களுடைய உணர்வுகளும் அழிந்துவிடுகின்றன. நவீன உலகை எதிர்கொள்ள மனிதர்களுக்கு புதிய உணர்ச்சிகளை கண்டுபிடித்து தருகின்றன நம் பண்பாட்டு நிறுவனங்கள். உலகத்தின் பழைய உணர்ச்சிகள் இப்படி அழிந்து போய்விட்டன. இவ்வண்ணம் உலகில் ஏழு வகை உணர்ச்சிகள் அழிந்துபோயிருப்பதாக நவீன உளவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இவற்றுள் ஒன்று மனச்சோர்வு (melancholy) இந்த சொல்லை இப்போது நாம் பழைய பொருளில் கையாளுவதில்லை. உதாரணமாக melancholy என்கிற வார்த்தை, பழைய பிரிட்டிஷ் கவிதைகளில் வருவதுபோன்ற அர்த்தத்தில் இப்போது பயன்படுத்தப் படுவதில்லை. அச்சத்தால் ஏற்படுகிற துன்பம் எனும் பொருளில் melancholy புழக்கத்தில் இருந்தது. ஒரு காலத்தில் உடைந்துவிடக்கூடிய கண்ணாடி போன்றது இந்த உடல் என்கிற அச்சம் மனிதர்களைப் பீடித்திருந்தது. மன்னர் ஆறாவது சார்லஸ் இத்தகைய மாயத் தோற்ற உணர்வுடையவராக இருந்தார். கவனமின்மையால், உடைந்துவிடக் கூடாது என்கிற உணர்வில், தன்னுடைய ஆடைகளுடன் இரும்புக் கம்பிகளை சேர்த்து தைத்து வைத்திருந்தார் என அவர் குறிப்பிடுகிறார். Nostalgia வும் அப்படிதான். பழைய நினைவுகளை மீளப் பெறுவது, எனும் பொருளில் அதை இப்போது பயன்படுத்துகிறோம் . 18 ஆம் நூற்றாண்டில் அது ஒரு பிரிவு நோய். கடல் பயணம் செய்பவர்களுக்கு உறவுகளைப் பிரிந்த ஏக்கத்தால் ஏற்படும் துன்பம் அது.
இன்று ஏக்கம் எனும் உணர்ச்சி மனிதர்களிடம் மெல்ல அழிந்து வருகிறது.
இந்தக் கிராமத்து வீட்டில் கடைசியாய் எஞ்சியிருந்தவர்கள், பெரியம்மாவும்.
முதுமை அவளை மீண்டும் குழந்தையாக்கியிருந்தது. பெரியப்பா, பெரியம்மாவுக்கு சோறூட்டுவார். கைகளை அலம்பி முகத்தைத் துடைத்துவிடுவார். அவளை கழிப்பறைக்கு அழைத்துச்செல்வார். அவர்களையும் காலம் அழைத்துக் கொண்டது.எங்கள் சிறுநிலத்தில், சிறு குடியில், காலம், எத்தனை உணர்ச்சிகளை அழித்துவிட்டது. அளவற்ற தனிமை வீடெங்கும் நிரம்பியிருக்கிறது.
புஞ்சை நிலத்தில் எம் மூதாதைகள் ஓட்டிய கலப்பைகளை, நெல் அவித்துக் கொட்டிய கொப்பறைகளை, கால்நடைகள் நிரம்பியிருந்த கட்டுத்தரிகள், வைக்கோல் நிரப்பிய கவணைகளை, காலம் திருடிக்கொண்டுவிட்டது. போகட்டும்.
இப்படி நாங்கள் வாழ்ந்த பழைய வீட்டை, அதில் இழந்த உறவுகளை, என்றோ அவர்கள் இதழ்களிலிருந்து நழுவி விழுந்த சிரிப்பொலிகளை, அந்தி சாயும்போது சிறிய மாடங்களில் நல்ல விளக்கை ஏற்றிவைத்து, ‘அப்பனே, முருகா, எங்கள் குடும்பத்தை நல்லா வைப்பா!’ என்கிற எளிய பிரார்த்தனையை, நினைத்துப் பார்க்கும்போதெல்லாம், விழிமடை திறந்து மளுக்கென்று கண்ணீர் வருகிறதே. காலமே, இந்த ஒரு புராதான உணர்ச்சியையாவது அழிக்காமல் விட்டு வைக்கிறாயா?