சித்திரை விழாவும் புத்த பூர்ணிமாவும்
முழுநிலவு மாநாட்டில் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரது பேச்சையும் கொஞ்சம் கேட்டேன்.வழக்கம்போல் ஏமாற்றம் அளிக்கிற பேச்சு .
ராமதாஸ் அவர்களுடைய பேச்சில் மிகுந்த விரக்தி தென்பட்டது. தற்பெருமையும் மற்றமையை விளங்கிக் கொள்கிற போதாமையும் நிறைந்த பேச்சாக இருந்தது. அன்புமணி ராமதாஸின் பேச்சு அதைவிட மோசம். நவீன அரசியலுக்கு வெகுதொலைவில் கேட்கிற பொருளற்ற பேச்சு.
அவரது பேச்சின் தொடக்கமே அபத்தமாக இருந்தது. நமக்கு மட்டும்தான் ஒரு புராணம் இருக்கிறது. வேறு எந்த சமூகத்துக்கும் இப்படி புராணம் இல்லை என்கிறார். அது என்ன புராணம்? வன்னியர்கள் அக்கினியில் பிறந்தவர்கள் என்கிறார். நாம் அனைவரும் சத்திரியர் என்கிறார்.
ராமதாசும் அன்புமணியும் மருத்துவர்கள். குழந்தைகள் எப்படி பிறக்கின்றன? அவர்களுக்குத் தெரியும். ஒடுக்கப்பட்ட ஓர் இனக்குழுவை அரசியல்மயப்படுத்த வேண்டியவர்கள் இருவரும். ஆனால், அவர்களைத் தவறாக வழி நடத்துகிறார்கள்.
சித்ரா பௌர்ணமி என்பது புத்த பூர்ணிமா நாள். புத்தர் பிறந்த நாள். புத்தர் ஒரு மதத்தையோ கடவுளையோ தோற்றுவித்தவன் அல்லர். அவர் விடுதலையைப் பிரச்சாரம் செய்தவர். ‘உன் சொந்த விடுதலைக்காக விடாமுயற்சியுடன் போராடு!’ என்றவர். இந்தப் போராட்டத்துக்கு மானுடம் ஏந்த வேண்டிய ஆயுதம் அன்பு.
இன்று அன்பு சுருங்கியிருக்கிறது. ஒருவன் தன் அன்னையை, காதலியை, மகவை , தன் சாதியை, தன் மதத்தை, கடவுளை நேசிப்பது எப்படி அன்பாக முடியும்? இப்படி குறுகிய அடையாளங்கள் ஊடாக நேசிப்பதன் வழி ஒருவன் எப்படி விடுதலை அடைய முடியும்?
அன்புமணி ராமதாஸ் கற்பிக்கிற அன்பு, மற்றவர்களை வெறுப்பதிலிருந்து பிறக்கும், வளரும் அன்பு. எனது மதம், எனது மொழி, எனது சாதி என்பதன் மீதான அன்பு இயல்பாகத் தோன்றியது அல்ல. மற்றொரு மொழியை, மதத்தை, சாதியை வெறுப்பதன் வழியாக வளர்க்கப்பட்ட அன்பு இது.
சொல்லப்போனால் இது அன்பே அல்ல. இங்கு தேசப்பற்று, மதப்பற்று, சாதிப்பற்று என வளரும் எல்லாமும் வெறுப்பின் மீது பூசப்பட்ட அன்பின் சாயங்கள்.
நாம் சத்திரியர் எனக்கருதினால், நாம் சனாதனத்தை ஏற்றுக் கொள்வதாகப் பொருள். பாமக தம் கொள்கைத் தலைவர்களாக மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் போன்றோரைக் காட்டுகிறது. ஆனால் இது வெறும் பாவனை, என்பதை இவர்களது பேச்சு, மற்றும் நடவடிக்கைகள் காட்டுகின்றன. வேறுபாட்டை, ஏற்றத்தாழ்வை கற்றபிப்பதும் கடைபிடிப்பதுமே சனாதனம்.
வன்னியர்களுக்கு சனாதனத்தை கற்பிப்பதன் வாயிலாக இரண்டு விசயத்தை இவர்கள் மறைமுகமாகப் பயிற்றுவிக்கிறார்கள்.
1. சாதிப்படிநிலையில் தமக்கு கீழே இருப்பவர்களின் இருப்பை அலட்சிப்படுத்துவது.
2. மேலே இருப்பவர்கள் செலுத்தும் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வது.
இவ்விரண்டுமே அரசியல் பிழைகள்.
இத்தகைய அரசியல் இயக்கத்தால், சுற்றுச் சூழல் மாசு, போதைப்பொருள் பயன்பாடு, வேளாண் அழிவு, கனிமவளக் கொள்ளை, போன்றவற்றில் பாமக மற்றும் அன்புமணி ராமதாஸ் கொண்டிருக்கிற கரிசனம் பயனற்றதாகிவிடுகிறது.
வடமாவட்டங்களில் பொருளாதாரம், பண்பாடு, வாழ்நிலை போன்றவற்றில், தலித்துகளுக்கும் வன்னியர்களுக்கும் பெருமளவில் வித்தியாசமில்லை. தலித்துகளோடு இணைந்து சனாதன அரசியலை வென்றெடுக்க வன்னியர்களை பாமக பழக்கியிருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக பாமக வன்னியர்களுக்கு சாதிப்பெருமையை ஊட்டுகிறது.
தம்மோடு வாழும் மனிதர்களை நேசிக்க முடியாதவர்களால் ஆற்றை, மலையை, காட்டை, கடலை, சிற்றுயிரிகளை எப்படி நேசிக்க முடியும்? சமூகநீதி என்பது சனாதனத்திலிருந்து வெளியேறி சமத்துவத்துவத்தை நோக்கி முன்னேறுவது. இட ஒதுக்கீடு போன்றவை இதற்காக உருவாக்கப்பட்டவை.
அன்புமணியால் கட்சிக்குள் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வருவதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ராமதாசால் தன் குடும்பத்தைத் தாண்டி சிந்திக்க முடியவில்லை. இவர்களால் எப்படி சமுகநீதி, சமத்துவத்தை சிந்திக்க முடியும். வன்னிய இளைஞர்களுக்கு சொல்வது இதுதான். நீங்கள் உங்கள் தாயின் பிரசவ வலியால் பிறந்தவர்கள். அக்னியில் பிறந்தவர்கள் இல்லை.
ஐம்பூதங்களுள் ஒன்று அக்கினி. தாய்க் கோழியின் அடிவயிற்றில் அக்னியின் கதகதப்பு இருக்கிறது. அதுதான் முட்டைக்குள்ளிருக்கும் கோழிக் குஞ்சை வெளியே கொண்டுவருகிறது.
இதன்பொருட்டு அந்தக் கோழிக்குஞ்சு தான் அக்னியிலிருந்து பிறந்ததாகப் பெருமை அடித்துக் கொள்வதில்லை. சூரியன் என்கிற மாபெரும் அக்னிப்பந்து சிதறி, குளிர்ந்ததுதான் (நெபுலா) இப்பூமி.
மனித உடல் பஞ்சபூதம். எல்லா மனதருக்குள்ளும் அக்னி இருக்கிறது.
ஒருவருடைய இருப்பை, மாண்பை, விடுதலையை, சுரமரியாதையை, உரசிப் பார்த்தல் மனிதர்களின் கண்களில் இருந்து அக்னி பிறக்கும்.
அன்பான வன்னிய இளைஞர்களே, நீங்கள் அன்புமணியைப்போல மருத்துவராகுங்கள். எம்.பி ஆகுங்கள். அவர்களுடைய பிள்ளைகளைப்போல உறவினர்களைப்போல பொறியாளர்களாக, பட்டதாரிகளாக, கலைஞர்களாக, ஏன் பணக்காரர்களாகக்கூட ஆகுங்கள்.
தயவு செய்து சத்திரியர்களாக மட்டும் இருக்காதீர்கள். மனிதர்களாக இந்த பிரபஞ்சத்தின் பெருமைகளை அனுபவிக்க பழகுங்கள்.