நம்பிக்கை
அப்பா ஒரு மரத்தை
மழையாக மாற்றினார்
வெய்யிலை கனியாக மாற்றினார்
ஒரு மீனை கடலாக மாற்றினார்
என்னிடமிருந்த கோபத்தைக்கூட
ஒரு ராப் பாடலாக மாற்றினார்
அப்பா ஒன்றும் மந்திரவாதியில்லை
ஆனாலும் என் வாழ்வை
ஒரு தேன்கூடாகவும்
இதயத்தை ஒரு பூங்கொத்தாகவும் மாற்றினார்
இன்னும் என்ன சாகசம் செய்வாரென
காத்திருந்தபோது
ஒரு நாள் தன்னைப்
பிடி சாம்பலாக மாற்றி
உள்ளங்கையில் தந்தார்
அவர் பிள்ளையல்லவா நான்
என்னை ஒரு கண்ணீர்
துளியாக மாற்றினேன்
பிறகு அந்தக் கண்ணீர் துளியை
மணிமுத்தாறாக மாற்றினேன்
எங்களூர் விவசாயிகள் சேர்ந்து
மணிமுத்தாற்றை
நெல்மணிகளாக மாற்றினார்கள்
இப்போது நம்மால்
எதையும் மாற்றிவிட முடியும்
ஒரு காயத்தை நம்பிக்கையாக
ஒரு சாதாரணத்தை அற்புதமாகவெல்லாம்.