பூனை அனைத்தும் உண்ணும் – பின்நவீனத்துவக் கதையாடல்
கடந்த ஒரு மாத காலமாக சென்னையில் தங்கி இருந்தவர். இன்று தாயகம் புறப்படுகிறார். விடைபெறும் வண்ணம் சம்பிரதாயமாக சிலவற்றைப் பேசினார். ஞாபகம் வந்தவர்போல ஹஸீன் தொகுப்பை முழுமையாக வாசித்து விட்டீர்களா? கேட்டார். தொகுப்பில் 11 சிறுகதைகள் மற்றும் ஒரு குறுநாவல் உள்ளன. அனைத்தும் வாசித்துவிட்டேனே! என்றேன்.
அவர் ஹஸீன் பற்றி கேட்டதும். மீண்டும் ஒரு முறை இரவு ஹஸீன் கதைகளைப் புரட்டிக் கொண்டிருந்தேன். சமகால தமிழ் இலக்கியத்தை “நவீன இலக்கியம்” எனும் பிரயோகத்திலேயை,
நாம் இன்னும் அழைக்கிறோம். உலகம் நவீனத்தைக் கடந்து விட்டது. மதச்சார்பின்மை, தொழில் நுட்ப வளர்ச்சி, சனநாயகம், பெண் விடுதலை, சர்வதேசத்தன்மை, புதிய கலை இலக்கிய வடிவங்கள், சமத்துவம் போன்றவை நவீனத்துவத்தின் விளைவுகள்.
தொழில் நுட்ப வளர்ச்சி உலகை ஒரு குடைக்கும் கீழ் கொண்டுவந்துவிட்டதாக நவீனத்துவம் நம்பியது. உலகாளாவிய பொதுத்தன்மை, அல்லது சாராம்சம் போன்ற பண்புகளை நவீத்துவவாதிகள் நம்பினர். இவை அனைத்தும் 19 ஆம் நூற்றாண்டில் நடந்த விசயங்கள். ஆனால் 20, 21 ஆம் நூற்றாண்டில் சிந்தனைமுறை வளர்ந்தது. உலகளாவியத் தன்மை மீது அவநம்பிக்கை ஏற்பட்டது. நவீனத்துவத்தில் ஒனறை ‘சரி’யெனக்கூறி மற்றவற்றை ‘தவறு’ என நிராகரிக்கிற போக்கு இருந்தது. நவீனத்துவம் தவறு என நிராகரித்தவற்றைப் பரீலிக்க வேண்டும்.
இத்தகு திசையில் சிந்திக்கப்பட்டவை பின் நவீனத்துவமாக வளர்ந்தது. ஒன்றை ஏற்பதன் மூலம் மற்றவற்றை புறக்கணிக்கிற நிலையில் பன்மைத்துவம் அழிவதாகப் பின் நவீனத்துவவாதிகள் கருதினர்.
உலகம், வரலாறு, போன்றவை ஏற்றுக் கொள்வதாக ஒன்றை நிறுவ முயல்கிறபோது மையமும் விளிம்புகளும் உருவாகின்றன. இப்படி மைய உலகால், வரலாற்றால் புறக்கணிக்கப்பட்டவர்களை ஒடுக்கப்பட்டவர்கள் விளிம்பு நிலையினர் எனப் பின் நவீனத்துவம் கருதியது. இப்படிதான் ஒற்றைத் தன்மைக்கு மாற்றாக பன்மையைப் பேசியது பின் நவீனத்துவம்.
மனித வாழ்வின் பொருளென்ன? தேடியது நவீனத்துவம். தியாகம், இரக்கம், கருணை இப்படி பலவற்றை அதற்கு விடையாகக் கண்டுபிடித்தது. நான் என்பது என்ன? பிரபஞ்சம் என்பது என்ன? இவ்விரண்டுக்குமிடையே மொழி இடைவெளியை உருவாக்குகிறது. என இருதுதியலில்வாதிகள் கருதியபோது அந்நியமாதல் நிகழ்ந்தது. இல்லை, மனித உணர்வு பிரபஞ்சம் இரண்டுமே மொழியால் ஆனவை என இருத்தலியலின் தொடர்ச்சியாக வளர்ந்தது பின் நவீனத்துவம்.
இத்தகைய வளர்ச்சியின் ஒரு கண்ணிதான் ஹஸீன் ஆதமின் ‘பூனை அனைத்தும் உண்ணும்’ தொகுப்பின் கதைகள். இக்கதைகள் மனிதர்களை நல்லவர் vs கெட்டவர், தியாகி vs துரோகி, போராளி vs சம்சாரி என அடையாளப்படுத்தவோ தீர்ப்பிடவோ முயற்சி செய்யவில்லை. மனித வாழ்வை அதன் போக்கில் பின் தொடர்பவை இக்கதைகள் . அதன் போக்கில் என்றால், உலகில் எல்லா மனிதர்களுக்கும் ஒரே வாழ்வு வாய்க்கவில்லை என்பதையும்
புரிந்து கொள்ள வேண்டும்.
இவை போரும் போர் உருவாக்கிய மதிப்பீடுகளும் நிரம்பிய நிலத்திலிருந்து எழுதப்பட்ட கதைகள். உதாரணமாக “யாரும் உறங்கவில்லை’ என்று ஒரு கதை. இலங்கையில் நிகழ்ந்த இன அழிப்புக்கு எதிராக பல குழுக்கள் போராடின. ஒரு போராட்டத்தில் எல்லோரும் சேர்ந்து ஒரு குழுவின் தலைமைக்குங் கீழ் போராட வேண்டும் என்பது உலகம் எதிர்பார்க்கிற, வரலாறு உருவாக்கியிருக்கிற பார்வை.
இருப்பினும், எல்லா நாடுகளிலும் போராளிகள் ஒரே குழுவாகப் போராடியதில்லை. இந்திய சுதந்திரப் போராட்டம் எழுதப்படும்போது காந்தி, காங்கிரஸ் போன்றவற்றை வரலாறு மையப்படுத்துகிறது. ஆனால் ஹஸீன் கதைகள் இலங்கை தமிழர்களுக்குள் இருந்த பன்முகத்தன்மையை, அதற்குள்ளிருந்த அடையாளங்களை, புவியல் கூறுகளைப் பேசுபவையாக இருக்கின்றன. ஈழ வரலாறு புறக்கணித்த ஓர் இனக்குழுவுக்குள் இருந்த விடுதலைத் தணலை வைத்திருக்கிற கதை இது.
லத்தீன் அமெரிக்க கதைகளில் தென்படுகிற பின் காலனிய குணம் கொண்டவை ஹஸீன் கதைகள் . அடக்குமுறைக்கு எதிர்ப்பு, அடையாளம் , போரால் சிதைவுற்ற உளவியல் சிக்கல்கள், புலம் பெயர் இன்னல்கள், குடியேற்ற அரசியல் என லத்தீன் அமெரிக்க கருப்பொருளோடு நெருங்கிய உள்ளடக்கத் தொடர்புடையவை இக்கதைகள். எல்லாவற்றுக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. அது அதற்கான
இடத்தை அளிக்க வேண்டியிருக்கிறது. மௌனிக்கப்பட்ட பல விசயங்களில் இருக்கும் முக்கியத்துவத்தை வெளிக்கொணரும் பின் நவீனத்துவப் பண்புடையதாக , ‘யாரும் உறங்கவில்லை’ கதை திகழ்கிறது.
பொதுமைப்படுத்தும் வேலையைச் செய்கிற நவீனத்துவம், அதன் உள்ளே மறைந்திருக்கும் வேற்றுமையையும் சொந்த அடையாளத்தையும் கொண்ட சிறுபான்மையை வெளிக்காட்ட மறந்துவிடுகிறது.
இந்தியாவில் கிலாபாத், ஒத்துழையாமை இயக்கம் நடத்திய காதிர் முஹைத்தீன் மரைக்காயருக்கு சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இடமகல்லை. அந்நியத் துணி எரிப்பு, ஒத்துழையாமை இயக்கம் கண்ட தென்காசி மி.இ. முஹம்மது அப்துல் காதர் சாஹிப் போன்றோருக்கு இடமில்லை.
வில்லுப்பாட்டு மூலம் தேசப் பற்றை வளர்த்த தாராபுரம் பி.என். அப்துல் கபீருக்கு சுதந்திரப்போராட்ட வரலாற்றில் இடம் இல்லை. ஆங்கிலேயர்களை எதிர்த்து முழங்கிய நவாப் சிராஜுத் தௌலா, பகத்சிங் படத்தை விற்றதாககா கைது செய்யப்பட்ட சென்னை நூர்மல், இவர்களைல்லாம் பொதுமைப்படுத்தப் படுத்தலால் அடையாளம் இழந்தவர்கள்.
சிங்கள இனவெறி அரசை எதிர்த்துப் போராடியதில் தலித்துகள், இசுலாமியர்களும் இருந்தனர். ஆனால் சமகால வரலாற்றின் உரையாடலில் இவர்கள் மௌனப்படுத்தப்பட்டனர். இந்தக் கதை இல்லாவிட்டால் இத்தகு சமகாலத்தைய கனத்த மௌனம் எப்படி கலைந்திருக்கும்?
கிட்டத்தட்ட இந்தியா/தமிழ்நாட்டைப் போலத்தான் இலங்கையும். அங்கும் இசுலாமியர்கள் வன்முறைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும் தமிழ் இனப்படுகொலை எனும் பெயரில் அவர்கள் அனுபவித்த துன்பங்கள் மறைக்கப்பட்டிருந்தன.
இந்திய முஸ்லீம்கள் இந்துத்துவா என்கிற ஒரு எதிரியைத்தான் கொண்டிருந்தார்கள். இலங்கையில் கூடுதலாக பௌத்த சிங்கள ஃபாஸிசத்தையும் கூடுதலாக எதிர்கொண்டார்கள்.
பூனை அனைத்தும் உண்ணும் குறுநாவலும் இதைதான் பேசுகிறது.
நவீனத்துவத்துக்கும் பின் நவீனத்துவத்துக்கும் இடையே ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது. நவீனத்துவம் நல்லது என ஒன்றை நிறுவி , மற்றமையைக் கெட்டதாகக் காட்டுகிறது எனப் பார்த்தோம். பின்நவீனத்துவம் அப்படி கருதவில்லை. கெட்டது என சுட்டப்பட்டதை பரிவோடு அணுகியது, அது ஏன் கெட்டதாக மாறியது? என ஆராய்கிறது.
பூனை அனைத்தும் உண்ணும், மனிதர்கள் இயங்குவதற்கு பின்னாலிருக்கும் சந்தர்ப்பத்தையும் அந்த சந்தர்ப்பத்தை தமக்கு வாகாக மாற்றுவதற்கு மனிதர்கள் போராடுவதையும் மெல்லிய தொனியில் பேசுகிற குறுநாவல்.
நிஸ்தார் என்கிற இளைஞனுக்கும் உபைத் எனும் சிறுபத்திரிக்கை ஆசிரியருக்குமான உறவு, இணையாக இலங்கை அரசியல், மற்றும் இலக்கியப்போக்குகள், கூடவே சிபானி எனும் மாணவிக்கும் நிஸ்தருக்கும் மலர்ந்தும் மலராத காதல், இவற்றை விவரிக்கிற புனைவு இது. சுயாதீனமான கதை சொல்லும் போக்கிலிருந்து விடுபட்டு, காலம், சமூகம், வரலாறு, பண்பாடு போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு மொழியிலிருந்து விரிகிறது இக்குறுநாவல்.
காதலை எழுத ஒரு அற்புத மொழியை வைத்திருக்கிறார் ஹஸீன். ‘ஆண் சிறகுப் படபடப்பு’ , ‘ எனது விழியில் அலையும் உனது கூந்தல்’ இவ்விரு கதைகளும் ஒரே கதையின் தொடர்ச்சியாக அமைந்தவைதான். எல்லா மனிதர்களிடமும் காதலிப்பதைத் தவிர வேறு வேலை இல்லை என உணரும் ஒரு பருவம் வரும். காதலின் அவஸ்தைகளும் நறுமணங்களும் நிறைந்த பருவமாக அது இருக்கும். எப்படி? எப்போது? எங்கிருந்து? எனத் தெரியமால் ஓர் ஊற்றைப்போல,
ஓர் எரிமலைக் குழம்பைப்போல, வெளிப்படுகிற காதல் அது.
அது, உயிர்வாழ்வதைப்போல துன்பமானதாக, சாவதைப்போல இனிமையானதாக இருக்கும்.
பூவின் பிரகாசத்தை உள்ளுக்குள் வைத்திருக்கும் ஒரு கொடிபோல உடம்பைத் தணலாக்கும் கதை . இந்தக்கதை சொல்லி, சீதா, கார்த்தி , இன்னும் நீங்கள், நான் எல்லோரையும் தழுவிக்கொண்டு நகரும் இரு நதிகளாக இருக்கும் கதைகளிவை.
காதலை எப்படி சொல்வது?
கடவுள் இல்லாததால் உருவாக்கப்பட்ட சுதந்திரம் அது. காதல் குறித்து பெரிய புனிதம் எதையும் திணிக்காத கதைகள் இவை. அன்பு நம்மை முழுமையாக்கும் என நம்புகிறோம். இதன் காரணமாக நமது முகாமையான உணர்வையும் தனித்துவத்தையும் இழந்து, நம் இயல்பையே மாற்றிக் கொள்கிறோம். நமது விதியின் மீதான கட்டுப்பாட்டை இழக்கிறோம். பிறகு ஒரு நாள் காதல் எனும் தெளிவின்மையின் இருப்பை அனுபவிக்கத் தொடங்குகிறோம்.
இதை அழகாக வெளிப்படுத்துகிற கதைகளிவை.
செங்கவெள்ளை, மனித மனசுக்குள் தொடரும் வேட்டைச் சமூகத்தின் நினைவெழுச்சிகளைப் பகிரும் கதை. மனிதர்களுக்கும் இயற்கைக்குமான உறவைப் போகிற போக்கில் சொல்லி, உணவை உற்பத்தி செய்வதற்கும் முந்திய, பகிர்ந்துண்ணும் ஆதிப்பொதுவுடமைச் சமூகத்தை சிந்திக்கிற கதை.
நவீனத்துவம் உருவாக்கிய
பொதுவான மனநிலையைக் கலைக்கிற இக்கதைகள் வாசக இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான வெளியை வைத்திருப்பவை.
ஆங்கிலத்தில் Sublimation என்பார்கள். இதைப் பதங்கமாதல் எனலாம்.
பாலியலில் பதங்கமாதல் என்பது, பாலியல் ஆற்றல்களை ஆன்மீக நோக்கங்களுக்கு திருப்பிவிடுவதாக ஓஷோ போன்றோர் நம்பினர் .
மன எழுச்சிகள் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவை. அவையே ஒருவரை கதைகள், கவிதைகள் எழுத வைக்கின்றன என நான் நம்புகிறேன்.
நமது விரக்தியையும் கோபத்தையும் அழகான கதைகளாக மாற்றுகிறார் ஹஸீன். ஜார்ஜ் லூயிஸ் ஃபோர்ஹே, காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் போன்றோர் பிரதிகளில் இதுவரை அனுபவித்தறியாத ஒரு புது உணர்வை அனுபவித்தோம் அல்லவா, அந்த உணர்வை நமக்குள் ஹஸினாலும் எழுப்ப முடிகிறது.