மிஸ்டர் எக்ஸும் மாயன் காலண்டரும்
மிஸ்டர் எக்ஸ் வீட்டில் ஒரு ரகசிய அறையை வைத்திருந்தார். வெஸ்டெர்ன் டாய்லெட்டை லேசாக சிறிது அசைத்தாரென்றால், பாதாள அறைக்கு செல்லும் வழி திறக்கும்.
உலகம் கி.மு ,கி.பி காலண்டரை கிழித்துக்கொண்டிருந்தபோது எக்ஸ் மாயன் காலண்டரை கிழித்துக் கொண்டிருந்தார்.
1,44,000 நாட்களைக் கொண்ட காலண்டர். தன் ரகசிய அறைக்கு சென்றவர் காலண்டரைப் பார்த்தார். அதில் (ஜூன் 21)ஒரே ஒரு தாள் காற்றில் படபடத்தபடி இருந்தது. உலகம் இன்றோடு அழிந்துவிடுமா? அவருக்கு, கடைசித் தாளை கிழிப்பதா? வேண்டாமா? குழப்பம்.
மெக்சிகோவை பூர்வீகமாக கொண்ட மாயன் இனத்தவர் தயாரித்த காலண்டர். வானியல் சாஸ்திரம், ஜோதிடத்தில் கொடிகட்டிப் பறந்தவர்கள் மாயன்கள். மாயன் காலண்டரில் 5,126 ஆண்டுகள் இருந்தன. இது கடைசி ஆண்டா?
எரிமலை சீற்றம், தீவிரவாதிகள் தாக்குதல், விண்வெளிப் பாறை தாக்குதல், சூரிய காந்தப்புயல், கோள்கள் மோதல். ஏதோ ஒன்றால் பூமி அழியும். சொல்லியிருந்தார்கள். வைரஸ் அழிக்குமென்று சொல்லவில்லையே. எக்ஸ் மரணத்தை தண்டனை என்றே நம்பினார். ஆனால் மிஸஸ் எக்ஸோ அதை ஒரு தொழில் நுட்பக் கோளாறு! என்பாள்.
மிஸ்டர் எக்ஸ் வாழ்க்கையில் நிறைய வில்லன்கள். அவர்கள் எல்லோரையும் கொல்ல அமெரிக்காவிடம் ஆயுதம் வாங்கினால் கூட காணாது.
தன் பாதாள அறையில் இருந்து எக்ஸ் பயங்கரமாகச் சிரித்தார். ஆனால் அது மிஸஸ் எக்ஸுக்கு கேட்காது.
சினிமாவைப்போல அவர் மனசாட்சி முன்னால் வந்து நின்றது. நீயும்தானே சாவாய்! என்றது . ஒரு கணம் திகைத்தார். நகைச்சுவை நடிகர் வூடி ஆலன் சொன்னதுதான் ஞாபகம் வந்தது.
‘எனக்கு மரணத்தைப் பற்றிய பயம் இல்லை, அது நிகழும்போது அங்கிருக்கவும் விரும்பவில்லை.’ சொல்லியிருந்தார் ஆலன்.
மற்றவர்கள் மரணம் வரும்போது, அவர்கள் சொர்க்கத்திலோ, நரகத்திலோ, மார்ச்சுவரியிலோ, கண்ணம்மா பேட்டை சுடுகாட்டிலோ இருப்பார்கள். ஆனால் எக்ஸ் அப்படியில்லை. க.பே. சு.காட்டிலும் ஒரு ரகசிய வழி வைத்திருக்கிறார்.
இந்த பால்வழி அண்டத்தின் ஏதாவது ஒரு கேலக்ஸிக்கு, அவரை தோழர்கள் அழைத்துச் சென்றுவிடுவார்கள்.
மிஸ்டர் எக்ஸ் டாய்லெட்டிலிருந்து வெளியே வந்தார். முகம் களைப்பாக இருந்தது. ‘வயிற்றுப் போக்கா?’ கேட்டார் மிஸஸ் எக்ஸ். ‘நான் சொல்லப்போவதை கேட்டால், உனக்குதான் dysentery வரும்!’ என்றார்.
எக்ஸைப் பற்றி அவளுக்குத் தெரியும். சிலநாட்களுக்கு முன்பு Area 51 ஐ முற்றுகையிடப் போவதாகக் கூறியிருந்தார். Storm Area 51, They Can’t Stop All of U’ என்கிற ஃபேஸ் புக் ஈவண்ட் அது.
அமெரிக்க நெவாடா மாகாணத்தில் உள்ளது ஹோமி விமான நிலையம். அதைதான் ஏரியா 51என்றார் எக்ஸ். ‘பத்து லட்சம் பேர் தயாராக இருக்கிறோம். அமெரிக்காவின் ரகசிய முகாமை உலகின் முன் திறந்து காட்டப்போகிறோம்!’ என்றார் சாகச உணர்வோடு!
டாக்டர் ஹவுஸ் எக்ஸ் கண்களில் லைட் அடித்து பார்த்தார்.
மிஸஸ் எக்ஸ் டாக்டர் முன்பு பதற்றத்தோடு அமர்ந்திருந்தார். ‘கவலைப்பட வேண்டாம். உலகத்தில் எப்படி இரவு, பகல் ஏற்படுகிறது?’
‘சம்மந்தமில்லாமல் கேட்கிறாரே?டாக்டர் !’ குழம்பினாள். ‘பூமி சுழல்வதால்.’ கலவரத்தோடு பதில் சொன்னாள்.
‘ம்ம், மிஸ்டர் எக்ஸ் இரவு பகல் ஒரு சதித் திட்டம் என்பார். அவர் பூமியை தட்டையென்றே இன்னும் நம்புகிறார். டிசம்பர் வந்தால் காலண்டர் முடிந்துவிடுமா? மாயன் காலண்டரை அப்படிதான் நம்புகிறார்.
சிலர் மார்க்ஸ் தியரியை நம்புகிறார்கள். சிலருக்கு ஐன்ஸ்ட்டின் தியரி.மிஸ்டர் எக்ஸுக்கு conspiracy தியரி மீது நம்பிக்கை.
ஆம், மிஸ்டர் எக்ஸ் ஒரு conspiracy theorist!’ டாக்டர் சொல்ல சொல்ல மிஸஸ் எக்ஸுக்கு மயக்கம் வந்தது.
‘இப்போ உள்ளே எட்டிப் பாருங்கள்!’ மிஸஸ் எக்ஸ் எட்டிப் பார்த்தாள்.
‘டாக்டர் எதிரில் யாருமே இல்லை. ஆனால், யாருடனோ பேசுகிறார்.’
‘யெஸ், அவர் ஏலியன்கள் கூட பேசுகிறார். உலகம் அழியப் போகிறதல்லவா? செவ்வாய் கிரகத்துக்கு விசா எடுப்பது குறித்து அவர்கள் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்!’