மேன்மையைக் கண்டடைவது
Pulp Fiction
English | 1994 | Quentin Tarantino
நமக்கு இந்த வாழ்வு சலிப்பூட்டுகிறது. ஏதாவது விறுவிறுப்பான திரைப்படத்தில் ஒரு பாத்திரமாக நுழைந்து துப்பாக்கியால் பத்து வில்லன்களைச் சுட்டுத்தள்ள ஆசைப்படுகிறோம். நமக்கு வாழ்க்கையை விட கதைகளில் வாழ்வது பிடித்திருக்கிறது. சினிமாவில், சீரியலில், பருவ இதழ்களில் இப்படி எந்தக் கதையிலாவது நமக்கு ஒரு பதுங்குக்குழி இருக்குமா எனத் தேடுகிறோம்.
அப்படி கதையைத் தேடுபவர்களுக்கு க்வென்டின் டாரன்டினோவின் பல்ப் ஃபிக்ஷன் போன்ற படங்கள் ஏமாற்றத்தை தருவதாகக்கூட இருக்கலாம். வழக்கமான கதை சொல்லும் பாணியிலிருந்து க்வென்டின் டாரன்டினோ போன்றவர்கள் விலக வேண்டியிருக்கிறது ஏன்? என்பதை யோசிக்க வேண்டும்.
நாம் எல்லோருமே நிலவுகிற யதார்த்த உலகிலிருந்து விலக விரும்புகிறோம். ஏனென்றால் நிலவுகிற யதார்த்தம் அனைவரும் சமத்துவத்தோடும், அமைதியோடும் வாழ உகந்ததாக இல்லை என்பதால்தான். துரதிர்ஷ்டவசமாக புனைவிலும் அதே யதார்த்த கதையாடலையே விரும்புகிறோம். உலகப்போர்கள் நம் யதார்த்தங்களின் புனிதத்தை கலைத்துவிட்டது. மனிதர்கள் மடிந்து விழுந்தபோது அவர்களை உயிரெழுப்ப, கடைசிவரை எந்த தேவனும் வரவில்லை. தந்தையற்றவர்கள், பிள்ளையற்றவர்கள், உறுப்பற்றவர்களென நம் யதார்த்தம் குரூரமாக கலைந்து கிடந்தது.
பறவைகளைவிடவும் வேகமாக பறக்கும் போர்விமானங்களை, கடவுளை விடவும் அதிகம் சக்திவாய்ந்த அணுகுண்டுகளை உலகம் சந்தித்தது. வெறும் சத்தியத்தை வைத்துக்கொண்டு ஜெயிக்கமுடியாது! என்கிற புதிய உண்மையை மனிதர்கள் கண்டுபிடித்தார்கள். அப்படிதான் இந்த யதார்த்தம் உருவாக்கிய பேதங்களுக்கு பழகிய, சமத்துவமற்ற நீதிகளுக்குப் பழகிய, மன அடுக்குகளை, புதிய கதைசொல்லலின் வழி கலைத்துப்போட கலைஞர்கள் முயன்றார்கள். அவர்களில் முக்கியமானவர் க்வென்டின் டாரன்டினோ.
பல்ப் ஃபிக்ஷன் ஒரு கதையற்ற Neo Noir வகைப் படைப்பு. சம்பவங்களைக் கலைத்துப்போட்டு, முடிந்தால் ஒரு கதையை உருவாக்கிக் கொள்ளுங்கள் என்கிறார் டாரண்டினோ! இப்போது பல்ப் ஃபிக்ஷனை நீங்கள் பார்க்கவும் வேண்டும். ஒரு சம்பிரதாயமான கதையை நீங்கள் கட்டியெழுப்பவும் வேண்டும். டாரண்டினோ பார்வையாளரிடமும் வேலை வாங்குகிறார். நீங்கள் இப்போது ஒரு Passive Listener கிடையாது.
கதையை உருவாக்கும் முயற்சியில் ஒரு தொடர்ச்சியை தேடுகிறீர்கள். சற்றே சோர்வடைகிறீர்கள்! பிறந்த குழந்தை ஒன்றுக்கு கேன்சர். இந்த குழந்தை என்ன பாவம் செய்தது? இந்தக் குழந்தையின் கதைக்கு அதன் குடும்பத்துக்குள் தேடினால் தொடர்ச்சி,வளர்ச்சி, முடிவு கிடைத்துவிடுமா? அதன் தாய் குடித்த தண்ணீரில் தாமிரம் கலந்திருக்கலாம். அவள் குடி நீரில் எப்படி தாமிரம் வந்தது. தாமிர ஆலை அவள் நகருக்கு எப்படி வந்தது? இப்படி தேடினால், இதற்குப் பின்னால், இதன் வில்லன் எங்கோ கண்ணுக்குத் தெரியாத அமெரிக்காவில் இருக்கிறான். இதனால்தான் நம் கதைகளின் தொடக்கம் வளர்ச்சி முடிவை கலைத்துப்போட வேண்டியிருக்கிறது. பல்ப் ஃபிக்ஷன் நான்கு அல்லது ஐந்து கதைகளைக் கொண்டிருக்கிறது.
மார்ஸெல்லஸ் (விங் ரேமஸ்) என்கிற முதலாளி பணித்ததற்காக, ஒரு சூட்கேஸைத் தேடும் வேலையை, கூலிக்கு கொலை புரியும் ஜூல்ஸ் வின்ஸ்ஃபீல்ட் (சாமுவேல் எல்.ஜாக்சன்) மற்றும் வின்சன்ட் வேகா (ஜான் ட்ரவோல்டா) இருவரும் செய்வது ஒரு கதை.
உணவு விடுதியை கொள்ளையிட முயலும் பம்ப்கின் (டிம் ராத்) மற்றும் ஹனி பன்னி (அமன்டா ப்ளம்மர்) இணையின் கதை ஒன்றும் இருக்கிறது. குத்துச்சண்டையில் தோற்பதற்காக மார்ஸெல்லஸிடம் காசு வாங்கிக்கொண்டு, அவ்வாறு செய்யாமல் எதிரியை கொன்றுவிட்டு காதலியோடு தப்பியோடும் குத்துச்சண்டை வீரன் புட்ச் கூலிட்ஜின் (ப்ரூஸ் வில்லீஸ்) கதை மற்றொன்று.
மார்ஸெல்லஸ் மனைவியான மியா வால்லஸ் (உமா துர்மன்) வின்சென்ட் வைத்திருக்கும் அபினை, கொகெய்ன் என்றெண்ணி எடுத்துக்கொள்வதால், அவள் ஆபத்தான நிலைக்கு சென்று திரும்பும் கதையொன்று. ஒரே கதையின் வெவ்வேறு சம்பவங்களை தொடர்ச்சியின்றி காட்சிப்படுத்துகிறார் டாரண்டினோ.
அமெரிக்க விளிம்புநிலை சமூகத்தின் கருப்பு வாழ்க்கையை காட்டும் படம் என்பதால் நொடிக்கு ஒரு கெட்டவார்த்தைகள். Motherfucker என்கிற சொல்லை இந்தப்படத்தின் எல்லா பாத்திரங்களும் குறைந்தது 100 முறையாவது சொல்கின்றன. சமத்துவம் நிலவாத சமூகத்தை நீதிகளால் போர்த்தி பாதுகாக்க முடியாது என்பதை மீண்டும் மீண்டும் தெறிக்கும் ரத்தங்கள் உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. தத்துவ விசாரமும், கடவுள் மீது நம்பிக்கையும் கொண்ட குற்றப் பாத்திரம் ஒன்று, ஒருவனைக் கொல்லும் முன்பாக வேதாகமத்தின் நீதி வசனத்தை சொல்கிறது. இறுதியில் அதே வசனத்தை மெய் தேடாலாக்கி குற்றத் செயலிலிருந்து விலகவும் விரும்புகிறது.
புட்ச்சை கொல்ல தேடுபவன்தான் மார்ஸெல்லஸ். ஆனாலும் அவன் ஓரினச் சேர்க்கையாளர்களிடம் சிக்கிக்கொள்ள, அவர்களிடமிருந்து மார்ஸெல்லஸை காப்பாற்றுகிறான் புட்ச். சில வேளை கற்பனையை விடவும் யதார்த்தம் நம்ப முடியாததாக இருக்கிறது. அப்படிப்பட்ட மாற்று யதார்த்தங்களை வெகு இயல்பாக டாரண்டினோ காட்சிப்படுத்துகிறார்.
அமெரிக்க பண்பாட்டை Parody செய்யும் வசனங்கள் அத்தனையும் Black Humor வகை. அபினை அருந்தி சாகக்கிடக்கும் மியாவுக்கு இதயத்தில் வேகமாக ஊசியை குத்தச் சொல்கிறான் லான்சென். ‘அப்படி குத்தினால் என்ன நடக்கும்? ‘வின்சன்ட் கேட்பான். அதைப் பார்க்க நானும் ஆவலாக இருப்பேன்!’ என்பான் லான்சென். வன்முறையையும் அபத்த அழகியலையும் கொண்ட இப்படம் வெளிவந்தபோது, ‘யதார்த்தவாதம் அவமதிக்கப்பட்டதாக’, விமர்சகர்கள் எழுதினார்கள். ஆனாலும் கேன்ஸ், ஆஸ்கார் பெற்றார் டாரண்டினோ. நேர்கொண்டு சூழ்ந்திருக்கும் இருளை பார்க்கும் துணிவு வேண்டும். காயத்தை மலர் என்று கொண்டாட முடியாது. கூச்சப்படுவதால் தாழ்மைமையை குணப்படுத்தவும் முடியாது. மேன்மையை கண்டடையவும் முடியாது! என்ற டொராண்டினாவை உலகம் கொண்டாடியது.