ருசி
இந்தப் பறவைக்கு வேகமாகப்
பறக்க உதவும் தன் சிறகுகள் குறித்து எவ்விதப் பெருமிதமும் இருந்ததில்லை
பழத்தின் கடினமான விதை ஓடுகளை உடைக்கும் அதன் அலகின் வலிமையை ஒருபோதும் வியந்ததில்லை
அந்தரத்தில் மிதக்கும் கனமற்ற உடலின் கச்சிதத் தன்மைக்காக
அது கர்வப்பட்டதுமில்லை
காலை அதை ஒரு வேட்டைக்காரன் சுட்டபோது அதற்கு வலித்தது
ஆனாலும் அதற்கு
கவலைப்படத் தெரியவில்லை
இவையெல்லாமும்கூட
காரணமாக இருக்கலாம்
என் உணவுத்தட்டில் இருக்கும்
இந்தப் பறவையின் மாம்சம்
ருசியாக இருப்பதற்கு.