வாழ்வதும்.. இருப்பதும்..
எங்கள் பால்யத்தை என்னால் மறக்கமுடியவில்லை. எதனால்? சிறு பிள்ளைகளாக நாங்கள் ஓடியாடி மகிழ்ந்த எம் இல்லங்களில் காதல் பூத்திருந்தது.
தாயும் தந்தையும் காதலால் நடத்திய இல்லறத்தில், நாங்கள் எங்களை, பாதுகாப்பாக உணர்ந்தோம்.
நாங்கள் காதலை சினிமாவில் பார்த்தவர்கள் அல்லர். எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்த இல்லத்தில் காதலை உணர்ந்து வளர்ந்தவர்கள்.
வயது ஆக ஆக எங்கள் பெற்றோர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த பிரியத்தைப் பார்த்து காதலைக் கற்றோம்.
எந்நேரமானாலும் பசிகிடந்து, வீடடைந்தார் எந்தை. அம்மா ஆக்கி வைத்த சோறு வீணாகிவிடக்கூடாதே! நள்ளிரவில் தண்ணீர் ஊற்றிய சோற்றைப் பிழிந்து, குழம்பைப்
பிசைந்து உண்டார்.
எங்கள் அப்பாவின் மறைவை எண்ணும் தோறும் கண்ணீர் உகுப்பவன். எனக்கே இப்படி என்றால், எங்கள் அம்மாவுக்கு? அவர் ஞாபகங்களில் வாழத் தொடங்கினார்.
வயதான அப்பாவை, அம்மாவை, வெள்ளாற்றங்கரையில் வைத்து எரித்துவிட்டு பிள்ளைகள் அதே ஆற்றில் தலைமூழ்கி வீடு திரும்புவார்கள்.
உறவுகள் சில நாட்களில் மறப்பார்கள். ஓராண்டில் பிள்ளைகளும் மறப்பார்கள். கணவனை இழந்த மனைவி? மனைவியை இழந்த கணவன்? நினைத்து, மருகி, அன்றிலைப்போல்
சில நாட்களிலேயே உயிர் பிரிவார்கள்.
குடும்ப விளக்கில் முதியோர் காதலைப் பாடுவார் பாரதிதாசன். கிழவர் தன் மனைவியை எண்ணுகிறார்.
‘புதுமலர் அல்ல; காய்ந்த
புற்கட்டே அவள் உடம்பு!’
‘சதிராடும் நடையாள் அல்லள்
தள்ளாடி விழும் மூதாட்டி’
மதியல்ல முகம் அவட்கு
வறள்நிலம்! குழிகள் கண்கள்!’
இப்படியெல்லாம் தோற்றம் மாறிவிட்டது. வயோதிகம் எய்தினாள்.
இனி எது இன்பம்?
பாவேந்தன் சொல்கிறார்.
‘எது எனக்கின்பம் நல்கும்?
‘இருக்கின்றாள்’ என்ப தொன்றே!’
உயிரோடு இருக்கிறாளல்லவா?
அதுதான் இன்பம். அவளுடைய இருமல் சத்தம்போதும் . சாகும் வரை துணைக்கு!
சரி , கிழவி என்ன நினைக்கிறாள்?
‘அறம் செய்த கையும் ஓயும்!
மக்களை அன்பால் தூக்கிப்
புறம்போன காலும் ஓயும்!
செந்தமிழ்ப் புலவர் சொல்லின்
திறம் கேட்ட காதும் ஓயும்!
செயல்கண்ட கண்ணும் ஓயும்!
மறவரைச் சுமக்கும் என்றன்
மன மட்டும் ஓய்தலில்லை’
சில காலம் அவனை மார்பில் தாங்கினாள் . சில காலம் அவன் பிள்ளையை மடியில் தாங்கினாள். இப்போது வயதாகிவிட்டது. அதனால் என்ன? இனி சாகும்வரை அவனை மனசில் தாங்குவாள்!
இத்தகைய காதல் பெருநிலம் தமிழர் பூமி. மனையறத்தில் சாதாரண மனிதன் என்ன? மன்னன் என்ன?
கணவனின் பிரிவுத் துயரில்
மனைவியரின் கண்ணீரை நிறைய புறப்பாடல்களில் கேட்க முடிகிறது.
இப்படி மனைவியை இழந்த
ஆண் துயரைக் கேட்க முடிகிறதா?
தேடிப்பார்த்தேன்.
காலத்தைத் தாண்டி கையறு நிலையில் ஒரு ஆண்குரல் கேட்டது.
அது சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதையின் குரல். கோட்டம்பலம். கேரள மாநிலத்தில் உள்ள ஊர். அம்பலப்புழை என்பது இப்போதைய பெயர்.
சேரமான் மனைவி இறந்துவிடுகிறாள். இனி எப்படி உயிர் வாழ்வேன்? பிரிவுத் துயர் தாங்காமல் அவன் அழுது பாடும் பாடலைக் கேட்டேன்.
” யங்குப் பெரிது ஆயினும், நோய்அளவு எனைத்தே, உயிர்செகுக் கல்லா மதுகைத்து அன்மையின்?
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து, ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி, ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை ;
இன்னும் வாழ்வல் ; என்இதன் பண்பே! ” ( புறம் 245)
அவள் இழப்பு எவ்வளவு பெரியதோ? தெரியவில்லை. எனினும் நான் அடையும் துன்பம் மிகப் பெரியது. என் உயிரையும் உடன் மாய்த்துக் கொண்டிருக்க வேண்டும். அதற்கான வலிமை என்னிடம் இல்லை . கள்ளி மண்டிய பரந்த வெளி இக்களர் நிலம் . இங்கு விளைந்த விறகடுக்கின்மேல் மனைவியைக் கிடத்தினேன். கொழுந்துவிட்டு எரிகிறது ஈமத் தீ. அவள் மாய்ந்தபிறகும் இன்னும் உயிரோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.
இது எத்தகைய இழிதகைப் பண்பு?
மாக்கோதைகள் குரல் உணர்த்துவது இதுதான்.
மனையறத்தில் வாழ்க்கைத் துணைக்கே முதலிடம். மனைவியை வாழ்க்கைத் துணை என்கிறது வள்ளுவம். துணையில்லாமல் உயிரோடு இருக்கலாம். வாழமுடியாது.