21 ஆம் நூற்றாண்டின் முக்கிய பிரச்சனைதான் என்ன?
அக்டோபர் 2. காந்தி ஜெயந்தி. ஜோக்கர் 2 பார்க்கலாமே! தோன்றியது. இன்ஸ்ட்டாவில் படத்தைக் கழுவி ஊற்றுகிறார்கள்.
2019 வெளியான ஜோக்கர் படம் உலகெங்கும் வசூலை வாரிக் குவித்தது. அந்நியன் போல ஒரு சாகசவாதப் படமாக இங்கு ஜோக்கரை ரசித்தனர்.
இரண்டாம் பாகம் எப்படியிருக்கும்? டிரெய்லர் பார்த்தபோது ஓரளவு யூகிக்க முடிந்தது. சமூகம், பண்பாடு, மற்றும் உளவியல் குறித்த நுண்ணரசியலைப் பேசிய படம் ஜோக்கர். இவற்றை நீக்கிவிட்டு ஜோக்கர் 2 வை ஒரு கதையாகப் பார்ப்பதன் விளைவுதான் இத்தகைய எதிர்மறை விமர்சனங்கள். பிபிசியே ஜோக்கர் 2வை சற்று மந்தமான படம் என்கிறது.
இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் முக்கியமான பிரச்சனை மனச் சோர்வு. 21 ஆம் நூற்றாண்டை மட்டுமல்ல, முதலாளித்துவ அமைப்பையும் சேர்த்துப் பிடித்து உலுக்குகிற பிரச்சனை இது.
முதலாளித்துவம் மனித இனத்தை சமூகமாகப் பார்ப்பதில்லை.அது தனி மனிதர்களின் தொகுப்பாக இச்சமூகத்தை அணுகுகிறது. முதலாளிகளின் உணர்வுகளை காயப்படாமல் பராமரிக்கும் கரிசனத்தில், கோடிக்கணக்கான எளிய மனிதர்களின் லட்சியங்களை, கனவுகளை அது நிராசையாக்கி விடுகிறது.
இப்படி முதலாளித்துவ அரசியல், பண்பாடு, பொருளாதாரம் இவற்றால் கைவிடப்பட்டவர்களின் எழுச்சி எப்படி வெளிப்படும்? என்பதை ருத்ரதாண்டவம் ஆடிக் காட்டிய படம்தான் ஜோக்கர்.ஜோக்கர் முதல் பாகம் பார்த்திருந்தால்தான் ஜோக்கர் 2 வை புரிந்து கொள்ள முடியும்.
ஸ்டாண்ட் அப் காமெடியனாவது எனும் லட்சியத்தோடு இருக்கும் ஆர்தர் ஃப்ளெக், தன் அம்மாவுடன் ஒரு அபார்ட்மெண்டில் வசிக்கிறார். அவருடை லட்சிய வேலை கிடைக்காமல் கடைகளுக்கு வாடிக்கையாளர்களை அழைப்பது போன்ற சாதரண வேலைகளே கிடைக்கின்றன.
பதற்றமடைந்தால் இடைவிடாது சிரிக்கும் வியாதி வேறு அவரது லட்சியத்துக்கு இடையூறு செய்கிறது.
சின்ன பசங்களும் அவரை மூர்கமாக தாக்குகிறார்கள். இந்நிலையில் தற்காப்புக்காக நண்பர் ஒருவர், அவருக்கு துப்பாக்கி வழங்குகிறார். அந்தத் துப்பாக்கியால் கிடைக்க இருந்த வேலை வாய்ப்பும் பறிபோகிறது.
ரயில் பயணம் ஒன்றில் மூவர் ஆர்தரை வம்புக்கிழுத்து தாக்குகின்றனர். அப்போதிலிருந்துதான் ஆர்தருக்கு துப்பாக்கி, ஜெலட்டின், வெடி மருந்துகளின் சுவை பிடித்துப்போகிறது.
யாரெல்லாம் அவனது தோல்வியை விரும்பினார்களோ அவர்களுக்கெல்லாம் ஏமாற்றத்தை வழங்குகிறவனாக மாறுகிறான் ஆர்தர்.
ஆர்தருக்கும் பேட்மேனின் தந்தையான தாம்ஸ் வேய்னுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிய வருவது, அவரை ஜோக்கர் என்ன செய்கிறான்? என்பதுதான் ஜோக்கர் 1.
The only sensible way to live in this world is without rules!’ என அதகளப் படுத்திய ஆர்தர் ஃப்ளெக் இப்போது சிறையில். மனநோய்க்கு சிகிச்சை பெறுகிறார்.
அதே சிறைத்துறை சைலத்தில் இருக்கும் ஹார்லி க்வின் (லேடி காகா) ஆர்தர் ஃப்ளெக்கிடம் தன் அபிமானத்தை வெளிப்படுத்துகிறார். விசாரணையில் ஆர்தரின் (மல்டிபிள் பெர்ஸ்னாலிட்டி டிஸ்ஸார்டர்) மனநோயைக் காரணம் காட்டி அவரை சிறையிலிருந்து விடுவிக்க முயற்சி மேற்கொளாளப்படுகிறது.
இதன் மூலம் அவர் தப்பிக்கவும், புதிய வாழ்வைத் தொடங்கவும், ஒரு காரணத்தைத் தருகிறார்
ஹார்லி க்வின். கிட்டத்தட்ட இவரும் ஆர்தரின் மனநிலையிலேயே இயங்குகிறார். ஆர்தருடன் அவர் மேற்கொள்ளும் இசைப்பயணங்கள் ஆர்தரின் திசையில் அவரை மெருகேற்றுகின்றன.
அதே வேளை மனநோய் உடையவர் என ஒப்புக்கொள்ள வைப்பது, அவரைச் சட்ட அடிப்படையில் சிறையில் இருந்து வெளியேற்ற உதவலாம். ஆனால் அது பைத்தியக்காரத்தனத்தை விதியாகவும், நல்லறிவைக் குற்றமாகவும் பார்ப்பவர்களால் அவரை அவரது பீடத்திலிருந்து இறக்கவே வழி செய்யும்.
காந்தி ஜெயந்திக்கு இந்தியாவில் ஜோக்கர் 2 வெளியிடப்பட்டிருக்கிறது. இது தற்செயலா? தெரியவில்லை. ஆனால் பொருத்தமானது.
முரண்பட்ட ஒரு தேசத்திடம் மகாத்மா முன்வைத்த கேள்விகளை ஜோக்கர் படமும் கேட்கிறது.
நமது காலத்தின் தேவை வன்முறையா? மன்னிப்பா? என்பதுதான் அக்கேள்வி. அஹிம்சையை நடைமுறைப் படுத்துவதா? அல்லது, குறுகிய கால நீதியைப்பெற, வன்முறையை பிரயோகிப்பதா?எனச் சிந்திக்க வைக்கிறது படம்.
காந்தியைப் போல, துருவப்படுத்தப்பட்ட ஒரு நபராக இருக்கிறார் ஆர்த்தர். அவர் ஒரு புரட்சியைத் தொடங்கி வைத்தார். நாம் எல்லோரும் எங்கோ ஓர் இடத்தில் தோற்கடிக்கப்படுகிறோம்.
அவமானப் படுத்தப்படுகிறோம். அதிகமான வடுக்களைத் தாங்கி ஜோக்கரைப் போலவே கடின இதயங்களுக்குச் சொந்தக்காரர்களாகிறோம்.
நமது நகரம் கோதம். நாம் வேறு யாருமில்லை ஆர்தர் ஃப்ளெக்.