Friday, October 10, 2025

Writer Karikalan

எழுத்தாளர் கரிகாலன்

இலக்கிய விமர்சனம்

பெருமாள் முருகன் உருவாக்கும் தமிழ்ப் பிரபஞ்சம்

தனிப்பட்ட வகையில் பெருமாள் முருகனின் சுபாவத்தால் ஈர்க்கப்பட்டு அவரது எழுத்தை நோக்கி நகர்ந்தவன் நான். அவரது அசாதரணமான எளிமையை மற்றவர்களிடம் அரிதாகவேக் காண்கிறேன். மிகச் சொற்பமான சந்திப்புகள், தனிப்பட்ட உரையாடல்கள், அவரது புதினங்கள் சிலவற்றை வாசித்தது இதிலிருந்து , அவர் குறித்து மேன்மையான எண்ணம் என்னிடம் வளர்ந்திருந்தது.

ஒரு முறை அவர் பணியாற்றிய கல்லூரிக்கு என்னைப் பேச அழைத்திருந்தார். அங்கு அவரது துணைவியாரை  அறிமுகப்படுத்தினார். அவரும் பெருமாள்முருகனைப் போலவே வெகு இயல்பாகப் பழகினார்.  சீனிவாசன் நடராசன் ஸ்டுடியோவில் ஓர் இளைஞரை சந்தித்தேன். பெருமாள்முருகனின் மகன் என அறிமுகப்படுத்தினார் சீனிவாசன். அதே எளிமை. எளிமையும் இயல்புத் தன்மையும் அந்தக் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரிடமும் அமைந்திருக்கிறது.

மாதொருபாகன் சர்ச்சை எழுந்து பெருமாள்முருகன் நெருக்கடியான நிலையில் இருந்த தருணம். அவருக்கு ஆதரவாக தமிழ் எழுத்தாளர்கள் ஒரு கூட்டத்தை ஒருங்கிணைத்தோம். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டது இப்போதும் பசுமையாக நினைவில் பதிந்திருக்கிறது.

தமிழ் எழுத்தாளர்களில் இன்று சர்வதேச கவனத்தை ஈர்த்த ஒருவராக பெருமாள் முருகன் திகழ்கிறார். கீழைத்தேய இலக்கியங்கள் மேலை இலக்கியப் போக்கிலிருந்து வேறுபட்டவை. தத்துவார்த்த அடித்தளங்கள், கருப்பொருட்கள், வெளிப்பாட்டு நுட்பங்கள் ஆகியவற்றால்  உருவானவை இந்த  வேறுபாடுகள் . ஒவ்வொரு பிராந்தியத்தின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் வரலாற்று மரபுகளிலிருந்து எழுந்தவை கீழைத்தேய இலக்கியங்கள் . சீனாவில் தாவோயிசம், இந்தியாவில் பௌத்தம், தமிழகத்தில் சங்க இலக்கியங்களில் காணப்படும் அறவியல் நோக்கு, இவற்றின் தாக்கங்களால் செழித்தவை  கீழைத்தேய (oriental) இலக்கியங்கள்.  தார்மீக அறிவுறுத்தல்கள், தத்துவ பிரதிபலிப்புகள் மற்றும் மனிதர்களுக்கும் இயற்கைக்கும்  இடையிலான நல்லிணக்கத்தை வலியுறுத்துபவையாக கீழை இலக்கியங்கள் இருந்து வந்திருக்கின்றன . இத்தகைய தனித்துவப் பண்புகளால்   ஐரோப்பிய சமூகத்தின்  கவனத்தை ஈர்த்தவை கீழைத்தேய படைப்புகள்.

தவிர, மேலைப்போக்குகளை அப்படியே நகலெடுக்கும் பிரதிகளை அவை அலட்சியம் செய்கின்றன. கீழைத்தேயம்  (Orientalism) என்ற நூலை எழுதியிருக்கிறார் எட்வர்ட் செய்த். அதில் கீழைத்தேய பண்பு குறித்து உரையாடும்போது, ‘மனித வரலாற்றை சிதைக்கும் மனிதாபிமானமற்ற நடைமுறைகள் மற்றும் அநீதிகளுக்கு எதிராக  கொண்டிருக்கும் இறுதி எதிர்ப்பாக ‘,  அவர் கிழக்கத்தியத்தை கவனப்படுத்துகிறார்.

ஓரியண்டலிசம் பற்றிய மேற்கத்திய புரிதலின் பெரும்பகுதி ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் கட்டமைப்பு என்று அவர் கருதுகிறார் . 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளின் மேற்கத்திய கலை இலக்கியங்கள்,  பெரும்பாலும் ‘கிழக்கை’ ஒற்றைத் தன்மையில் சித்தரித்தன.  அவற்றை,  மர்மமானதாக, பழமையானதாக, மேற்கத்திய செல்வாக்கு தேவைப்படுவதாக ஐரோப்பிய சமூகம் எண்ணிவந்தது. கிழக்கு மற்றும் மேற்கத்திய இலக்கிய மரபுகளுக்கு இடையிலான தப்பெண்ணங்களை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று ‘ஓரியண்டலிசம்’ நூலில் வலியுறுத்துகிறார் எட்வர்ட் செய்த். இன்று அத்தகைய முயற்சிகளின் ஓர் அடையாளமாகத்தான் பெருமாள் முருகன் கவனம் பெருவதை அவதானிக்க வேண்டும்.

இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்வதாக நம்பியவர் காந்தியடிகள். உலகமயமாக்கலும் பின் காலனியச் சூழலும் கீழைத் தேச கிராமங்கள் குறித்த மிகப்பெரும் ஞாபக மறதியை உருவாக்கியிருக்கின்றன. அந்த ஞாபக மறதியை ஊடுருவி, அதன் ஆன்மாவை மறுபடியும் தரிசிக்கிற வாய்ப்பை வழங்குபவையாக பெருமாள்முருகனின் புனைவுகள் அமைந்திருக்கின்றன. இத்தகைய அடையாளங்களுடைய கதைகள் இன்று உலக அளவில் கவனம் பெற்றுவருகின்றன.

சினுவா அச்செபேயின் ‘திங்ஸ் ஃபால் அபார்ட் ‘  இத்தகையதொரு புனைவு. இக்போ எனும் கற்பனை கிராமத்தில் நடைபெறும் கதை.  1890 களின் நைஜீரிய வாழ்வையும், அதன் பாரம்பரியத்தில்  ஐரோப்பிய காலனித்துவம் ஏற்படுத்திய பேரழிவு மற்றும் அதன் தாக்கத்தை சித்தரிக்கும் புனைவிது. இது போன்றதுதான் ஜிம் கிரேஸின் ஹார்வெஸ்ட் நாவலும். அந்நியர்கள் வந்த பிறகு,  தனிமைப்படுத்தப்பட்ட ஓர் ஆங்கில நிலப்பிரபுத்துவ கிராமம் சந்திக்கிற சீர்குலைவைச் சொல்கிற புனைவு. வாசிலி பெலோவ், வாலண்டைன் ரஸ்புடின் போன்றோரின் சோவியத் புனைவுகளும்  விரைவான மாற்றத்தினூடாக ரஷ்ய கிராமிய சமூகங்களின் மரபுகள் மற்றும் அதன் மாற்றங்களை  மையமாகக் கொண்டவை. இத்தகையப் போக்கின் தொடர்ச்சியை தமிழ் நிலப்பரப்பிலிருந்து விவாதிப்பவையாக பெருமாள் முருகனின் படைப்புலகம் அமைந்திருக்கிறது.  தமிழ் மனநிலையிலுருந்து ஒரு யுனிவர்ஸை உருவாக்கிய எழுத்தாளர்களில் பெருமாள் முருகன் பங்கு மகத்தானது.

குறிப்பாக அவரது மாதொருபாகன்  தமிழில் வந்த உலகக் கண்ணோட்டமுடைய முக்கியமான நாவல்.  அது குறித்த ஒரு சுருக்கமான பார்வையை இங்கு முன்வைக்க விரும்புகிறேன். ‘ மாதொருபாகன் ஒரு நாவலே இல்லை ‘எனச் சிலர்  பிதற்றித் திரிகின்றனர். இவர்களுடைய இத்தீர்ப்புகள் முற்றிலும் காழ்ப்புணர்வின் காரணமாக அமைந்தவை. இன்று மாதொருபாகன் சர்வதேசக் கவனத்தைப் பெற்றிருப்பதைக் கண்டு சிலர் அடையும் பொறாமையின் வெளிப்பாடே இந்த உளறல்கள்.

நாவல் அழகியல், அதில் செயல்படுகிற தீவிர உணர்வெழுச்சி, நாவலில் இயங்கும் மாந்தர்களின் நிலம் சார்ந்த பிரத்யேகத் தன்மை, தமிழ்க் குடும்ப அமைப்பு, தாம்பத்யம், இல்லறம் சார்ந்த மதிப்பீடுகள், நிலவுடமைப் பண்பாடு சார்ந்த கொங்கு வெள்ளாள இனக்குழுவின் தொன்ம நம்பிக்கைகள், என விரியும் இப்புதினம் தமிழ் அடையாளத்தையும் புதின அழகியலையும் ஒருங்கிணையப் பெற்றதாக அமைந்திருக்கிறது.

சுருக்கமாக இதன் கதையைப் பார்ப்போம். காளியும் அவன் மனைவி பொன்னாளும் ஒருவர் மீது ஒருவர் அளவற்ற காதல் கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்களுக்கு குழந்தைச் செல்வமில்லை. ஊர்,உறவு என எல்லா இடங்களிலும் இதனால் இவர்கள் இழிவை அனுபவிக்கின்றனர். பொன்னாள் தாய்மைக்கு ஏங்குகிறாள். மாதொருபாகனாய்த் திகழும் காளி மனைவியின் நிலைகண்டு மனம் பரிதவிக்கிறான். கதையில் வரும் குறிப்புகள்படி கொண்டால் இக்கதை அனேகமாக 50 ஆண்டுகளுக்கு முன் நிகழ்வதாகக் கொள்ளலாம்.

அக்காலக் கட்டத்தில் அப்பகுதி மக்களிடம் ஒரு நம்பிக்கையிருக்கிறது. அவ்வூர் கோவில் திருவிழா  இரவில், பிள்ளையில்லாப் பெண்கள் அவ்விழாவில் பங்கேற்கும், ஏதோ ஒரு இளைஞனோடு கூடலாம். இது ஒழுக்கக் கேடாகாது. அன்று ஆண்கள் எல்லாமே சாமிகள்தாம்.

இந்தத் திருவிழாவில் பொன்னாளைக் கலந்து கொள்ள வற்புறுத்துகிறார்கள் காளி மற்றும் பொன்னாளின் பெற்றோர்கள். குழந்தை விருப்பத்தால் அவளும் இசைகிறாள். தன் மனைவியை அளவுக்கு மீறி நேசிக்கும் காளிக்கு இதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சு நடுங்குகிறது. அவன் மறுத்துவிடுகிறான். இத்தனைக்கும் திருமணத்துககு முன்பாக இப்படி சாமியாகி பெண்களை அனுபவித்தவர்கள்தாம் காளியும் பொன்னாளின் அண்ணன் முத்துவும். முத்து பொன்னாளுக்கு அண்ணன் மட்டுமில்லை. காளியின் உயிர்த் தோழனும்கூட. திருவிழா அன்று நண்பனை அளவுக்கதிகமாக குடிக்கச் செய்து , தங்கையையும் அம்மாவையும் கோவிலுக்கு அனுப்பி வைக்கிறான்.

பொன்னாள் தன் சாமியை அடையாளம் காண்கிறாள். விடிந்து போதை தெளியும்போது மனைவி தன்னை ஏமாற்றிவிட்டதாக கோபம் கொண்டு மனமுடைகிறான் காளி. இவ்விடத்தில் புதினம் நிறைவடைகிறது. இப்புதினம், நம் ஆதித் தாய்வழிச் சமூக அமைப்பை, தந்தை என்கிற உறவற்ற நிலையை, தனிச்சொதது, குடும்பம் உருவனபோது ஆணின் தலைமையை நிறுவ உருவான மதிப்பீடுகளை, நமது தொல் சமூகத்தின் நினைவுகள் ஒரு  கனவைப்போல தொன்மமாக உருமாறுவதை,  பல பரிமாணங்களில் சிந்திக்க இடமளிப்பதாக இருக்கிறது.

கேளிக்கை, உவகை, வலி, காமம், துக்கம் என பலவகையான உணர்வெழுச்சி நிலைகளைப் பின்னிப் பிணந்த பெரும் வாழ்க்கை இதற்குள் விரிந்துகிடக்கிறது. நெஞ்சையள்ளும் கொங்கு தமிழ்,  வாசிப்பில்  சுவை கூட்டுகிறது.இது நாவல் இல்லையென்றால் வேறு எதுதான் தமிழ் நாவல்? நிலவுடமைப் பண்பாட்டை மூச்சாய்க் கொண்ட, ஓர் ஆணாதிக்க வெளியில் பெணணின் மீது பரிவுபட , சாதியப் பெருமிதங்களைக் கலைத்து கதையாடியிருக்கும் அற்புதக் கலைஞன் பெருமாள்முருகன். அவரது நாவல் தடை செய்யப்பட்டது என்பது,  நமது வளமான இலக்கியத்தின் பகுதியொன்றை இழப்பதைப் போன்றது.

ஒரு புனைவைப் படிக்க, பண்பாட்டை  அறிய நம் சமூகத்தை நாம் சரியான முறையில் பழக்கவில்லை. இதற்கு நம் கல்விமுறை, ஊடகங்கள், அரசு, நாம் என அனவருமே பொறுப்பேற்க வேண்டும். பெருமாள்முருகன் இப்போது இன்னும் அனுபவச் செழிப்போடு இயங்குகிறார். அவரது படைப்புகள் அவரைப் போலவே எளிமையாகவும் ஆழமாகவும் இருக்கின்றன. உலகம் இவ்வெளிய கலைஞனின் கதைகளை ஆச்சரியத்தோடு கவனிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *