நடன காசிநாதன் – அஞ்சலி
கடந்த அக்டோபர் 6 ஆம் நாள் தமிழகத்தின் மிக முக்கியமான தொல்லியல் அறிஞர் நடன காசிநாதன் அவர்கள் இயற்கை எய்தினார்.
இன்று காலை (அக் 07) சகோதரர் கோட்டேரி சிவக்குமார் அலையில் அழைத்தார். இவ்வார இறுதியில் நடன காசிநாதன் அவர்களுக்கு அஞ்சலி நிகழ்வொன்று நடத்துவோமா? கேட்டார்.
சிவக்குமார் இயற்கை வேளாண்மையை ஈடுபாட்டோடு செய்துவரும் பொறியியலாளர். இதன் பொருட்டு இயல்பிலேயே இயற்கை வளங்களைப் பாதுகாப்பது, தாய்நாடான தமிழ்நாட்டின் மீது அக்கறை என இயங்கி வருபவர். அவர் நடன காசிநாதன் மீது காட்டும் ஆர்வம் எனக்கு வியப்பைத் தந்தது. அப்போதுதான் தெரிந்தது. நடன காசிநாதன் அவர்கள் எங்கள் ஊருக்கு அருகே உள்ள தொப்புளிக்குப்பம் எனும் கிராமத்தில் பிறந்தவர் என்பது.
கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள கிராமம் தொப்புளிக்குப்பம். தமிழ்நாட்டின் மீது பல படையெடுப்பகள் நிகழ்ந்தன. அப்படி படையெடுத்து வந்தவர்கள் தமிழரின் வளங்களை மட்டும் கவரவில்லை. தமிழர் தம் பெருமிதத்தை உணரா வண்ணம் அவர்தம் பண்பாட்டு வளங்களையும் அழித்தார்கள்.
இதன் காரணமாக தமிழர்கள் தம் கலாச்சார விழுமியங்களை இழக்கும் நிலை. தமிழர் அளவு இந்தியாவில் வேறு எந்த தேசிய இனத்தவராவது இப்படி பிரிந்து , ஒருவரை ஒருவர் முகநூலிலும் இன்ஸ்டாவிலும் திட்டிக் கொள்வார்களா? தெரியவில்லை. இவ்விடத்துதான் மிகுந்த தொன்மை நாகரிகம் மிகுந்த ஒரு நிலத்துக்கு தொல்லியல் ஆய்வாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
கடந்த கால மனித சமூகங்கள் மற்றும் கலாச்சாரங்களை அதன் எச்சங்கள் வாயிலாக தொல்லியலாளர்கள் ஆய்வு செய்கிறார்கள். குறிப்பாக வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் எழுதப்பட்ட பதிவுகளை விட, வரலாற்றைப் பற்றிய புறநிலைப் புரிதலை தொல்லியல் ஆய்வுகள் நமக்கு வழங்குகின்றன.
மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள்? அவர்களின் தொடர்புகள் மற்றும் சமூகங்களின் பரிணாம வளர்ச்சி எத்தகையது? என்பதை தொல்லியல் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இதன்வழி நம் கலாச்சாரப் பாரம்பரியம் பாதுகாக்கப்படுகிறது.
நமது பாரம்பரியத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தவும், எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்குமான அடித்தளத்தையும் தொல்லியல் ஆய்வுகள் வழங்குகின்றன. இதன் மூலம் இழந்த நமது காலாச்சாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். இந்த வேலையை உளசுத்தியோடு செய்தவர்தான் நடன காசிநாதன் அவர்கள்.
மக்களிடையே மரபுவழிச் சின்னங்களைப் பாதுகாப்பதில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். வரலாற்றுக் கருத்தரங்குகளை, ஆழ்கடல் அகழாய்வுக் கருத்தரங்குகளை தமிழ்நாடெங்கும் நடத்தினார். ‘தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனம்’ என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தினார் . தமிழக அரசு தொகுத்திருக்கும் பல்லவ , பாண்டியர் வரலாறு, சோழப் பெருவேந்தர் வரலாறு, தமிழக வரலாறு, ஆகிய நூல்களின் சில பகுதிகளை எழுதியவர் நடன காசிநாதன்.
சிவக்குமாருடன் பேசி முடித்ததும் ஆன்லைன் தின மலரில் ஒரு செய்தி கவனத்தை ஈர்தத்தது. கோட்டக்குப்பம் அருகே பழமையான தவ்வை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட தந்திராயன்குப்பம் மாரியம்மன் கோவில், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதையொட்டி இந்த கோவிலில் உள்ளே இருந்த சிலைகள் வெளியே வைக்கப்பட்டுள்ளன. இதில் பழமையான சிற்பம் ஒன்று இருப்பதாக அதன் கிராம தலைவர் மணி என்பவர், தொல்லியல் ஆய்வாளர் சங்க தலைவர் மணியன் கலியமூர்த்திக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழர்களிடம் தவ்வை வழிபாடு வெகுகாலத்துக்கு முன் இருந்து வந்திருக்கிறது. அவ்வை, தவ்வை போன்றவை அம்மாவை அக்காவை குறிக்கக் கூடிய சொற்கள். கடவுளை தாயாக, தாயை தெய்வமாக, நினைப்பவர் தமிழர். அன்னை வழிபாட்டை மேற்கொண்ட தாய்வழிச் சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்தது. பழையோள், காடுகிழாள், கானமர் செல்வி என சங்க இலக்கியங்கள் வழி கொற்றவை வழிபாட்டை அறிகிறோம். சனாதனத் திணிப்பு கொற்றவையை துர்கையாக மாற்றியது. எங்களூரில் இன்னுமே ஏழன்னை வழிபாடு இருக்கிறது. இவர்களை வடவர் பண்பாடு சப்தகன்னிகள் என்றழைக்கிறது. இப்படிதான் தமிழர் பெண்தெய்வமான தவ்வை வேற்று நிலத்தவர் ஆக்கிரமிப்பால் மூதேவியாக கருதப்படும் நிலை. தமிழரின் மூத்ததேவி தவ்வை. அவளை தரித்திரத்தின் தேவியாக மூதேவி என மாற்றப்பட்டாள். கேட்டால்
'அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்.'
எனக் குறள்கூட சொல்கிறது, என்பார்கள். பொறாமை உடையவனைக் கண்டு திருமகள் வெறுத்து, அவனைத் தன் தமக்கையான மூதேவிக்குக் காட்டி, தான் அவனை விட்டு நீங்கிப் போய்விடுவாளாம்.
இதுபோன்ற இடங்களில் குறளை தொகுத்தவர்கள் மீதே நமக்கு சந்தேகம் வருகிறது. இன்று நாம் காண்கிற வைப்பு முறையில் குறளை வள்ளுவர் எழுதவில்லை. இப்படி நூற்றாண்டு இருளில் மறைந்திருக்கக் கூடிய தமிழர்களின் வரலாற்றை, வாழ்வை, பண்பாட்டைத் தேடிய ஆய்வறிஞர் நடன காசிநாதன். அவர்கள் இன்று நம்மிடையே இல்லை. அவரது தொல்லியல் ஆய்வுகள், அவரை தமிழர்க்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும். எங்கள் மண்ணின் மைந்தருக்கு புகழ் வணக்கம்.