என்மனார் புலவர்
நான் ஒன்றும் புலியூர்கேசிகனோ சுஜாதாவோ அல்ல. கரிகாலன்.
எனக்கென்று ஒரு ஸ்டைல் இருக்கிறது. பாற்கடலை பூனையால் குடித்துவிட முடியாது. ஆனாலும் அதன் இரைப்பைக்கு ஏற்ப இரண்டு ஸ்பூன் குடிக்க நினைப்பது தவறொன்றும் இல்லையே! இவ்வண்ணமே கரிகாலன் சங்க இலக்கியங்கள் குறித்து பேசுவதும். குத்துப்பாட்டு கேட்ட தமிழனை பத்துப்பாட்டு நோக்கி அழைக்கும் ஒரு சின்ன அவா!
தேமா புளிமா தெரியாத தனுஷ் ‘வொய் திஸ் கொலை வெறி’ எழுதுவது எப்படி பாவமில்லையோ! அப்படிதான் நேர் நேர் தேமா தெரியாத கரிகாலன் அணிலாடு முன்றிலார் குப்பைக் கோழியார் குறித்து பேசுவதும்.
நமது சமகால வெய்யிலில் குறுந்தொகையை, நற்றிணையை வைத்து, நவீன காதலை, வாழ்வை விளங்கிக்கொள்ளும் முயற்சி இது.
நமது பழம் இலக்கியப் பிரதிகளின் அர்த்தங்கள் 2020 க்கு ஏற்பவும், தம்மை புதுப்பித்துக் கொள்வதாகவே இருக்கின்றன. இதுவே என் சங்க வாசிப்பை சுவாரஸ்யப் படுத்துகிறது.
கவிதைகள் எழுதி களைத்த வேளையிலும் கவிதையோடு இணைந்த வேறுவேலையைத்தான் செய்யவேண்டியுள்ளது.
சங்ககாலத்தை சமகாலத்தின் மொழியில், நவீன யுகத்துக்கான பண்பாட்டுப் பார்வையோடு இணைத்து எழுதப்பட்ட நூல் இது. இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் அருகருகே வைத்துப் பார்க்கும் பின்நவீனத்துவப் பண்பு கொண்டவை. நீங்கள் வெளிநாட்டில் வசிப்பவர் எனில் உங்கள் பிள்ளைகளுக்கு இந்நூற்களை வாங்கித் தரலாம். ஒரு வேளை உங்கள் பிள்ளைகள் உள்ளூரிலேயே அயல் மொழி புழங்கும் பிரதேசத்தில் படித்து பணி செய்தால் அவர்களுக்கும் இந்நூல் உதவும். அவர்கள் தங்கள் நிலத்தை, அதில் பரவியிருக்கும் அவர்களின் வேர்களை அறிய உதவுகிற நூல்.
இல்லை நாங்கள் நல்ல தமிழ் நாளும் படிப்பவர் என்றாலும் பரவாயில்லை. நீங்கள் கற்றதை மேலும் கனியவைக்கும் நூல் இவை.
எனது அனுபவத்தைப் பிழிந்து எளிய, இனிய மொழியில் எழுதியிருக்கிறேன். சங்கம் கசக்காது அதே வேளை தெவிட்டவும் செய்யாது.