Friday, October 10, 2025

Writer Karikalan

எழுத்தாளர் கரிகாலன்

உலக சினிமா

பேரழகின் கதை

Malèna (2000)
Italy  |  Giuseppe Tornatore

Malèna (2000) | MUBI

நம் எல்லோருடைய இளம்பருவமும், நம்மைவிட வயதில் கூடுதலான ஓர் அழகிய இளம் பெண்ணின் கதையைக் கொண்டிருக்கும். வனப்பும் ரகசியமும் நிறைந்த அவளை, அவளறியாமல் பின்தொடர்ந்திருப்போம். நகரில் அவளுடைய காதல் குறித்த கதைகள் தினம் தினம் ஒரு புதிய மனிதரோடு வளர்ந்து கொண்டிருக்கும்.

இத்தகைய பேரழகிகள் நடந்து போகிற தெருவின் இயல்பு நிலை குலைந்துவிடுகிறது. ஆண்கள் எல்லோரிடமும், அவளிடம் ரகசியமாக நீட்ட ஒரு மலரோ, கடிதமோ, கவிதையோ இருக்கிறது. நகரத்தின் பெண்கள் அவள் அழகின் மீது பொறாமையடைகிறார்கள். தம் கணவர்களை அவள் பறித்துக்கொள்வாளோ என அச்சமடைகிறார்கள். அவள் செல்லும் பாதையில் குழிவெட்டி வைக்கிறார்கள். இப்படி ஒரு அனுபவத்தை தரக்கூடிய படம்தான் மெலீனா!

1940. சிசிலி, இத்தாலியின் ஒரு சிறு நகர். அந்த சிறிய நகரில் 12 வயது சிறுவன் ரெனாட்டோவுக்கு மூன்று முக்கியமான அனுபவங்கள் ஒரே நாளில் கிடைக்கின்றன. அவனுக்கு பெற்றோர் புது சைக்கிள் வாங்கித் தருகிறார்கள். இரண்டாம் உலகப்போரில் இத்தாலி பங்கேற்பதாக அறிவிக்கப்படுகிறது. முதன் முதலாக நகரின் பேரழகி மெலீனாவை (மோனிகா பெலூச்சி) சந்திக்கிறான். குமரப் பருவம் தொடங்கும் நிலையில் மெலீனா, அவன் ஹார்மோனில் நெருப்புத் துளியாக விழுகிறாள்.

கணவன் போர்க்களம் சென்றிருக்கிறான். வயதான அப்பா துணையோடு மெலீனா தனித்திருக்கிறாள். மெலீனா நடந்து சென்றால் தெரு உறைந்து போகிறது. அந்த நகரில் வயது வித்தியாசம் பாராமல் ஆண்கள் மெலீனாவை அடையத் துடிக்கிறார்கள். இத்தாலியை ஜெர்மன் ஆக்ரமிக்கிறது. யுத்தத்தில் கணவன் இறந்துவிடுவதாக செய்தி கிடைக்கிறது. மெலினாவின் தந்தையும் போரில் இறக்கிறார்.

மெலீனா தவறாக ஒரு வழக்கில் சிக்க வைக்கப்படுகிறாள். காப்பாற்ற வக்கீல் அவள் அழகை, இளமையை விலையாக எதிர்பார்க்கிறான். நகரில் எல்லோரும் மெலீனா பைத்தியம் பிடித்து அலைகிறார்கள். பெண்கள் அவளை தெருவில் இழுத்துப்போட்டு அடிக்கிறார்கள். மெலீனாவை வறுமை சூழ்கிறது. இப்போது அவளிடம் அழகும் இளமையும் மட்டுமே மிச்சமிருக்கிறது. விபச்சாரத்தில் ஈடுபடுகிறாள்.

தன் கனவு தேவதையின் அழகு பாழ்படுவதை நினைத்து ரெனாட்டோ துடிக்கிறான். இடையிடையே அவளோடு மானசீகமாக உறவுகொள்கிறான். மோனிகா பெலூச்சி தன் அழகால் உலகை பைத்தியமாக்கிய படம். பால்ய வயது ரெனாட்டோவின் பார்வையில் கிண்டலும் கேலியும் இளமைத் துள்ளலுமாக விரிகிற படம்.

ஆனாலும் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான உள்ளிழை கனன்றபடி இருக்கிறது. இது, ஒரு அழகி, அவள் மீது ஆண்கள் ஜொள்விடும் கதை, என்றால் அதற்கு Giuseppe Tornatore போன்ற இயக்குனர்கள் தேவையில்லை.

இங்கு மெலீனா என்பவள் வேறு யாருமல்ல! அவள்தான் இத்தாலி. நேசநாடுகள் அணியும், அச்சு நாடுகள் அணியும் மோதிக் கொண்டதுதான் இரண்டாம் உலக யுத்தம். அகண்ட சாம்ராஜ்யக் கனவின் வழியே யுத்தங்கள் எழுகிறது. இயற்கை வளங்களும், செழிப்புமுடைய நாடுகளைத் தங்கள் ஆதிக்கத்துக்குள் கொண்டுவரும் ஏகாதிபத்திய மனநிலையைதான், மெலீனாவின் அழகை அபகரிக்கத் துடிக்கும் ஆண்களாக உருவகம் செய்கிறார் Giuseppe Tornatore. இத்தாலியின் பழைய அழகு, அது போரால் சீரழிக்கப்படுவது, போர் ஏற்படுத்திய சரிவிலிருந்து இத்தாலி மீண்டு எழுவது, போன்ற படிப்படியான மாற்றங்களை மெலீனாவின் வழியாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர். இதை கல்மிஷமில்லாத ஒரு சிறுவனின் விழிகளால் காண்பது கூடுதல் சிறப்பு.

மெலீனாவின் கணவன் போரிலிருந்து உயிர் தப்புகிறான். மெலீனாவின் வாழ்வில் வசந்தம் வருகிறது. பெண்கள் இப்போது அவளை மேடம் என மரியாதையாக அழைக்கிறார்கள். சிறுவன் ரெனாட்டோ வளர வளர அவனது வாழ்வில் எத்தனையோ பெண்கள் வருகிறார்கள். ‘நீ என்னை மறந்துவிடுவாயா?’ கேட்கிறார்கள். மெலீனா அப்படி கேட்டதில்லை. ஆனாலும் அவன் மெலினாவை மறக்கவே இல்லை.

ஒரு தேசத்தின் கதையை பெண்ணின் கதையாக மாற்றிவிடுகிறது மெலீனா. மெலீனாவின் அழகை நிறைய இடங்களில் அப்பட்டமாக காட்டுகிறார் இயக்குனர். ஆபாசமாகத் தோன்றவில்லை.

ஏனென்றால் அது ஒரு தேசத்தின் அழகு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *