கள – விளிம்பு மனிதனின் ருத்ரதாண்டவம்!
Kala (2021)
நிலவுடமைச் சமூக அமைப்பில் நிலங்களில் மட்டும் களை இருப்பதில்லை. நிலவுடமையாளர்களின் மனங்களிலும் ‘களை’ இருந்தது. அந்தக் களை சாதி ஒடுக்குமுறையாகவும், பெண் ஒடுக்குமுறையாகவும் இருந்தது. துரதிர்ஷ்டவசமாக இவற்றை அவர்கள் ஒடுக்குமுறை என உணரவில்லை.
ஒடுக்குமுறை, மற்றும் ஒதுக்குதலை அவர்கள் பண்பாடு என்றே நினைத்திருந்தார்கள். வடிவேலு பாணியில் சொல்லவது என்றால் ‘தனக்கு வந்தால் ரத்தம், மற்றவனுக்கு வந்தால் தக்காளி சட்னி!’ என்று நினைத்தார்கள்.
அப்படி ஆண்டை ஒருவனின் மனசில் முளைத்த களையை, கூலித்தொழிலாளி ஒருவன் பிடுங்கி எறியும் படமே ‘கள’! மலையாளத்தில் ‘கள’ என்றால் களை. ‘கள’ (Kala) ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மனிதன் ஒருவனின் கோபம். சினிமாவை புரிந்து கொள்வதென்பது, அந்தப் படத்தின் கதையைப் புரிந்து கொள்வதல்ல. கதை என்பது மனிதர்களின் உணர்வாலும், அவர்களது பழக்க வழக்கங்களாலும், சடங்குகளாலும், பண்பாட்டாலும் வளர்வது.
‘கள’ படத்தை புரிந்து கொள்ள, கேரளாவின் முந்தைய நிலவுடமைச் சமூக அமைப்பையும் புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கள போன்ற படங்களை, சண்டைப் படங்களாக, கிரைம் திரில்லராக, பழிவாங்கும் படமாக சுருக்கி, வழக்கமான மசாலா படமாகவே விளங்கிக் கொள்வோம்.
கள படத்தை சாதாரணமான சினிமா பார்வையில் பார்த்தோம் என்றால் அதுஒரு முழு நீள சண்டைப் படம். அவ்வளவே! ஆனால் கேரள வரலாற்று தொடர்ச்சியான வர்க்க கோபமாக, ஒடுக்கப்பட்டோரின் சமூக கோபமாக பரிணமித்திருக்கிறது ‘கள’.
கள படத்தின் நாயகன் ஷாஜி (டொவினோ தாமஸ்) நிலவுடமைச் சமூகத்தின் எச்சங்களை மனிசில் சுமந்து கொண்டிருப்பவன். அவனது தந்தை ரவீந்திரன் (லால்).
வரைமுறையற்று சேர்த்து வைக்கப்பட்ட சொத்து மகன்களை அழித்துவிடும். நிலவுடைமை மனம் எத்தனையோ பெரிய குடும்பங்களை அழித்திருக்கிறது. ‘வாழ்ந்து கெட்ட குடும்பம்’ எனும் பதத்தை கேள்விப்பட்டிருப்போம். இவர்களுடைய சிக்கல் என்னவென்றால், நிலவுடமை சமூகம் முடிவுக்கு வந்தது, முதலாளித்துவம் வளர்ந்தது, அதுவும் தேய்ந்து கார்ப்ரேட் சமூகம் உருவாகியிருப்பது, போன்ற சமூக வளர்ச்சியை விளங்கிக் கொள்ளாததுதான்.
அப்படிப்பட்ட ஒருவன் ஷாஜி. கேரளாவில், ஜென்மி,மடம்பி போன்ற ஆதிக்கசாதி மனநிலையின் எச்சங்கள் இன்னும் தென்படுவதை ‘கள’ காட்டுகிறது. ஜென்மி, மடம்பி என்றால் தமிழகத்தில், நிலப்பிரபுக்கள், ஆண்டைகள், பண்ணையார்கள் போன்றவர்கள். 500, 1000 ஏக்கர் நிலமுடையவர்கள். திருவிதாங்கூர், குருவாயூர் கோவிலுக்கு சொந்தமான ஆயிரக் கணக்கிலான ஏக்கர் நிலங்களைப் பயிரிடுபவர்கள்.
கேரளாவில் இடது எழுச்சி ஏற்பட்டபோது ஒடுக்கப்பட்ட சமூகங்களால் பழிவாங்கப்பட்டவர்கள். இப்படி ஒரு குடும்பத்தைச் சார்ந்தவன் ஷாஜி. சமூகம் மாறுகிறது! என்பதை உணராதவன். ஆண்டை மனநிலை (Jenmi attitude) படைத்தவன்.
ஷாஜி பணத்தை அலட்சியமாக கையாள்பவன். வியாபாரம், வேளாண்மையில் நஷ்டத்ததை ஏற்றுடுத்தியவன். எளிமையான வாழ்க்கையை (இதுவும் ஒரு வகையான ஜென்மி நடத்தையே) மேற்கொள்ளும் இவனது தந்தை லால் மகனுடைய செயல்களால் வேதனை அடைகிறார். ஷாஜிக்கு இரக்கம் நிறைந்த மனைவி, ஒரு மகன் இருக்கிறார்கள்.
ஒருநாள் வேட்டையில் ஈடுபடும் ஷாஜி, விலங்குக்காக இறைச்சியில் நாட்டு வெடிகுண்டை பொதிந்து வீசுகிறான். அதை ஒரு நாய் கவ்வ, வெடித்து சிதறுகிறது. அந்த நாய் சாராயம் காய்ச்சும் ஒரு இளைஞனுடையது (சுமேஷ் மூர்). அவனுக்கு இருக்கும் ஒரே உறவு அதுதான்.
ஒரு நாள் ஷாஜி வீட்டு தோட்ட வேலைக்கு வேலை செய்ய நான்கு பேர் வருகிறார்கள். அன்று காலைதான் ஷாஜியின் மனைவி, மகன், ஊருக்கு போகிறார்கள். அவனுடைய அப்பாவும் வெளியே செல்கிறார். வேலே செய்ய வருபவர்களில் சுமேஷ் மூரும் ஒருவன்.
எதிர்பாராத தருணத்தில் ஷாஜியை மூர் தாக்குகிறான். சுதாரித்துக் கொள்ளும் ஷாஜி, அவனை அடித்து வீட்டுக்கு அருகில் உள்ள கொட்டகையில் போட்டு பூட்டுகிறான். மூர் ஓட்டை உடைத்து வெளியேறுகிறான். ஒடுக்கப்பட்டவனின் கோபம் எப்படி மூர்க்கமாக இருக்கும் என்பதை மூரின் கண்கள் காட்டுகின்றன. இருவரும் மோதி ரத்தக் களறியாகிறார்கள். ஒரு கட்டத்தில் ஷாஜி மூரோடு சமாதானமாக விரும்புகிறேன்.
உன் நாய்க்கு பதிலாக உயர் ரக நாய் ஒன்று வாங்கித் தருகிறேன்! என்கிறான். இதுதான் ஜென்மி (ஆண்டை) மனநிலை! மூர் சிரிக்கிறான். ஷாஜி வீட்டிலும் ஒரு நாய் இருக்கிறது. அதை நாய் என்றால் கோபம் வரலாம். பிளாக்கி. Mastiff ரக நாய். ‘உன் நாயை கொல்வேன்!’ என்கிறான் மூர். ஷாஜி அவனை அடித்து மரத்தில் தூக்கு மாட்டுகிறான். கிணற்றில் தூக்கி வீசுகிறான். ஆனால் ஒடுக்கப்பட்ட மனிதனின் கோபம், பழி வாங்காமல் அவனை சாக விடுவதில்லை. மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுகிறான் மூர். இறுதியாக நிகழ்வது ருத்ரதாண்டவம். விவசாய பின்னணி கொண்டவன் ஷாஜி. வேட்டை மனோபாவம் கொண்டவன் மூர். மனிதனின் ஆதி தொழில் வேட்டை. வேட்டை மனமே வெல்கிறது.
விளிம்பு நிலை திரை அழகியல் எப்படியிருக்கும்? ஒரு செலுலாய்ட் உதாரணத்தை கொடுத்ததற்காக இயக்குனர் வி.எஸ் ரோஹித்தை பாராட்ட வேண்டும்! படத்தயாரிப்பாளர் டொவினோ தாமஸ். ஆனாலும் படத்தில் அழுத்தமான பாத்திரம் சுமேஷ் மூருக்கு. இதற்காக தாமஸையும் பாராட்ட வேண்டியிருக்கிறது.
தந்தை லால், மனைவி வித்யா ஷாஜி (திவ்யா பிள்ளை), மகன் கண் முன்பாகவே, ஷாஜியை போட்டு பிளக்கிறான் லால். உயிர் பயத்தோடு, சுவற்றோரம் உறைந்து அமர்கிறான் ஷாஜி. மெல்லிய விசில் ஒலியோடு கேட்டைத் திறந்து வெளியேறுகிறான் சுமேஷ் மூர். அவனை ஒரு ஆட்டுக்குட்டியைப்போல பின்தொடர்கிறது ‘பிளாக்கி’!