5.0
மூன்று மாதங்களாக மிஸ்டர் எக்ஸ் OTT யில் பேய்ப்பட சீரியலைப் பார்க்கிறார். இடையே ஆம்புலன்ஸ் சத்தம். கதவைத் திறந்து எட்டிப்பார்த்தார். மூன்றுவது வீட்டு வனஜாவை பிரசவத்துக்கு அழைத்துச் செல்வதாக மிஸஸ் எக்ஸ் சொன்னாள். குரலில் சுவாரஸ்யம் இல்லை! எக்ஸுக்கும் ஏமாற்றம்தான். பாஸ் வைத்த இடத்திலிருந்து மீண்டும் சீரியலைப் பார்க்கத் தொடங்கினார்.
முதலில் இதை மர்மப் படமென எண்ணிதான் பார்க்கத் தொடங்கினார். சில சீன்களில் உணர்ச்சிகரமான கண்ணீர்க் காவியமாகவும் தோன்றியது. 1.0 வின் இடையில் தோன்றிய பிரதமருக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. ஏராளமானபேர் பலகாதம் நடந்தே மடிவதை வைத்தோ, உணவில்லாமல் சாவதை வைத்தோ, இதை நீங்கள் அவலச் சித்திரமாக ரசிக்கக் கூடாது. உண்மையில் இது பேய்ப்படம். உங்கள் கூரைகளில் வேப்பிலையைச் செருகுங்கள். விளக்கேற்றி தீபம் காட்டுங்கள். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் சீரியலிலிருந்து பேய் இறங்கிப் போய்விடுமென்றார் பிரதமர்.
மிஸ்டர் எக்ஸுக்கு குழப்பம் அடிக்கடி பிரதமர், நிதி அமைச்சர், முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், மாறிமாறித் தோன்றினார்களே தவிர பேய் ஏன் வரவேயில்லை? மீண்டும் தெருவில் ஆம்புலன்ஸ் ஒலி. ‘ஐந்தாவது வீட்டு பாய் டெல்லி மாநாட்டுக்குப் போனாராம் ஆப்பிள் ஆரஞ்செல்லாம் கொடுத்து இறக்கிவிட்டுப் போயிருக்கிறார்கள்!’ மிஸஸ் எக்ஸின் குரலில் சுரத்தில்லை.
4.0 சீரியலில் இருட்டு சீன்கள் குறைந்திருந்தன. வறுமையில் மக்கள் இறப்பதாகச் எதிர்காட்சியினர் வதந்தி பரப்புகிறார்கள். அமெரிக்காவைப் பாருங்கள்! இத்தாலியைப் பாருங்கள்! இங்கிலாந்தைப் பாருங்கள்! தி நன் பாருங்கள்! கான்ஜூரிங் பாருங்கள்! அனபெல் பாருங்கள்! மக்கள் பேயடித்துதான் சாகிறார்கள்.
ஒரு முறை மிஸ்டர் எக்ஸ் முழு உடற்பரிசோதனைக்கு போனார். கண், பல், காது, மூக்கு, தொண்டைப் பரிசோதனை செய்தார்கள். மார்பக எக்ஸ்-ரே, இ.சி.ஜி , ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கொழுப்பு, யூரியா, கிரியேட்டினின் அளவுகள், அல்ட்ரா சவுண்ட் , தைராய்டு சுரப்பு, கல்லீரல், சிறுநீரகம், கணையமென எக்ஸை பிரித்துப் போட்டு மாட்டினார்கள்.
உயர் ரத்த அழுத்தம் இல்லை. மாரடைப்பு இல்லை. சர்க்கரைநோய் இல்லை. புற்று நோய் இல்லை. மரபு வழி நோய்களில்லை. ‘யு ஆர் நார்மல்’ வெளியேறும் வழியைக் காட்டினார் டாக்டர். சுகர் கூட இல்லாமல் சப்பென்றானது முழு உடல் பரிசோதனை. இந்தப் பேய்ப்படமும் அப்படிதான்!
ஃபோன் வரும்போதெல்லாம் ஆர்வமாக எடுத்தார் சொந்தக்காரர்கள் யாரையாவது பேயடித்திருக்குமோ? டல்கோனா காஃபி வாட்ஸப் ஸ்டேடஸில் பார்த்தியா?பக்கத்து சீட் ராமசாமியும் ஏமாற்றினார்! பேய் விரட்ட தாயத்து வாங்கியது. மஞ்சள்தண்ணி சேகரிக்க செம்பு வாங்கியது. விபூதி குங்குமம் பத்தி வாங்கியது. பூசாரி ஜடாமுடிக்கு எண்ணெய் வாங்கியது. பேயடித்தவர்களுக்கு நிவாரணம். நிதியமைச்சர் இருபது லட்சம் கோடியென்றார்.
5.0 வில் தான் பார்ப்பது பேய் சீரியலா? காமெடி சீரியலா? குழம்பினார் மிஸ்டர் எக்ஸ் இப்போதெல்லாம் சீரியலில் நகைக்கடை துணிக்கடை விளம்பரங்கள் வேறு! ஒருவழியாக டிவியிலிருந்து எழுந்து புறவழிச் சாலையில் வாக்கிங் போனார். யாரோ அடிபட்டு கிடந்தார்கள் ‘பேய் அடித்துவிட்டதா?’ ஆர்வப்பட்டார் எக்ஸ். ‘மீன் பாடி வண்டி’ கூட்டத்திலிருந்து யாரோ பதில் சொன்னார்கள்.