இலக்கிய நோபல் (2025)
இலக்கியத்துக்கான நோபல் விருது (2025) லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய் (ஹங்கேரி) , அமிதவ் கோஷ் (இந்தியா) , ஹருகி முரகாமி (ஜப்பான்) கேன் சூ (சீனா) , கிறிஸ்டினா ரிவேரா கார்சா (மெக்சிகோ) , ஜெரால்ட் முர்னேன் (ஆஸ்திரேலியா) இவர்களில் யாருக்காவது ஒருவருக்கு கிடைக்கலாம் என இரண்டு நாட்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். இந்தப் பட்டியலில் முதலாவதாக குறிப்பிட்டிருந்த ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்க்கு நோபல் விருது அறிவித்துள்ளார்கள். நம்மூர் கோணங்கி போல சற்று கடினமான வாக்கியங்களில் எழுதக்கூடிய பின் நவீனத்துவ எழுத்தாளர்.
இன்றைய உலகை நான்கு வகையான பயங்கரவாதங்கள் ஆட்டுவிக்கின்றன. அவையாவன,
- குற்றம் சார்ந்தது
- மனநோய்
- போர்
- அரசியல் ஆகும்.
இன்று நடத்தப்படும் போர்கள் அபோகாலிப்டிக் பயங்கரவாதமாக இருக்கின்றன. அபோகாலிப்டிக் என்பது பேரழிவு தரக்கூடிய பயங்கரவாதம். தனிநபர்கள், அல்லது துணை தேசிய குழுக்களால் அணு, வேதியியல், உயிரியல் அல்லது கதிரியக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியிருக்கிய பயங்கரவாதம்.
இத்தகு அபோகலிப்படிக் பயங்கரவாதத்தின் மத்தியில், கலையின் சக்தியை மீண்டும் உறுதிப்படுத்தும் கவர்ச்சிகரமான மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட படைப்பிற்காக கிராஸ்னாஹோர்காய்க்கு இவ்விருது வழங்கப்படுவதாக நோபல் குழு கூறியிருக்கிறது . அபோகாலிப்ஸின் சமகால ஹங்கேரிய மாஸ்டர் என்றும் கிராஸ்னாஹோர்காய் அழைக்கப்படுகிறார்.
1954 ஆம் ஆண்டு ருமேனிய எல்லைக்கு அருகிலுள்ள ஒரு நகரத்தில் பிறந்தவர் க்ராஸ்னாஹோர்காய். அவரது முதல் நாவலான ‘சாட்டான்டாங்கோ’ மூலம் ஹங்கேரியில் இலக்கியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர்.
இந்த ஆண்டு வெளியிடப்பட்ட அவரது ‘ஹெர்ஷ்ட் 07769’ நாவல், நாட்டின் சமூக அமைதியின்மையை துல்லியமாக சித்தரிப்பதன் காரணமாக சிறந்த சமகால ஜெர்மன் நாவலாக விமர்சகளால் கருதப்படுகிறது.
இவரது மற்ற குறிப்பிடத்தக்க படைப்புகளில் ‘வடக்கு ஒரு மலை, தெற்கே ஒரு ஏரி, மேற்கு நோக்கிய பாதைகள், கிழக்கிற்கு ஒரு நதி’, சியோபோ தெர் பிலோ’, போன்றவை அடங்கும்.
இவரது படைப்புகளில் சமகால சிறிய நகரங்களின் நம்பகமான சித்தரிப்புகளைக் காண்கிறோம். சமூக அராஜகம், கொலை மற்றும் தீ வைப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நகரங்கள் இவை. அதே வேளை, நாவலின் பயங்கரவாதம் ஜோஹன் செபாஸ்டியன் பாக்ஸின் சக்திவாய்ந்த மரபின் பின்னணியில் வெளிப்படுபவை.
வன்முறை மற்றும் அழகு இவற்றை சாத்தியமற்ற முறையில் இணைத்து, ஒற்றை மூச்சில் எழுதப்பட்ட படைப்பு இவருடையவை! என நோபல் கமிட்டி கூறுகிறது. நோபலுக்கு முன்பாக இவர் புக்கர் விருதைப் பெற்றிருக்கிறார். திரைக்கதை ஆசிரியராகவும் இயங்கியிருக்கிறார்.
இந்நோபல் விருத மூலம் எர்னஸ்ட் ஹெமிங்வே, டோனி மோரிசன், பாப் டிலான் மற்றும் கசுவோ இஷிகுரோ உள்ளிட்ட புகழ்பெற்ற பரிசு பெற்றவர்களின் பட்டியலில் கிராஸ்னஹோர்காயும் இணைகிறார். அவருக்கு நம் வாழ்த்துக்கள்.