நோம், என் நெஞ்சே! நோம், என் நெஞ்சே!
இணையத்தில் மிரட்டி இன்பத்துக்கு பெண்ணை அழைப்பவர்கள் இருக்கிறார்கள்.
இந்த வழக்கு சங்ககாலத்திலும் இருந்தது.
அதை மடல் ஊர்தல் அல்லது மடலேறுதல் என்றனர்.
தான் விரும்பிய தலைவியை அடைவதற்காக தலைவன் மடலூர்தல் அக்கால வழக்கமாக இருந்தது.
இதுவும் காதலை வலிந்து பெறுகிற முயற்சியே!
காதலில் தோல்வியுற்ற சங்ககாலத் தலைவன்,
தன் காதலை ஊருக்கு தம்பட்டம் அடித்துக்காட்டும் நிகழ்வு இது.
உடலில் சாம்பலைப் பூசி,
சூடத்தகா எருக்கு ஒத்த மலர்களைச் சூடி, பனைமரத்தின் அகன்ற மடல்களால் செய்யப்பட்ட குதிரை பொம்மையில் ஏறி, காதலிக்கும் பெண்ணின் சித்திரத்தை கையில் தாங்கி, ஊரார் கேட்கும் வண்ணம் தான் விரும்பும் தலைவியின் பெயரைக் கூவிச் செல்லும் நிகழ்வே மடலேறுதல்.
ஆனாலும், அக்காலத்தே
இது இழிவானதாகவே கருதப்பட்டது.
சந்திக்க மறுக்கும் தலைவியிடம், தோழி மூலமாக மடலேறுவேன் என மிரட்டிய காதலர்கள் அந்தக் காலத்தில் இருந்தனர். இப்படி மடலேறும் வழக்கம் காமம் மிகு ஆணுக்கு மட்டுமே. பெண்ணுக்கில்லை.
பக்தி இலக்கிய காலத்தில் தன்னை பெண்ணாக வரித்து, ஆண்டவனை தலைவனாகக் கருதி திருமங்கை ஆழ்வார் மடலேறுதலைப் பாடியதும் நடந்திருக்கிறது.
ஒரு முறை மடலேறியும் தலைவி இசையவில்லை எனில் மீண்டும் தலைவன் மடலேறுவதில்லை.
மாறாக, காதலுக்காக உயிரைத் துறந்துவிடுவான்.
விரும்பாத ஒரு பெண்ணுக்காக மடலூர்வது கைக்கிளை ஒழுக்கமாக கருதப்பட்டது.
இந்நிகழ்வால் தலைவனின் காதலை அறிந்த ஊரார், அவனது துயர்நிலை கண்டு, தலைவியைச் சேர்த்து வைக்க முயற்சி எடுப்பர்.
இப்படி மடலூர்வேன்
எனும் தலைவனை
அள்ளூர் நன்முல்லையார் நமக்கு காட்டுகிறார்.
பாண்டிய நாட்டிலுள்ள அள்ளூர் (சிவகங்கை அருகில்) என்னும் ஊரைச் சார்ந்தவர் நன்முல்லை. இவரது பெயரில்தான் முல்லை இருக்கிறது. மற்றபடி முல்லைத் திணையில் அமைந்த பாடல் ஒன்றைக்கூட இவர் எழுதியதில்லை.
நன்முல்லை
புறநானூற்றில் ஒருபாடல் (306), குறுந்தொகையில் ஒன்பது பாடல்கள் (32, 67, 68, 93, 96, 140, 157, 202, 237), மற்றும் , அகநானூற்றில் ஒருபாடலும் (46) எழுதியுள்ளார்.
மடலேறுவேன் என அடம் பிடிக்கிறானே! நன்முல்லை காட்டும் அத்தலைவனின் புலம்பலை இப்போது கேட்போம்.
தலைவியைக் காண வேண்டி தலைவன் வருகிறான். தலைவிக்கு சந்திக்க விருப்பமில்லை.
தோழிதான் வருகிறாள். தலைவியைக் காணாதது தலைவனுக்கு ஏமாற்றம்.
‘அவள் இனிமேல் உன்னைக் காண வரமாட்டாள் ‘என்கிறாள் தோழி. ஏமாற்றமடையும் தலைவன், ‘எனது காதல் உண்மையானது. தலைவி
என்னை ஏற்றுக் கொள்ளாவிட்டால் மடலேறுவேன்.’
என மிரட்டுகிறான்.
‘காலையும் பகலும் கையறு மாலையும் ஊர்துஞ் சியாமமும் விடியலு
மென்றிப் பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்
மாவென மடலோடு மறுகில் தோன்றித் தெற்றெனத் தூற்றலும் பழியே
வாழ்தலும் பழியே
பிரிவுதலை வரினே.’
(கு.தொ 32)
அருஞ்சொற்பொருள்
கையறவு – செயலற்ற நிலை
துஞ்சுதல் – தூங்குதல்
மா – குதிரை
மறுகு – தெரு
தெற்றென – தெளிவாக
தூற்றல் – பலர்
அறியச் செய்தல்
தலைவருதல் – தோன்றுதல்.
காலைப்பொழுது, பகல்,
செயலற்ற நிலைக்கு காரணமான மாலை, ஊர் உறங்கும் நள்ளிரவு, விடியற்காலம் ஆகிய எல்லா நேரங்களிலும் என் காமம் பொய்யாகிவிடுகிறது. அதை மெய்யாக்க வேண்டுமெனில் பனை மடலால் செய்த குதிரையின் உருவத்தின்மேல் ஊர்ந்து மடலேறலாம். ஆனால், அது தலைவி எனக்கு அளித்த துயரத்தைப் பலர் அறியச் செய்வதாகும்.
அதனால் தலைவிக்குப்
பழி உண்டாகும்.
அதேவேளை அவளைப் பிரிந்து உயிர் வாழ்ந்தாலும் ஊர் என்னைக் குறை சொல்லும். அதனாலும் பழி வரும். எனக் கலங்குகிறான்.
மாலையில் காதல் நோய் தலைவனை மிகுதியாகத் துன்புறுத்துவதால் தலைவன், ‘கையறு மாலை’ என்கிறான்.
ஊரில் உள்ளவர்கள் அனைவரும் உறங்குகிறார்கள்.
காமம் தலைவனைத் தூங்கவிடவில்லை என்பதைதான் ‘ஊர் துஞ்சி யாமம்’ என்கிறார் முல்லையார்.
காதல் போயின் சாதல் என்பதை, ‘வாழ்தலும் பழியே’ என்கிறார். நன்முல்லையின் கவிதைகள் பெரும்பாலும் சிறியவை. ஆனால் விரித்தால் பொருள் விரிவு கூடியவை.
இவரது இன்னொரு பாடலும் இப்படிதான். சுருங்கச் சொல்லி காதலை விளங்க வைக்கும் பாடல்.
‘குக்கூ வென்றது கோழி
அதன் எதிர்துட்கென்றன்றென்
தூஉ நெஞ்சம் தோடோய் காதலர்ப் பிரிக்கும் வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே.’
(கு.தொ 157)
தலைவன் தலைவியின் தோளில் தோய்கிறான். தோய்தல் என்றால் ஒட்டிக்கிடப்பது போல தழுவியிருப்பது. அப்போது
கோழி குக்கூவென்று கூவுகிறது. அதைக் கேட்டவுடன், விடியற் பொழுது வந்துவிட்டதே என்பதை தலைவி உணர்கிறாள். வாளால் ஒரு பொருளை வெட்டினால் அப்பொருள் எப்படிப் பிளவுபடும்! அவ்வாறு, அவ் விடியற் காலம், தலைவியின் தோளைத் தழுவியிருந்த தலைவரை,
அவளிடமிருந்து பிரிக்கிறது.
அதுகண்டு அவள் மாசற்ற மனம் அஞ்சுகிறது!
இந்தப்பாடலில் கோழி கூவியது என்பது
தலைவியின் மாதவிடாய் நிலையை மறைமுகமாகக் குறிக்கிறது என உரையாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
‘அவையல் கிளவி மறைந்தனர் கிளத்தல்’ என தொல்காப்பியம் சுட்டும் பேச்சு நாகரீகம் இங்கு பின்பற்றப்பட்டிருக்கலாம்
என கருதுகிறார்கள்.
தலைவி, அதை வெளிப்படையாகக் கூறாது ‘கோழி கூவியது.பொழுதும் விடிந்தது. இனி,அடுத்த சில நாட்களுக்குத் தலைவரோடு படுத்து இன்பம் நுகரமுடியாதே!’ என்று வருந்துவதாகவும் பொருள் கொள்கிறார்கள்.
இப்பாடலில் வரும்
‘காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை’ வரி கவிதைக்கு அழகையும் காதலுக்கு தீவிரத்தையும் கூட்டக்கூடியது. வைகறைப் பொழுதை வாள் என்கிறார். அது இரவிலிருந்து பகலைப் பிரிக்கிறது. போலவே தலைவியின் தோளில் காதலால் தோய்ந்த தலைவனையும் அல்லவா பிரித்துவிட்டது! வாளால் பிரித்தால் வலி உண்டாகாமலா இருக்கும்?
அதனால்தான் சேவல் ‘குக்கூ’ என்றதும், ‘அதன் எதிர்
துட்கென் றன்றது தலைவியின் நெஞ்சம்!
துட்கு என்றால் அச்சம். தலைவனைப் பிரிய வேண்டுமே என்கிற அச்சம். பிரிதலின் வலியை ஒரு பெண்ணாக இருப்பதால் இத்தனை அழகாக, ஆழமாகக் காட்ட முடிகிறது நன்முல்லையால்!
இன்னொரு பாடல் . தலைவி இல்லாதபோது பரத்தையை வீட்டில் அழைத்து வந்து கூடுகிறான் . இவன் மட்டுமல்ல. இவன் ஊரே இப்படிதான் என்பதை அழகாக கூறுகிறாள் தலைவி.
‘ சேற்று நிலை முனைஇய
செங்கட் காரான்
ஊர் மடி கங்குலில்,
நோன் தளைபரிந்து,
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி
‘நீர் முதிர் பழனத்து மீன் உடன்இரிய அம் தூம்பு வள்ளை
மயக்கி,தாமரை வண்டு ஊது பனி மலர் ஆரும்ஊர!’
ஊர் உறங்கும் வேளை. எருமை தன்னை கட்டியிருந்த கயிற்றை அறுத்தது. முள்வேலியை கொம்புகளால் விலக்கியது. பழஞ்சேற்றில் இறங்கியது. அப்போது அங்குள்ள மீன்கள் பயந்து ஓடின. வள்ளைக் கொடிகள் மிதிபட்டன. வண்டு மொய்த்துக்கொண்டிருக்கும் தாமரை மலரை அவ்வெருமை மேய்ந்தது. இப்படிப்பட்ட ஊரை உடையவன் தலைவன் ! என்கிறாள் தலைவி .
அதாவது கட்டுக்களை அறுத்து சென்று இரவில் மேயும் எருமை! என தலைவனை இலக்கிய நயமாகக் குறிப்பிடுகிறாள்.
இதே பாடலில் தன் ஊர் பெருமையையும் கூறுகிறாள்.
‘களிறுடை அருஞ் சமம் ததையநூறும் ஒளிறு வாட் தானைக்
கொற்றச்செழியன்பிண்ட
நெல்லின் அள்ளூர்அன்ன என்
ஒண் தொடி நெகிழினும்
நெகிழசென்றி, பெரும!
நிற் தகைக்குநர்யாரோ? ‘
(அகம் 46)
தந்தை போன்றவன் மன்னன் கொற்றச் செழியன். பகைவரின் யானைப் படையைத் தன் வாளால் வென்ற வீரன். அவன் ஊர் அள்ளூர். பிடிப்பிடியாகக் கதிர் ஈனும் நெல்வயல் நிறைந்த அள்ளூர். அந்த நெற்கதிர் போன்ற பொன்னிற வளையல் தலைவன் மீதுள்ள ஏக்கத்தால் கழன்று விழுந்தாலும் பரவாயில்லை. தலைவனை யார் தடுக்கப்போகிறார்கள்?
அவளிடமே செல்க! என்கிறாள்.
காமம் இரண்டாம் பட்சம்.
தலைவிக்கு சுயமரியாதையே முக்கியம் என்பதை வெளிப்படுத்தும் பாடல்.
நன்முல்லையிடம், பாடல்களில் உவமைகளை கையாளும் திறன் அற்புதமாக இருக்கிறது.
‘உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்’ என்கிறது தொல்காப்பியம். பொருத்தமாக உவமை அமையாவிடின் செய்யுள் பாழ்படும். அவ்வகையில் முல்லையின் சில அழகிய உவமைகளை இங்கு காண்போம்.
‘வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம் புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப்பொலங்கல ‘
( கு.தொ 67)
கிளியியின் வளைந்த அலகில் இருக்கும் வேப்பம் பழம் பொற்கொல்லனின் கரத்திலிருக்கும் பொற்காசு போலிருக்கிறது.
‘ பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்’ (கு.தொ 68)
அன்னத்தின் காலைப்போல சிவந்த தாளை உடைய உளுந்து.
‘மாக்கடல் திரையின் முழங்கி
வலன்நேர்பு கோட்புலி வழங்குஞ் சோலை’ (கு.தொ 237)
கடல் அலைபோல ஆர்ப்பரிக்கும் புலிகள்.
என இவரது உவமைகள் அனைத்தும் தனித்தன்மையும் அழகும் கூடியவை.
பெரும்பாலும் பேச்சுமொழியில் அமைந்தவை முல்லையின் கவிதைகள். ஒரு பாடல்
‘நோம், என் நெஞ்சே! நோம், என் நெஞ்சே! என்கிறாள் தலைவி.
இது அன்றைய உரை வழக்கே. அய்யோ, என் நெஞ்சு வலிக்குதே! என்பதன் பழைய பேச்சுத் தமிழே இது. சரி, தலைவிக்கு ஏன் நெஞ்சு வலிக்கிறது?
சிறிய இலையை உடைய நெருஞ்சிப்பூ கண்ணுக்கு அழகியதாக இருக்கும். ஆனால், அதுவே குத்தும் முள்ளைக் கொண்ட காயை விளைவிக்கிறது. அதுபோல் தலைவன் தொடக்கத்தில் நமக்கு இன்பம் தந்தான். பின்னர் துன்பம் தருகிறான் அதனால்தான் என் நெஞ்சு நொந்து போகிறது! என்கிறாள்
‘புன் புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கு இன் புது மலர் முட் பயந்தாஅங்கு,
இனிய செய்த நம் காதலர்
இன்னா செய்தல் நோம்,
என் நெஞ்சே!’
(கு.தொ 202)
அள்ளூர் நன்முல்லை காட்டும் காதலுக்கும் நமக்கும் இடையில் 23 நூற்றாண்டுகள் இடைவெளி இருக்கிறது. அந்த தலைவன் தலைவி இதயத்துக்கும் நமக்கும் இன்றும் பெரிதாய் இடைவெளி இல்லை. என்பதிலிருந்தே முல்லையின் இளமையை அறிய முடிகிறது!