Friday, September 4, 2026

Writer Karikalan

எழுத்தாளர் கரிகாலன்

தொடர்

அலீனா – சாதிக்கு எதிரான ஒரு முக்கியக் குரல்

அலீனா – சாதிக்கு எதிரான ஒரு முக்கியக் குரல்

தொடர் – 3

~

இந்திய தலித் பெண் இலக்கிய செயல்பாடுகள் சற்று கடினமானது. அவர்கள் ஒரே சமயத்தில் ஆண்களோடும் சண்டைபோட வேண்டும். சாதியோடும் சண்டையிட வேண்டும். அதனால்தான் இந்திய தலித்பெண் கவிதைகள் இன்றியமையாதவையாக இருக்கின்றன. அவை சாதி மற்றும் பாலின ஒடுக்குமுறையின் இரட்டைச் சுமையை அம்பலப்படுத்துகின்றன. விளிம்புநிலை மக்களின் கண்ணோட்டத்தில் இந்திய இலக்கியத்தை மறுவரையறை செய்கின்றன. தலித் பெண்கள் தங்களது சமூகத்திற்குள்ளேயே ஆண்களிடமிருந்தும் ஆதிக்க சாதியினரிடமிருந்தும் ஒடுக்குமுறையை எதிர்கொள்கின்றனர்.

ஆதிக்க சாதிப் பெண்களோ அல்லது தலித் ஆண்களோ முழுமையாக அனுபவிக்காத ஒரு போராட்டத்தை அவர்களின் கவிதைகள் பேசுகின்றன. இந்தக் கவிதைகள் அவர்களிடம் மறைந்திருக்கும் வலியையும், கண்ணியத்தையும், உயிர் பிழைத்தலையும் வெளிக்கொண்டு வருகின்றன.  தலித் பெண் கவிஞர்கள் ஆதிக்க சாதியினரின் அழகியலையும் விதிகளையும் நிராகரிக்கின்றனர். செம்மைப்படுத்தப்பட்ட செவ்வியல் மொழிக்குப் பதிலாக, அன்றாடப் பேச்சுச் சொற்களையும், உள்ளூர் வட்டார வழக்குகளையும், செம்மையற்ற சொற்றொடர்களையும் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் தங்கள் கலையை அவர்கள் சக்திவாய்ந்ததாகவும், நேர்மையானதாகவும், நிஜ வாழ்க்கையுடன் ஆழமாகப் பிணைந்ததாகவும் மாற்றுகிறார்கள்.

அத்தகைய கவிதைகள் கடுமையான உடல் உழைப்பு, வறுமை மற்றும் அமைப்பு ரீதியான அநீதியைப் பதிவு செய்பவையாக இருக்கின்றன. இவர்களது எழுத்து துன்பத்தைப் பற்றியது மட்டுமல்ல. அது அரசியல் விழிப்புணர்வு, சுயமரியாதை மற்றும் சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாகும் திகழ்கின்றன.

இந்த வகையில் இன்ஸ்டாவில் எழுதி புகழ் பெற்ற இந்திய தலித் பெண் கவிஞர்களில் முக்கியமானவர் அலீனா. கேரளாவைச் சேர்ந்த, பத்தனம்திட்டா மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது கொச்சியில் வசித்து வருகிறார்.  மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதுகிறார்.  @iseesomeletters என்கிற தனது கணக்கில் இருமொழிக் கவிதைகள் எழுதியும் வாசித்தும் வருகிற இவர், 60,000-க்கும் மேல்  பின்தொடர்பாளர்களைப் பெற்றுள்ளார்.

பாரம்பரிய பதிப்புத்துறைக்கு கேரளாவில் இன்றும் மதிப்பு இருந்தாலும்,  நவீன கவிதைகளை  ஒரு மாபெரும் அலையாக இன்ஸ்டாகிராமில் மாற்றியதில் அலீனாவின் பங்கு முக்கியமானது. கேந்திர சாகித்ய அகாடமியின் கனகஸ்ரீ விருது பெற்றவரான அலீனா, உண்மையின் சக்தி குறித்தும், சாதிக்கு எதிரான ஒரு முக்கியக் குரலாக இருப்பதில் உள்ள சவால்களை எதிர்கொள்வது குறித்தும் கவிதைகளில் வெளிப்படையாகப் பேசுபவர்.

இவரது கவிதைகள், உலகின் குறைகளைச் சிந்தித்துப் பார்க்கிற வாய்ப்பை நமக்கு மீண்டும் மீண்டும் வழங்கக்கூடியவை.  தன்னுடைய படைப்புகள், தனது வாழ்வனுபவம், தான் வளரும்போது கேட்ட கதைகள், தான் கண்ட காட்சிகள், மற்றும் தன்னைச் சுற்றியுள்ள பெண்களுக்கு நடப்பதாக அவர் கேள்விப்பட்ட விஷயங்கள் ஆகியவற்றிலிருந்து உருவானவை.

அலீனாவைப் பொறுத்தவரை, கவிதை என்பது வெறும் கலை வெளிப்பாடு மட்டுமல்ல. அது ஒரு உணர்ச்சிப் பயணம். அதை ஒரு கலையாக மாற்றுவதற்கு முன்பு, அவர் தனது கடந்தகாலத் துயரங்களைச் சமாளித்து அதிலிருந்து மீண்டு வர வேண்டும். இந்தப் பயணம் அதற்கே உரிய சவால்களுடன் வருகிறது. ‘நம்மைப் பற்றிக் கவலைப்படாத ஒரு கூட்டத்தின் முன் நாம் மிகவும் பலவீனமாக வெளிப்படுகிறோம் என்பதே ஒரு பெரிய சவால்,’ என்கிறார் அவர்.

சமத்துவமின்மை நிலவும் ஒரு சமூகத்தில், இணையத்தில் ஒரு பிரபலமான நபராகவும் தலித் கவிஞராகவும் இருப்பதால், அவர் அடிக்கடி எதிர்ப்புகளைச் சந்தித்துள்ளார். ‘இன்றைய சமூகத்தில், இவை குறித்து வெளிப்படையாகப் பேசுவது ஆபத்தானது. நீங்கள் எவ்வளவு அதிகமாக வெளிப்படுகிறீர்களோ, உங்களுக்கு ஒரு தளம் இருந்தால், அவ்வளவு அதிகமாக மக்கள் உங்களைத் தாக்குவார்கள்,’ என்கிறார். இதற்கெல்லாம் கவலைப்படுபவரல்லர் அலீனா.

‘எனக்கு யாருடைய அங்கீகாரமும் தேவையில்லை என்பதை எனக்கு நானே நினைவூட்டிக் கொள்கிறேன். இணையத்தில் என்னைத் தாக்கும் நபர்களா? அவர்களால் நான் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய அவசியமில்லை,’ மனவலிமையோடு கூறுகிறார்.

எல்லா தொடக்க நிலையாளர்களைப் போலவே, அலீனாவும் ஆரம்பத்தில் பிறரிடமிருந்து கடன் வாங்கிய குரல்களில் எழுதிக் கொண்டிருந்தார். ‘வசதியான பின்னணியைச் சேர்ந்த அலீனா தான் மிகவும் போற்றிய எழுத்தாளர்களின் பாணிகளை ஆரம்பத்தில் பின்பற்றினார். அவருக்கே தெரியாமல், தன் சொந்த சமூகத்தையே தாழ்வாகப் பார்க்கும் ஒரு பார்வையை அவர் உள்வாங்கிக் கொண்டதாக,   அவர் வருத்தததோடு குறிப்பிடுகிறார். ஒரு தலித் பெண்ணாக, தான் வளர்ந்த காலத்தில், தன் சமூகத்திலிருந்து வந்த எழுத்துக்களை அணுகுவதற்கான வாய்ப்பு தனக்குக் குறைவாகவே இருந்தது என்பதை அலீனா சிந்தித்திருக்கிறார். அதுவரை அவர் படித்த மையநீரோட்ட இலக்கியங்களில், பாடப்புத்தகங்களில் காணப்படாத பதியப்படாத தலித் வாழ்வை அவர் சிந்திக்கத் தொடங்கினார்.

காலப்போக்கில், தன் சொந்த நினைவுகள், கவனிக்கப்படாத தன் சமூகத்தின் பரந்த அனுபவங்களுடன் எவ்வளவு நெருக்கமாகப் பொருந்துகின்றன என்பதை கவனிக்கத் தொடங்கினார். தனக்கு நேரடியாக எதுவும் நடக்காதபோதும், தன்னைச் சுற்றியிருந்த மூத்த பெண்களின் வாழ்வில் நிகழ்ந்த ஒதுக்குதல்களை, வன்முறைகளை அவர் கண்டிருந்தார். அந்தக் கதைகள், பெண்மை குறித்த மேலோங்கிய கருத்துகளுக்கு முற்றிலும் முரணாக இருந்ததை அவர் உணர்ந்தார். அந்த உண்மைகளைப் பதிவு செய்வது  முக்கியமானதாகவும், அவசரமானதாகவும் அவருக்குத் தோன்றியது. ஏனென்றால், அவர் செய்யாவிட்டால், வேறு யார் இவற்றை செய்வார்கள்?

அவருடைய தாயும் பாட்டியும் வட்டமாக அமர்ந்து உணவு தயாரிக்கும்போது சொன்ன கதைகளிலிருந்து, அவர் தன் சொந்தக் குரலையும் தன் சமூகத்தின் குரலையும் உணர்ந்துகொண்டார். அதன் மூலம், அவருடைய கவிதைகள் போலியாக இருப்பதிலிருந்து முற்றிலும் வேறொன்றாக, மாறின. தம் இனக்குழுவின் வாழ்வை இவ்வாறு அவர் கவிதைகளில் மீட்டுருவாக்கம் செய்யத் தொடங்கினார். அலீனாவைப் பொறுத்தவரை, கவிதை  என்பது அவர் யார்? என்பதை நினைவூட்டும் ஒரு வழியாகும். இதைத்தான் அவர் தன் படைப்புகளில் வெளிப்படுத்த முயற்சிக்கிறார்.

தலித் இயக்கியம், தம் சௌகரியத்தைக் குலைக்காத வரை, ஒரு அடையாளப் பிரதிநிதித்துவம் என்கிற அளவில் மையச் சமூகம் ஏற்றுக்கொள்ள முன்வருகிறது. அதுவே தன் சொந்த மதிப்பீட்டு இருப்பால் மையசமூகத்தின் விழுமியங்களை பலவீனப்படுத்தும்! என்கிற நிலை உருவாகும்போது தலித் இலக்கியச் செயல்பாடுகளை அது அதிர்ச்சிக்குரியதாக கருதுகிறது.

அவருடைய முதல் தொகுப்பான ‘சில்க் ரூட்’ முரண்பாடுகளையும் பன்முகத்தன்மையையும் தழுவும் அடுக்குகள் கொண்ட கற்பனை வளம் மிக்கதாக கருதப்படுகிறது. இதன் உள்ளடக்கத்தின் வழியாக  சமூகத்திற்குள்ளே இருக்கும் வேறுபாடுகளை மதிப்பதும் , அதை உள்ளிருந்தே தட்டையாக்குவதைத் தவிர்ப்பதும் தனக்கு முக்கியம் எனக் கருதுகிறார் அலீனா.

அலீனாவின் கவிதைகள், வேதனைக்கும் நம்பிக்கைக்கும் இடமளிக்கின்றன. வலியை மட்டுமல்ல, மகிழ்ச்சி, மீள்திறன் மற்றும் தம் அன்றாட வாழ்வின் சிக்கல்களையும் பதிவு செய்ய வேண்டும்! என்பதை தனது ஆதரவாளர்களும் மனதில் கொள்ள வேண்டும் என அலீனா வலியுறுத்துகிறார். புரிதல் என்பது மனக்காயத்தைத் தாண்டி, அன்பு, நகைச்சுவை மற்றும் படைப்பாற்றலைத் தழுவ வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, இதற்கு செவிமடுக்கும் மனப்பான்மை, மற்றும் சாதிப் பாகுபாட்டைக் களைவதற்கான வாழ்நாள் முழுவதுமான உண்மையான அர்ப்பணிப்பு ஆகியவை தேவைப்படுகின்றன என நினைக்கிறார் அலீனா.

இன்று அவரது படைப்புகள், பிரதான ஊடகங்களில் சாதியவாதம், அடையாளம், பிரதிநிதித்துவம் அல்லது அதன் பற்றாக்குறை ஆகியவை குறித்து பரவலான உரையாடல்களைத் தூண்டியுள்ளன. நேர்காணல் ஒன்றில் தான் இன்ஸ்டாவில் எழுத வந்தது குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறார் அலீனா.

‘எங்கள் சமூகத்தைச் சேர்ந்த கவிஞர்கள் பலர் உள்ளனர். அதனால், அவர்களிடம் பொருளாதாரச் சலுகைகளோ அல்லது முடிவெடுக்கும் அதிகாரமோ இல்லாவிட்டாலும், அவர்களிடம் கலாச்சார மூலதனம் உள்ளது. அவர்கள், ‘இந்தக் கவிஞர் சிறந்தவர்’ என்று சொன்னால், நாங்களும் தானாகவே சிறந்தவர்களாகக் கருதப்படுகிறோம். எனவே, மலையாளத்தில் தலித் இலக்கியத்தின் வளர்ச்சி, என்னைப் போன்ற பல இளம் கவிஞர்கள் இந்தத் தளத்தில் எளிதாக நிலைத்து நிற்க உண்மையில் பெரிதும் உதவியுள்ளது.

இல்லையென்றால், நல்ல இலக்கியங்களை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாளும் உங்களை நீங்களே சந்தைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். என்றாவது ஒரு நாள் நாம் கண்டறியப்பட வேண்டும் என்பதற்காக, இதைத் தொடர்ந்து செய்ய வேண்டியிருக்கிறதே என்று நம் அனைவருக்கும் சங்கடமாக இருக்கிறது. நாம் மிகவும் பந்தா காட்டுபவர் என்றோ அல்லது அது போன்ற வேறு விதமாகவோ பார்க்கப்படுவதை விரும்பவில்லை. அப்படிச் செய்வது கூச்சமாகவும், சங்கடமாகவும் இருக்கிறது (சிரிக்கிறார்). அப்படிச் செய்வதன் மூலம் நமது கண்ணியத்தை இழப்பதாக நாம் உணர்கிறோம். ஏனென்றால், கலைஞர்களாகிய எங்களுக்கு, சந்தைப்படுத்துதல் என்பது ஒரு தீய விஷயம் என்றும், கலை தனக்காகத் தானே பேச வேண்டும் என்றும் கற்பிக்கப்படுகிறது.

அதனால், சந்தைப்படுத்துதலை நாங்கள், ‘ஒரு கலைஞனாக எனக்கு இடம் மறுக்கப்படும் நிலையில், நான் எனக்காக இடத்தை எடுத்துக்கொள்கிறேன்’ என்று கருதுவதில்லை. நாங்கள் அப்படிச் சிந்திப்பதில்லை. அதைச் செய்யும்போது நாங்கள் சங்கடப்படுகிறோம். அதனால், ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தொடங்கி, என் கவிதைகளை அங்கே வெளியிடலாம் என்று நினைத்தேன்.

அலீனா கவிதைகள் சமகாலத்தை அனைவருக்குமானதாக மாற்ற விரும்புபவை. சமத்துவத்தை ஒரு பெண் குரலில் இருந்து நாம் கேட்கிறோம். சிலவேளை அது ஒரு பறவையின் பாடலைப்போல இருக்கிறது. சிலவேளை அது ஒரு புயலின் உக்கிரமாகவும் தோன்றுகிறது.

 

அலீனாவின் கவிதைகள் (Ra Sh ஆங்கில மொழிபெயர்ப்பு வழியாக அமைந்த மொழியாக்கம்)

Transplorers

காபி தயாரிக்கும்போது சர்க்கரை சிந்தியது.

கூர்மையான மூக்குடைய எறும்புகள்

அதைச் சூழ்ந்துகொண்டன.

பெரிய எறும்புகளும் சிறிய எறும்புகளும்

தத்தமது திறனுக்கு ஏற்ப அதைச் சுமந்து சென்றன.

பெரிய சர்க்கரைப் படிகங்கள்.

ஒரு பக்கமாக மேலும் கீழும்.

ஒரு எறும்பு நின்று, தன் காதலியைப் பார்த்தது.

திடீரென்று,

ஒரு துடைப்பம் அவர்கள் மீது இறங்கியது.

சில துடைப்பத்தின் மீது ஏறின.

மற்றவை சிதறி ஓடின.

அவளைக் காணவில்லை.

அவள் எங்கே?

அவளது வாசனை அறையை விட்டுச் சென்றது.

தாக்கு.

துல்லியமாக.

இருபத்தொன்பதாயிரத்து இருபத்தொன்பது அடி உயரத்தில்,

சர்க்கரைப் படிகங்கள் நிறைந்த ஓர் உலகம்.

நாசித் துவாரங்களில் ஆக்சிஜன் குழாய்கள் செருகப்பட்ட நிலையில்,

அவர்கள் பூமியின் மடிப்புகளை

நோக்கி ஏறிக்கொண்டிருந்தனர்.

வானவில் பள்ளத்தாக்கில்,

ஒருபோதும் சாகாத எண்ணற்ற சடலங்கள்.

வழுக்கிக்கொண்டும்,

அவளுடன் மேலே நிலைத்தபடியும்.

ஒரு பனிப்புயல் வீசுகிறது.

அவளுக்கு மூச்சுத் திணறுகிறது.

அவளுக்குக் குளிராக இருக்கிறது.

 

காகிதத்தை மடித்துப்

பறவைகளைச் செய்யும் ஒரு சிறுமி இருந்தாள்.

அவளுடைய இறுதிச் சடங்கின்போது,

​​அந்தப் பறவைகள்

கிளைகளில் அமர்ந்து அழுதன.

மக்கள் மழையைச் சபித்தார்கள்.

 

கூடும் கிளையும் இல்லாமல் காகிதப் பறவைகள் நனைந்து போயின.

 

செய்திகளும் விளம்பரங்களும்

அவற்றை விட்டு விலகிச் சென்றன.

‘நாங்கள் நனைகிறோம்,’

என்று பறவைகள் கூறின;

சவப்பெட்டியில் படுத்திருந்த அவள்,

‘ம்ம்’ என்ற சத்தத்துடன்

அதைக் கேட்டாள்.

 

கோளாறு

 

ஹலோ

என்றேன் நான் ஃபோனிடம்.

ஹலோ

என்றது ஃபோன்.

ஹலோ ஹலோ

ஹலோ ஹலோ

என் சொந்தக் குரலில்.

நான் அழைப்பைத் துண்டித்து

சோஃபாவில் எறிந்தபோது,

​​அது மீண்டும் அழைத்தது.

என் சொந்தக் குரல்.

 

முன் முற்றத்தில் உள்ள மல்லிகைக் கொடிகளுக்கு யாரோ தண்ணீர் ஊற்றியிருக்கிறார்கள்.

யாரோ அங்கே நின்று

அதன் மீது சிறுநீர் கழித்தது போல இருக்கிறது.

மண் குழைந்து

சகதியாக இருக்கிறது.

சம்பா செடியின் அடியில், அணில்கள் உறிஞ்சிக் குடித்துத்

தள்ளிவிட்ட பழங்கள் அழுகிக் கிடக்கின்றன.

 

நான் வெளியே சென்றேன்.

“என்னால் அழைக்க முடியவில்லை,

நான் அதில் பேசுவதை மட்டுமே கேட்கிறேன்.”

“வாழ்க்கை இப்படித்தானே?”

 

பழுதுபார்ப்பவர்

மஞ்சள் பற்களுடன் சிரிக்கிறார். சில நொடிகளுக்குள்

சிறிய ஒலிபெருக்கிகளில் தேவதாரு மரங்கள் மலர்ந்தன.

 

கோளாறு

 

சிம் வாங்க வந்த பையன் முணுமுணுத்தான்.

என்னிடம் பேசும் தொலைபேசி வழியாக

என்னிடம் பேசும் நான். ஹலோ ஹலோ.

நான் புன்னகைக்கிறேன்.

கறுப்பு காபியை மடமடவெனக் குடிக்கிறேன்.

மூக்கைச் சிந்துகிறேன்.

ஒரு காது வழியாக நுழைந்து மறு காது வழியாக வெளியேறுகிறேன்.

 

வணக்கம்.

வணக்கம்.

நான்

என் நாவும்,

என் கைப்பேசியின் நாவும் ஆவேன்.

மறுபக்கத்தில் இருக்கும் நான்,

என்னுடன் சேர்ந்து பயப்படுகிறேன்.

கண்ணாடியில் குரலற்றவளாகத் தெரியும் எனக்கு,

கைப்பேசியின் குரலாக இருக்கும் நான்.

ஆஹா!

.

(அலீனாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு – iseesomeletters )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *