Sunday, April 19, 2026

Writer Karikalan

எழுத்தாளர் கரிகாலன்

அரசியல் | பண்பாடு

இம்மண்ணில் நிகழ்ந்த அற்புதம்!

ஏப்ரல் தலித் வரலாற்று மாதம்.

குலாத்தி எனும் மராத்தி தன்வரலாற்றுப் புதினத்தைப் படித்து முடித்தேன். கிஷோர் சாந்தாபாய் காலே என்பவரால் எழுதப்பட்டது. குலாத்தி – தமாஷா எனும் நடனம் ஆடிப்பிழைக்கும் விளிம்புநிலை இனக்குழு. இத்தகைய சமூகத்திலிருந்து படித்து மருத்துவராக முன்னேறியவர் கிஷோர் சாந்தாபாய் காலே. இந்த தன்வரலாற்று நாவலை இரண்டாவது முறையாகப் படிக்கிறேன்.

போலவே, லட்சுமணன் கெய்க்வாட் எழுதிய உச்சாலியா தன்வரலாற்று நாவலை இரண்டாவது முறையாகப் படிக்கிறேன். பத்து பதினைந்து ஆண்டுகட்கு முன் படித்தது. இந்நூல்களை மறைந்த எனது நண்பர் விடியல் சிவா அவர்கள் வெளியிட்டிருந்தார். ஒரு சந்திப்பின்போது இந்நூல்களை அன்பளிப்பாக எனக்கு வழங்கியிருந்தார்.

வழக்கம்போல நூல்களைப் படித்து முடித்த பிறகு நண்பர்கள் யாருக்கோ கொடுத்துவிட்டேன். இது குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, அன்புச் சகோதரர் பழநி அவர்கள், ‘இந்நூல்கள் என்னிடம் உள்ளன. படிக்கிறீர்களா?’ கேட்டார். சொன்னதுபோலவே, மறுநாள் கொடுக்கவும் செய்தார்.

உச்சாலியாவை என்பது திருட்டைத் தொழிலாகக் கொண்ட ஓர் இனக்குழு. கொள்ளை, திருட்டு போன்றவற்றை கீழைத்தேய நாடுகளின் அராஜக மரபாக கருதியது காலனிய அரசு. இந்த சாதிகளைக் குற்றப்பரம்பரையாக அறிவித்தது காலனி அரசு. இதுகுறித்து, இந்திய பின்காலனி மனோபாவத்திலும் ஏவ்வித மாற்றமும் இல்லை.

இந்நிலையில்தான் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இந்திய அறம், அதன் தார்மீக ஒழுக்கப் பண்புகள் குறித்து மாற்றுக் கருத்து கொண்டிருந்தார். இந்திய ஒழுக்கம், இந்திய அறம், போன்றவை ஒடுக்கப்பட்ட மக்களிடம் ஒருவகை
மன அடிமைத்தனத்தை உருவாக்குவதை அவதானித்தவர் அம்பேத்கர்.

இந்தியச் சிந்தனையாளர்கள், எழுத்தாளராகள் கூறும் ஒரு விசயத்தை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். ‘சட்டத்தால் எதையும் மாற்றிவிட முடியாது. மன ரீதியான மாற்றம் வேண்டும்!’ என்பார்கள். இது இங்கு நிலவும் அக அடிமைத்தனத்தை ஊக்குவிப்பதாகும். வழமையான தார்மீகம், அறம் போன்ற இந்திய விழுமியங்கள், மனித மாண்பை மறுக்கும் மத நூல்களின் விளைவால் எழுந்தவை . இவை உளவியல் மற்றும் ஆன்மீகப் பிணைப்பால் அடிமைத்தனத்தை ஊக்குவிப்பதாக அம்பேத்கர் கருதினார்.

சமூக மரபுகளுக்குக் கட்டுப்படும் மனநிலையை , ஒடுக்கப்பட்ட மக்களிடம் உருவாக்குதன் மூலம், தங்களின் தாழ்ந்த நிலையை ஏற்றுக்கொள்ளவும், சுயமரியாதையற்ற தம் இருப்பை ஏற்றுக்கொள்ளவும் அவர்கள் பழக்கப்படுத்தப் படுகிறார்கள் என சிந்தித்தார் அம்பேத்கர்.

ஆகவே அவர் உங்கள் நீதிபோதனைகள், உங்கள் தர்ம சிந்தனைகள், இந்து ஒழுக்கப் பண்புகள் எதுவும் எம்மக்களுக்கு வேண்டாம். எங்களுக்குத் தேவை சுதந்திரம், உரிமை, சகோதரத்துவம், கல்வி, சட்டப் பாதுகாப்பு! என்றார் அம்பேத்கர்.

சாதி அமைப்பை, விமர்சனப் பகுத்தறிவைத் தடுக்கும் ஒரு மனநிலை என்று விமர்சித்தார். தனிநபர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்குப் பதிலாக, பாரம்பரிய தப்பெண்ணங்கள் உருவாக்கிய தளைகளின் கீழ் வாழ சாதி அமைப்பு வழிவகுக்கிறது என விவாதித்தார்.

ஒடுக்கப்பட்டவர்கள் மட்டுமல்லர். உயர் சாதி இந்துக்களும் தங்களின் தவறான நம்பிக்கைகளால், இறுக்கமான பாரம்பரியப் பழக்க வழக்கங்களால் அடிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவே கருதினார் அம்பேத்கர்.

ஆகவேதான் ‘மனதின் சுதந்திரமே உண்மையான சுதந்திரம்!’ என்றார். இத்தகு சுதந்திரமான மனதை உருவாக்குவதில் கலைஞர்களின் பங்கு முக்கியமானது. அம்பேத்கர் இப்படி சிந்தித்ததால்தான், இந்திய சமூகம் திருடர்கள், வேசிகள், கூத்தாடிகள் என யாரையெல்லாம் , இழிவானவர்களாக ஒதுக்கியதோ, அந்த இனக்குழுக்களை சேர்ந்தவர்கள்தாம் லட்சுமண் கெய்க்வாட், லட்சுமண் மானே, கிஷோர் சாந்தாபாய் காலே போன்றோர்.

அம்பேத்கரின் போராட்டத்தால்தான் இவர்களால் கல்வி கற்க முடிந்தது. ஒத்த சிந்தனை உள்ளோரோடு ஒன்று சேர முடிந்தது. போராட முடிந்தது. இந்த வாழ்வை வெல்ல முடிந்தது.

இப்படி உலகம் முழுவதும் அதிகாரத்தால் பழிவாங்கப்பட்டவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்களுக்காகப் போராடியவர்களும் இருக்கிறார்கள். இப்படி விளிம்புநிலைச் சமூகங்களில் இருந்து போராடியவர்கள் குறித்து விரைவில் ஒரு தொடர் எழுத இருக்கிறேன்.

அதற்கு முன்னதாக அம்பேத்கரோடு, ஒரு காஃபி குடிக்க விரும்பினேன். அவரது நினைவிடம் அமைந்திருக்கும் சைத்திய பூமிக்கு சென்றேன். அவருக்கருகே இருப்பது தாய் மடியில், இருப்பதைப்போன்றது. ‘கடலில் சேரும்போது தன் அடையாளத்தை இழக்கும் ஒரு நீர்த்துளியாக இருக்காதே. நீ, வாழும் சமூகத்தில், உன் இருப்பை இழக்கக் கூடாது. உன் வாழ்க்கை சுதந்திரமானது. உன் சமூகத்தின் வளர்ச்சிக்காக மட்டுமல்ல, உன் சுய வளர்ச்சிக்காகவும்தான் நீ பிறந்திருக்கிறாய்!’

அவரால் உத்வேகம் பெற்றவர்கள் மனதில், அம்பேத்கர் பிறக்கவும் இல்லை. இறக்கவும் இல்லை. புத்தரைப்போல இம்மண்ணில் நிகழ்ந்த அற்புதம் அவர்.

புரட்சியாளர் அம்பேத்கர் வாழ்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *