Thursday, June 11, 2026

Writer Karikalan

எழுத்தாளர் கரிகாலன்

நூல் விமர்சனம்

அருந்ததிராய் எழுதியுள்ள, அவர் அம்மாவின் சரிதை!

பெண் எழுத்தாளர்கள் புனைவல்லாத படைப்புகளை அரிதாகவே எழுதுகிறார்களா? எனில், இல்லை எனத்தான் சொல்லத் தோன்றுகிறது. செல்வாக்குமிக்க சுயசரிதைகளை, பண்பாட்டு விமர்சனங்களை, அவர்கள் எழுதவே செய்கிறார்கள். அரசியல், அறிவியல், வரலாறு போன்ற துறைகளில் வல்லுநர்களாக ஆண்களே திகழ முடியும், எனும் எண்ணம் இங்கு பழக்கமாக்கப்பட்டுள்ளது.

குடும்பம் அல்லது தனிப்பட்ட விசயங்கள் குறித்தே பெண்களால் எழுத முடியும். பரந்த அறிவுசார் அதிகாரத்தைக் கொண்டவர்களாக பெண்களைக் கருதாமல், ‘வாழ்க்கை அனுபவங்களை’ எழுதுபவர்களாகவே பார்க்கிற மனநிலை பண்பாட்டு நிறுவனங்களால் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.

புனைவல்லாத படைப்புகளுக்கு விரிவான பயணம், ஆவணக் காப்பக ஆராய்ச்சி, ஆழ்ந்த ஈடுபாடு, போன்றவை தேவைப்படுகின்றன. குடும்பப் பொறுப்புகளில் சமத்துவமற்ற பகிர்தல் இல்லாத நிலை, அல் புனைவுகளில் பெண்கள் ஈடுபடுவதற்கு சிறிய பின்னடைவுகளையும் உருவாக்குகின்றன.

இந்தப் பின்னணியில் இங்கிலாந்தில் இருந்து வழங்கப்படுகிற The Women’s prize for non-fiction முக்கியமானதாகத் தோன்றுகிறது. முன்பாக The Women’s prize for fiction தருகிற அமைப்புதான் இவ்விருதையும் கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கிவருகிறது.

இந்த ஆண்டு இவ்விருதுக்கான குறும் பட்டியலில் இந்திய எழுத்தாளரான அருந்ததிராயின் , ‘மதர் மேரி கம்ஸ் டு மீ’ என்கிற நூலும் இடம் பெற்றுள்ளது. இது ஒரு biofiction. இந்நூலில் அருந்ததிராய் தன் தாயார் மேரி ராய் குறித்து எழுதியுள்ளார்.

மேரி ராய் ஒரு கல்வியாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர். பெண்ணியவாதி. சிரியன் கிறிஸ்தவப் பெண்களுக்கு அவர்களின் மூதாதையர் சொத்தில் ஆண் உடன்பிறப்புகளுக்கு இணையான சம உரிமைகளை உறுதி செய்தவர் மேரி ராய். ராயின் தந்தை ராஜீப் ராய் ஒரு வங்காளி. தேயிலைத் தோட்ட மேலாளராகப் பணியாற்றியவர். இவருக்கும் மேரி ராய்க்குமான குடும்ப வாழ்வு அருந்ததி ராய் குழந்தையாக இருந்தபோதே முடிவுக்கு வந்தது. சிறு வயதில் தன் தாயோடு கேரளாவுக்கு வந்த அருந்ததிராய் தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர். அவரது எழுத்து போராட்ட குணம் அனைத்தும் தாயிடம் இருந்து வந்தவை.

‘என் புத்தகங்களில் என் அம்மாவை பல்வேறு வடிவங்களில் எழுதியிருக்கிறேன். ஆனாலும் அவரை நேரடியாக ஒருபோதும் எழுதியதில்லை’

என்கிறார் ராய். அது ராய்க்கு சற்று கடினமான காரியம். வேதனையானதும் கூட. ஏனெனில், அவருடைய தாய்க்கும் அவருக்குமான உறவு அன்பானதாகவும் அதேவேளை இணக்கமற்றதாகவும் இருந்தது.

மேரி ராய் ஒரு அர்ப்பணிப்புள்ள தலைமை ஆசிரியர். இந்தியா முழுவதும் பெண்களின் வாரிசுரிமைக்கு முன்னுதாரணங்களை அமைத்த ஒரு செயற்பாட்டாளர். ஆனால் ஒரு தாயாக, அவர் நிலையற்றவராகவும் பிடிவாத குணம் கொண்டவராகவும் இருந்தார். முரண்பாடுகளின் மொத்த உருவமாகத் திகழ்ந்தவர்.

அதேவேளை தன் மகளைச் சுதந்திரமாகச் சிந்திக்கவும் வாழவும் தூண்டினார். வளர்ந்தபிறகு ராய் கொண்டிருந்த எண்ணங்களுக்காக, அவள் விரும்பிய சுதந்திரங்களுக்காக அவர் மீது சீற்றம் கொண்டார். ‘மதர் மேரி கம்ஸ் டு மீ’ எனும் இந்த நூல், போராட்டக்கார, லட்சியவாதத் தாய்க்கு ராய் எழுதியுள்ள ஓர் இலக்கிய நினைவஞ்சலி. கிட்டத்தட்ட இதே வாசகம்தான் மேரி ராயின் கல்லறையிலும் பொறிக்கப்பட்டுள்ளது.

‘நம்மில் பெரும்பாலோர், நினைவும் கற்பனையும் கலந்த ஒரு உயிருள்ள, சுவாசிக்கும் கலவை என்பதையும், எது நினைவு, எது கற்பனை என்பதைத் தீர்மானிக்கும் சிறந்த நடுவர்களாக நாம் இருக்க முடியாது என்பதையும் என் வாழ்வில் கற்றுக்கொண்டேன். எனவே, இந்தப் புத்தகத்தை ஒரு நாவலைப் படிப்பது போலப் படியுங்கள்.’ என ராய் நமக்கு அறிவுறுத்துகிறார்.

அவரது வாழ்க்கையைப் போலவே , அவரது தாயின் வாழ்க்கையும் சமரசமற்றதாக இருப்பதை இந்த சரிதையின் மூலம் புரிந்துகொள்கிறோம்.

‘என்னைப் பொறுத்தவரை, திருமதி ராய் எனக்குச் சிந்திக்கக் கற்றுக் கொடுத்தார், பின்னர் என் சிந்தனைகளுக்கு எதிராகக் கொந்தளித்தார். அவர் எனக்குச் சுதந்திரமாக இருக்கக் கற்றுக் கொடுத்தார், என் சுதந்திரத்திற்கு எதிராகக் கொந்தளித்தார். அவர் எனக்கு எழுதக் கற்றுக் கொடுத்தார், ஆனால் நான் எழுத்தாளரானபோது, அந்த எழுத்தாளரை வெறுத்தார். அவர் எனக்குப் புகலிடமாக மட்டுமில்லை. என் புயலாகவும் இருந்தார். என்கிறார் ராய்.

இந்திய அம்மாக்கள் குறித்த புனைவை, ‘மதர் மேரி கம்ஸ் டு மீ’ நூல் மூலம் கலைத்திருக்கிறார் ராய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *