Friday, June 5, 2026

Writer Karikalan

எழுத்தாளர் கரிகாலன்

அரசியல் | பண்பாடு

அரசியல் களங்களில் அப்புறப்படுத்தப்பட்ட மாணவர் சக்தி

இன்றைய இளைஞர்களின் அரசியல், பாரம்பரிய அரசியல் பார்வை கொண்டோரால் தொடர்ந்து கேலி செய்யப்பட்டு வருவதைப் பார்க்கிறோம்.தவெக இளைஞர்கள் ‘தற்குறிகள், அணில்கள்’. நாம் தமிழர் இளைஞர்கள் ‘டம்ளர், ஜோம்பிகள்’ . திமுக இளைஞர்கள் ‘ஊபிஸ்’ .பாஜக இளைஞர்கள் ‘சங்கிகள்’.இன்றை அரசியல் விமர்சனங்கள், கேலிகளாக, மீம்ஸாக மாறிவிட்டன. தவெகவில் மட்டுமில்லை. நாம் தமிழர், திமுக அனைத்துமே இன்று சமூக ஊடக அரசியலையே பெருமளவு நம்பியிருக்கின்றன. இன்று அரசியலின்,உள்ளடக்கம் தோற்றம் இரண்டுமே மாறியிருக்கின்றன. இதற்கு நவதாராளமயம், சந்தைப் பெருக்கம், தனியார்மயம் என பல காரணங்கள் இருக்கின்றன. இவற்றுள் முக்கியமானது இளைஞர்களிடம் காணப்படும் அரசியலற்ற தன்மை. இத்தகைய நிலை எதனால் விளைந்தது?

1967 இல் பேரறிஞர் அண்ணா (திமுக) காங்கிரசை வீழ்த்தி ஆட்சிக்கு வந்தார். அந்தத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில், 25 வயதான மாணவர் தலைவர் பி. சீனிவாசன், பெருந்தலைவர் காமராசரை 1,285 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இன்றைய தவெக வெற்றி போல அன்றைய திமுக வெற்றி இளைஞர்களால் மாணவர்களால் சாத்தியமானது. இந்தி எதிர்ப்பு, தமிழ் உணர்வு, மூடநம்பிக்@கை எதிர்ப்பு, மாநில சுயாட்சி புரிதல், கொண்ட மாணவர்களை அரசியலில் அணிதிரட்டியிருந்தது திமுக. இதன் விளைவாக துரைமுருகன், வைகோ, இல கணேசன், க. சுப்பு, அப்துல்ரகுமான், காளிமுத்து போன்றோர் உருவாகியிருந்தனர்.

ஆனால், அதே திராவிட இயங்கங்கள் தமிழகத்தில் தொடர்ந்து ஆட்சி செய்தபோது, மாணவர்களை அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்தத் தொடங்கினார்கள். எந்த மாணவர் சக்தியை கொண்டு திமுக, அதிமுக வளர்ந்ததோ, அந்த மாணவர் சக்தி தங்களுக்கு எதிராகத் திரும்பக்கூடும்!

என அவை யோசித்ததன் விளைவால் இம்மாற்றம் உருவானது. 1970களின் பிற்பகுதியிலும் 1980களிலும் தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் மாணவர் சங்கத் தேர்தல்கள் நிறுத்தப்பட்டன . முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் தலைமையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்தத் தடை தொடங்கப்பட்டது. பிறகு தொடர்ந்து வந்த திமுக ஆட்சி காலத்திலும் கல்லூரிகளில் தேர்நல் நடத்தப்படவில்லை. திராவிட இயக்க ஆட்சிகளின் போதுதான் கல்வி தனியார்மயமாதல் பெருமளவில் நடந்தது. பாஜக ஆளக்கூடிய தலைநகர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால்நேரு பல்கலைக் கழகத்தில் (jnu) பாஜகவின் சனாதன அரசியலை எதிர்த்து மாணவர்கள் கருத்தரங்குகள், போராட்டங்கள் நடத்துகின்றன. திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்த தமிழ்நாட்டில் நிலை என்ன?

சென்னை ஐஐடியில் அம்பேத்கர் படிப்பகத்துகத்துக்கு தடை விதித்தபோது, மாணவர்களின் கிளர்ச்சியை திமுக ஆதரித்தது. அதேவேளை சென்னைப் பல்கலைக் கழகம், மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் அம்பேத்கர் படிப்பகங்களை உருவாக்க திராவிட அரசுகள் முனைப்பு காட்டினவா?

இன்றைய பல நிகர்நிலைப் பல்கலைகள், சுயநிதிக் கல்லூரிகள், திமுக, அதிமுக பின்னணி கொண்டவை. ஏ.வ.வேலு, ஜெகத்தரட்சகன், பொன்முடி, எம்ஆர்கே போன்றோர் நடத்தும் கல்வி நிறுவன விழாக்களில் பேசுவதற்கு, ஆ. ராசா, திருச்சி சிவா, தமிழச்சி தங்கபாண்டியன் போன்றோர் அழைக்கப்படுகிறார்களா?

இங்கெல்லாம் விஜய் டிவி புகழ் ராமர், மதுரை முத்து, வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர் போன்றோர்தாம் அழைக்கப்படுகிறார்கள். இவை நவதாராளவாத பொருளாதாரத்தின் விளைவுகள். திமுகவோ அதிமுகவோ இன்று கொள்கைகளை நம்பி இல்லை. அது கல்வித் தந்தைகளையும் ரியல்எஸ்டேட் வள்ளல்களையும், கனிமவள மாஃபியாக்களின் கொடையையும் நம்பி உள்ளன. இங்கு எவ வேலு, கேஎன் நேரு , லீமா ரோஸ், ஆதவ் அர்ஜுனா ஆகியோர்களுக்கிடையே பெரிய வித்தியாசமில்லை.

இன்று ஓரளவாவது இலக்கியம், அரசியல், கலை இவை குறித்து விழிப்புணர்வு இருக்கிறதென்றால் அது விசிக அனுதாபிகளாக உருவெடுத்திருக்கும் தலித் மாணவர்களிடமும், பொதுவுடமை கோட்பாட்டில் ஆர்வம் கொண்ட SFI மாணவர்களிடமும்தாம்.

இன்றைய மாணவர்களிடம் அரசியல் உணர்வு இல்லாமல் இல்லை.பிஇ படித்துவிட்டு சொமோட்டோ பணியாளராகும்போது, ஓலா ஓட்டும்போது, நிச்சயம் அவர்களுக்கு ஓர் அரசியல் தேவைப்படுகிறது.

அது..

‘ராவண மவன்டா, ஒத்தையில் நிக்குற யமன்டா

அத்தன பிம்பமும் அவன்டா,வா வந்து தொடுடா’

என ரீல்ஸ் போடும் அரசியல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *