ரூபி கவுர் – அன்பின் மகத்துவத்தை எழுதுபவர்
இன்ஸ்டா 20
2. ரூபி கவுர் – அன்பின் மகத்துவத்தை எழுதுபவர்
இன்ஸ்டாகிராம் கவிதைகளின் இலக்கிய மதிப்பு குறித்த இரண்டு கூற்றுகள் உண்டு. சிலர் இன்ஸ்ட்டாவை கவிதையின் மரணம் என்கிறார்கள். சிலர் அதை கவிதையின் சனநாயகமயமாக்கல் என்கிறார்கள். இக் கூற்றுகளிவ் உண்மை இருக்கிறதா? இன்ஸ்ட்டா கவிதைகள் அறிவார்ந்த கவனத்திற்குத் தகுதியானவையா? என விவாதிக்க வீண்டிய காலத்தில் இருக்கிறோம்.
கவிதைகள் எளிமையானவை என்பதால் அல்லது மிகவும் எளிதில் தொடர்புபடுத்தக்கூடியவை என்பதால் அவை இலக்கியத் தரமற்றவை ஆகிவிடுமா? என்கிற கேள்வியையும் இன்ஸ்டா கவிதைகள் உருவாக்கியிருக்கின்றன. இலக்கிய படைப்பு மரபுகளிலிருந்து விலக்கப்பட்ட ஒரு குழுவாக இன்ஸ்டா கவிஞர்கள் இருந்த நிலை இன்று மாறியிருக்கிறது. இன்ஸ்டா கவிதைகளை கல்வித்துறை வழியாக ஆராயும் Reading #Instapoetry: A Poetics of Instagram’ என்கிற நூலே இதற்கு சாட்சி. குறிப்பாக பெண்கள் இன்ஸ்டாவில் எழுதி பிரபலமடைவதும் , இன்ஸ்டா கவிதைகள் குறித்த பார்வையை வடிவமைப்பதில் தடையை உருவாக்குகிறது.
பெண்களின் எழுத்து இழிவுபடுத்தப்பட்டதற்கு நீண்ட வரலாறு உண்டு. வரலாறு முழுவதும் பெண்களின் எழுத்தைப் போலவே இன்ஸ்டாகவிஞர்களின் எழுத்தும் பல வழிகளில் இழிவுபடுத்தப்படுகிறது. கலைத்திறன் என்ற அதிகாரப்பூர்வ போர்வையின் கீழ், ஏற்கனவே ஓரங்கட்டப்பட்ட குரல்களை மேலும் ஒடுக்குவதாகத்தான் இன்ஸ்டா கவிதைக்கான எதிர்ப்பையும் கருதவேண்டியிருக்கிறது.
டிஜிட்டல் தளங்களின் விரைவான விரிவாக்கம், பெண்களின் இலக்கிய வெளிப்பாட்டுக் களத்தில் ஒரு ஆழமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டா கவிதையின் தோற்றம் பெண் கவிதை மரபுகளை மறுவரையறை செய்யவும், பெண்ணிய உரையாடலை வலுப்படுத்தவும் உதவி வருவதைக் காண்கிறோம். இதன் தொடர்ச்சியாக டிஜிட்டல் பெண்ணியம், டிஜிட்டல் இனவரைவியல் போன்ற ஆய்வுகள் வளர்ந்து வருகின்றன. பெண்கவிஞர்கள் தம் இன்ஸ்ட்டா கவிதைகள் வழி மனக்காயம், அடையாளம், பாலின அடிப்படையிலான வன்முறை, மற்றும் மனநலம் போன்ற பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தியுள்ளனர். இன்ஸ்ட்டா இந்த வகையில் பெண் எழுத்தாளர்களின் குரலையும் செயல் திறனையும் மறுவடிவமைத்து, சமகாலத்தில் பாலின நீதி மற்றும் படைப்புச் சுதந்திரத்திற்கான பரந்த வினையூக்கியாகச் செயல்படுகிறது. விளைவு , நியூயார்க் நகரின் பார்ன்ஸ் அண்ட் நோபல் புத்தகக் கடையில் கவிதைப் பிரிவில் கீட்ஸ் மற்றும் லோர்காவின் படைப்புகளுக்கு அருகே ரூபி கவுரின் கவிதை நூல்களும் அடுக்கப்பட்டிருக்கின்றன.
ரூபி கவுர் அக்டோபர் 4, 1992, பஞ்சாப்பில் பிறந்தவர். அவர் தனது நான்கு வயதில் குடும்பத்துடன் கனடாவிற்கு குடிபெயர்ந்து, ஒன்டாரியோவில் வளர்ந்தார். தற்போது டொராண்டோவில் வசித்து வருகிறார். நிகழ்த்து கலைஞராகவும் கவிஞராகவும் புகழ்பெற்றவர். தன் முதல் கவிதைத் தொகுப்பான ‘மில்க் அண்ட் ஹனி’யை, 2014-ல் அவரே பதிப்பித்து வெளியிட்டார். 2015-ல், இது ஆண்ட்ரூஸ் மெக்மீல் பதிப்பகத்தால் மீண்டும் வெளியிடப்பட்டது. தற்போது இந்நூல் உலகளவில் 35 லட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி, சுமார் 40 வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஹோமரின் ‘தி ஒடிஸி’க்குப் பிறகு ரூபி கவுரின் முதல் கவிதைத் தொகுப்பே அதிகம் விற்பனையாகும் நூலாக மாறியுள்ளது.
4.5 மில்லியன் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பாளர்களுடன் மிகவும் பிரபலமானவராகத் தோன்றும் கவுரை, அவரது நிழற்பட பதிவொன்றின் வழியாகத்தான் கவனித்தேன். மாதவிடாய்ப் படுக்கையில் இருக்கும் ஒரு புகைப்படமது. அவரது கால்சட்டையிலும் படுக்கை விரிப்பிலும் மாதவிடாய்க் கறைகள் . அந்தப் புகைப்படம் இரண்டு முறை நீக்கப்பட்டது. ‘என் உடலை உள்ளாடையுடன் பார்க்க விரும்பும், ஆனால் ஒரு சிறு கசிவைக்கூட ஏற்றுக்கொள்ளாத ஒரு பெண் வெறுப்புச் சமூகத்தின் முடிவு’ என அதைக் கடுமையாகச் சாடியிருந்தார் கவுர் . அதற்குப் பிறகு சிறிய காலத்திலேயே இன்ஸ்ட்டாவில் அவர் வைரலாகி இருந்தார். லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு ஒரு தெற்காசிய பெண்ணியவாதியின் அடையாளமாகவும் மாறியிருந்தார்.

அவரது ‘மில்க் அண்ட் ஹனி’ தொகுப்புக்குப் பிறகு , ரூபி கவுரின் கவிதைகள் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு ஆறுதலை, ஊக்கத்தை வழங்கின. அவை உணர்வுப்பூர்வமான உண்மையின் ஆதாரமாகத் திகழ்ந்தன.
‘மில்க் அண்ட் ஹனி’ , ‘தி சன் அண்ட் ஹர் ஃப்ளவர்ஸ்’ , மற்றும் ‘ ஹோம் பாடி’ ஆகியவை உலகுக்கு காதலின் புதிய வழிகளைத் திறந்துவிட்டன. ஆழமாகக் காதலித்தவர்களும் தங்களைத் தாங்களே நேசிக்கக் கற்றுக்கொள்பவர்களும் ரூபி கவுரைக் கொண்டாடத் தொடங்கினர். அவரது கவிதை நூல்கள் காதலர் தினப் பரிசாகின. நவீன காதலின் புலன் உணர்வு, காதல், பேரார்வம் மற்றும் காதலின் ஆட்கொள்ளும் தன்மையைப் படம் பிடிப்பவையாக அவரது கவிதைகள் விளங்குகின்றன.
சமீபமாக தனிமையை அதிகம் விரும்புகிற சூழல் . ரூபி அருகில் வந்து ‘தனிமை என்பது, உங்களுக்கு நீங்களே மிகவும் தேவைப்படுகிறீர்கள் என்பதற்கான ஓர் அறிகுறி.’ என்றார். சுய அன்பை அதிகம் எழுதியவர். அதனால்தான், ‘உன்னை உடைத்தவர்களின் காலடியில் குணமடைதலைத் தேடாதே.’ தனக்குத்தானே ஆறுதலை வழங்கிக் கொள்ள முடிகிறது அவரால். இது நம் காலத்தின் மீள்திறனுக்கான புதிய கவித்துவமுறை. உறவில் இருந்து வெளியேறுவதற்கு அவர் கூறும் காரணம் புதியது.
நான் உன்னை நேசிப்பதை நிறுத்தியதால்
உன்னை விட்டுப் பிரியவில்லை
நான் உன்னுடன் இருந்த நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க
என் மீதே எனக்கு அன்பு
குறைந்து கொண்டே போனதால்தான் பிரிந்தேன்.
உண்மையான அன்பின் பகிர்தலுக்கு கௌரவமும், சுயமதிப்பும் தேவைப் தேவைப்படுகிறது. ரூபி கவுர் தன் கவிதைகளில் சுய அன்பு, உருமாற்றும் காதல், சமூக அன்பு என அன்பின் பல நிலைகளைக் காட்சிப்படுத்துகிறார். அவரது கவிதைகளில் சுய அன்பை ஓர் இறுதி இலக்காகவும் ஒருவித எதிர்ப்பாகவும் எழுதுகிறார். உணர்ச்சி ரீதியான புறக்கணிப்பு , அல்லது துஷ்பிரயோகத்தைச் சகித்த பிறகு, தன்னைத்தானே வெறுப்பதைக் களைவது, சுயமதிப்பை உணர்ந்து கொள்வது பற்றி அவருடைய பல கவிதைகள் பேசுகின்றன. கவுர் அடிக்கடி பெண் உடலின் அழகை வெளிப்படுத்துகிறார். பெண் உடலை ஒரு போர்க்களமாகக் கருதாமல் , இல்லமாகக் கருதுமாறு வாசகர்களிடம் வலியுறுத்துகிறார். கோபம் , வலி, குழப்பம் போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த துன்புறுத்தும் காதல் உறவுகளை அவர் அம்பலப்படுத்துகிறார். காயப்படுத்தப்பட்டு, பயன்படுத்தப்பட்ட பிறகு, ஆரோக்கியமான, அமைதியான மற்றும் நிலையான அன்பிற்குத் திரும்புவதில் உள்ள கடினமான மாற்றத்தையும் அவரது கவிதைகள் எடுத்துக்காட்டுகின்றன.
ஆரோக்கியமான அவரது காதல் படைப்புகள், உடல் ரீதியாக விரும்பப்படுவதை விட, மென்மையான உறுதிப்படுத்தல், பரஸ்பர மரியாதை மற்றும் ‘நேர்த்தியானவர்’ என்று அழைக்கப்படுவதில் கவனத்தை செலுத்துகின்றன. குடும்பம், நண்பர்கள் மற்றும் பிற பெண்களின் அன்பு இல்லாமல் வாழ்வது சாத்தியமில்லை என்றும் கவுர் வலியுறுத்துகிறார். அவரது எழுத்துக்கள் பெரும்பாலும் தாய்மார்கள் மற்றும் குடியேறிய முன்னோர்களின் தியாகங்களையும் அன்பையும் போற்றுபவை. குடும்பத்தை உணர்வுப்பூர்வமான வளர்ச்சியின் அடித்தளமாகக் கருதுபவை.
அதேவேளை, கவுரின் கவிதைகளின் எளிமையான தன்மையாலும் தன்னிச்சையாக வரிகளைப் பிரித்து அதை கவிதை என்று அழைப்பதாலும், அவை கேலிக்கு உள்ளாக்கப்படுவதும் நடைபெறுகின்றன. எளிதில் அணுகக்கூடிய அவரது கவிதைகள், வாசிப்போரின் தனிப்பட்ட அனுபவங்களின் நுணுக்கங்களை அழித்து, ஒரே மாதிரி ஆக்குதலுக்கு வழிவகுக்கிறது, என்கிற குற்றச்சாட்டையும் எதிர்கொள்கின்றன.
ஆனாலும், கவுரின் கவிதைகள் அதன் இயல்பான, நேர்மையான, தனித்துவமான தன்மைக்காகப் போற்றப்படுகின்றன. எளிதில் தொடர்புபடுத்தக்கூடிய அதன் தன்மையால்தான் அவரது கவிதைகள் இவ்வளவு எளிதாக ஊடகங்களில் பரவுகின்றன . தெற்காசியப் பெண்களின் அதிகாரப்பூர்வமற்ற செய்தித் தொடர்பாளராகத் தன்னை முன்னிறுத்துவதன் மூலம், கவுர் ஒரு கடுமையான, மேட்டுக்குடி இலக்கியக் கோட்டையை எதிர்த்துப் போராடுகிறார். தெற்காசிய பன்முகத்தன்மையின் தனித்த பாதுகாவலராகத் தன்னைச் சித்தரிக்கிறார். அதே வேளை, தெற்காசியப் பெண் அனுபவத்திற்குள் இருக்கக்கூடிய ஏராளமான பன்முகத்தன்மையை கவுர் புறக்கணிப்பதையும் நாம் ஏற்கவேண்டி உள்ளது. கவுரின் கவிதைகளில் அவரது பஞ்சாபி, சீக்கியப் பின்னணிக்குரிய இனவரைவியல் பண்புகளைக் காணமுடியாததால்தாம், அவை பரந்த மேற்கத்திய பார்வையாளர்களைக் கவர முடிகிறது.
கவுரின் கவிதைகள் தீவிரமான தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவதாகத் தோன்றினாலும், அதன் அடிநாதத்தில் தனிப்பட்ட அல்லது அந்தரங்கமான எதுவும் இருப்பதில்லை; அதன் உணர்ச்சியும் ஆளுமையும் வாசகரின் புரிதலால் வழங்கப்படுகிறது. அவரது கவிதைகள் அனைவருக்கும் எதற்கும் பொருந்தக்கூடியவை, எளிதில் அணுகக்கூடியவை மற்றும் வெகுஜன நுகர்வுக்காக வடிவமைக்கப்பட்டவை.
மோனிகா ஹார்ட்மேன் எனும் விமர்சகர் குறிப்பிடுவது போல, கவுரின் படைப்புகள் கவிதையை அனைவரும் ரசிக்கும் வகையில் சனநாயகப்படுத்துகின்றன. ஒரு விஷயத்தை அனைவராலும் புரிந்துகொள்ள முடியும் என்பதற்காகவே அது மோசமானது அல்லது தகுதியற்றது என்று ஆகிவிடாது.
இருப்பினும் வசீகரிக்கும் கவிதைக்கு தேவைப்படும் ஏதோ ஒன்று அவரது கவிதைகளில் குறைந்திருப்பதையும் உணர முடிகிறது. அவரது கவிதைகளில் காணப்படும் உடனடித் தெளிவும் நேரடித்தன்மையும், அவற்றைப் புரிந்துகொள்ள அதிக சிந்தனை தேவையில்லை எனும் நிலையை உருவாக்குகின்றன. அவர் உருவகங்களை அரிதாகவே பயன்படுத்துகிறார். அவரது உவமைகளும் உருவகங்களும் வாசகருக்கு உடனடியாகப் விளக்கப்படுகின்றன. போலவே, அவரது சில கவிதைகளில் இலக்கிய அம்சங்கள் குறைந்து உண்மை மற்றும் அறிவுரைக் கூற்றுகளாகத் தோன்றுகின்றன.
எல்லாம் மிக வேகமாக நகரும் காலத்தில் , கவிதையின் மீது அக்கறை கொள்ள ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பது இருக்கட்டும். நேரத்தைக் கண்டுபிடிப்பதே கடினமாக இருக்கிறது. இந்த இடத்தில்தான் ரூபி கவுர் தன் கவிதையை விரைவாகப் படித்து, லைக் அல்லது ஒரு கருத்தை இட்டுவிட்டு, பிறகு நமது பரபரப்பான வாழ்க்கையைத் தொடர அனுமதிக்கிறார். எப்படியோ நமது அறிவை விரிவுபடுத்தி, உலகத்தைப் பற்றிய நமது புரிதலை ஆழப்படுத்திவிட்டோம் என்கிற திருப்தியும் நமக்கு ஏற்படுகிறது. ஆனாலும் கவிதைகள் மீண்டும் மீண்டும் படிக்கப்பட வேண்டும் எனும் எண்ணத்தைக் கோருபவை.
முதல் வாசிப்பிலேயே ஒரு கவிதையை நம்மால் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம். சில வேளை நம்மால் , ஒரு கவிதையை புரிந்துகொள்ள முடியாமலே போகலாம். கவிதைக்குள் ஆழமாகச் செல்வதில் உள்ள மர்மமும் வியப்பும்தான் கவிதையை மிகவும் ரசிக்கத்தக்கதாக ஒன்றாக வைத்திருக்கிறது. எதிர்பாராத ஓர் உருவகம் உலுக்கும் ஒரு படிமம், உலகத்தை நம்மால் எதிர்பாரத கோணத்தில் பார்க்கக் கற்றுக் கொடுக்கிறது. நம்மை மாற்றியமைக்கவும் செய்கிறது.
இன்ஸ்ட்டா போன்ற சமூக ஊடகங்களில் கவிதைகள் எழுதுபவர் அதை தனது வெளிப்பாட்டு அழகியலில் இருந்து உருவாக்குகிறாரா? அல்லது பின் தொடர்பவர்களின் விருப்பங்களை நிறைவு செய்வதற்காக எழுதுகிறாரா? எனவும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. ரூபி கவுர் மட்டும் அல்லர். பலருடைய இன்ஸ்டா கவிதைகள் ஓர் உடனியான குணப்படுத்துதலை, தற்காலிக ஆறுதலை , வழங்குவதில் திருப்தியடைகின்றன. கவுரின் கவனம் எழுதுபவரை விட வாசிப்பவர் மீதே உள்ளது. இத்தகு கவிதைகள் சிந்திப்பதற்காக அல்லாமல் நுகர்வதற்காக வடிவமைக்கப்படுபவை.
அதேவைளை சில்வியா பிளாத் போன்ற கவிஞர்கள் ரூபி கவுருக்கு முன்னோடிகளாகத் திகழ்ந்திருக்கிறார்கள். அவர்களது ஒப்புதல் வாக்குமூலக் கவிதைகள் பலவும், இலக்கிய அந்தஸ்த்தைப் பெற்றவை. தனிப்பட்ட, வேதனையான வாழ்க்கை அனுபவங்களை உண்மைகளாக மாற்றும் அத்தகு தன்மை கவுரிடமும் இருப்பதை மறுக்க முடியாது. ரூபி கவுரின் கவிதைகள், குறைந்தபட்ச சொற்களைக் கொண்டு ஆழமான மனிதப் பிணைப்பை உருவாக்குபவை. உணர்வுச் சிக்கனம், காட்சிப் பின்னல் மற்றும் தாள ஒத்திசைவு போன்ற இலக்கிய நுணுக்கங்களைக் கொண்டவை. ஆழ்ந்த உணர்வுகளை வெளிப்படுத்த அவர் மிகக் குறைவான வார்த்தைகளையே பயன்படுத்துகிறாள். இந்த உத்தி ஒரு கூர்மையான கத்தியைப் போன்றது. அது தேவையற்ற அலங்காரங்கள் இன்றி, துக்கம், அன்பு மற்றும் உயிர் பிழைத்தல் ஆகியவற்றின் ஆணிவேரை நேரடியாகத் தாக்குகிறது. அவரது வரிகள் நேரடியான உரையாடலைப் போல ஒலித்தாலும், அவை தனித்துவமான துடிப்பைக் கொண்டுள்ளன. உரக்கப் பேசுவதற்காகவே அவை எழுதப்பட்டிருப்பதால், அவரது படைப்பைப் பண்டைய வாய்மொழிக் கவிதை மற்றும் கதைசொல்லலோடும் இணைக்கலாம்.
எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். நம்மூர் சுஜாதா போன்றவர் ரூபி கவுர். தன் கவிதைகளால் மில்லியன் கணக்கான வாசகர்களின் கவனத்தை, கவிதையின் பக்கம் திரும்ப வைத்திருக்கிறார். இது போதாதா?
ரூபி கவுர் கவிதைகள்
~
நான் கலை நிறைந்த அருங்காட்சியகம்
ஆனால் நீ உன் கண்களை மூடிக்கொண்டிருந்தாய்.
என் கருத்துக்கள்
என் அழகைக் குறைக்கின்றன
என்பதால் என்னை
அமைதியாக இருக்கச் சொல்கிறாய்
ஆனால் என்னை அணைப்பதற்காக
என் வயிற்றில் நெருப்புடன்
நான் படைக்கப்படவில்லை
என்னை எளிதில் விழுங்குவதற்காக
என் நாவில் லேசான தன்மையுடன்
நான் படைக்கப்படவில்லை
நான் பாதி கத்தி பாதி பட்டு
என கனமாகப் படைக்கப்பட்டேன்
மறப்பது கடினம்
பின்தொடர்வதும் எளிதல்ல.
உன்னை உடைத்தவர்களின்
காலடியில் குணமடைதலைத் தேடாதே.
நீங்கள் உங்களை
எப்படி நேசிக்கிறீர்களோ
அப்படியேதான் மற்றவர்களுக்கும்
உங்களை நேசிக்கக்
கற்றுக்கொடுக்கிறீர்கள் .
ஒவ்வொரு முறையும்
உங்கள் மகளிடம்
அன்பின் காரணமாகவே
அவளிடம் கத்துவதாகச் சொல்லும்போது,
கோபத்தையும் அன்பையும் குழப்பிக்கொள்ள
அவளுக்குக் கற்றுக்கொடுக்கிறீர்கள்
உங்களைப் போலவே தோற்றமளிக்கும்
ஆண்களை அவள் நம்பி வளரும் வரை
இது ஒரு நல்ல யோசனையாகத் தோன்றலாம் .
என் உள்ளத்தின் வெறுமையை நிரப்ப
நீ எனக்கு வேண்டாம்
நானே நிறைவாக இருக்க விரும்புகிறேன்
ஒரு நகரத்தையே ஒளிரச் செய்யும் அளவுக்கு
நான் பூரணமாக உணர விரும்புகிறேன்
அதன்பிறகு நீ எனக்கு வேண்டும்,
ஏனென்றால் நாம் இருவரும் இணைந்தால்
அதைத் தீக்கிரையாக்கிவிட முடியும் .
உங்கள் கலை என்பது , உங்கள் படைப்பை
எத்தனை பேர் விரும்புகிறார்கள் என்பதைப் பற்றியது அல்ல;
உங்கள் கலை என்பது ,
உங்கள் இதயம் அதை விரும்புகிறதா,
உங்கள் ஆன்மா அதை விரும்புகிறதா என்பதைப் பற்றியது.
அது நீங்கள் உங்களுக்கு
எவ்வளவு நேர்மையாக இருக்கிறீர்கள் என்பதைப் பற்றியது,
மேலும் பிறருடன் எளிதில் ஒன்றிப்போவதற்காக
நீங்கள் ஒருபோதும் நேர்மையைப் பலிகொடுக்கக் கூடாது.
உன் வலியின் ஊடே வலிமையாக இரு
அதிலிருந்து மலர்
என் வலியிலிருந்து மலர்கள் மலர
நீ எனக்கு உதவியிருக்கிறாய்
அதனால், அழகாக மலர்
அபாயகரமாக உரக்க மலர்
மென்மையாக மலர்
உனக்குத் தேவையானபடி மலர்
வெறுமனே மலர்.
எந்தப் புத்தகத்திற்கும்
சுமக்கத் துணிவில்லாத கதைகளை
எங்கள் முதுகுகள் சொல்லும்
இந்த உலகம் உனக்கு
மிகுந்த வலியைத் தருகிறது
ஆனால் நீயோ அதிலிருந்து
தங்கத்தை உருவாக்குகிறாய்
அதைவிடத் தூய்மையானது
வேறு எதுவும் இல்லை.
(ரூபி கவூரின் இன்ஸ்டாகிராம் கணக்கு – rupikaur_ )