திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா 2026
திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா சமீபத்தில் ( மார்ச் 13, 2026 ) மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்மசோதா, ‘திருநங்கையர் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019’-ஐத் திருத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், 2014 ஏப்ரல் 15 இல், NALSA வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைப் புறக்கணிப்பதாகவும் இருக்கிறது.
திருநங்கைகள், தங்கள் மரபுசாரா பாலின அடையாளத்தின் காரணமாக, சமூகத்தால் களங்கம், வன்முறை மற்றும் பாகுபாட்டிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். NALSA தீர்ப்பு இந்த உண்மையைக் கருத்தில் கொண்டு, பாலின அடையாளத்தை, ‘பிறப்பின்போது ஒதுக்கப்பட்ட பாலினத்துடன் ஒத்துப்போகலாம் அல்லது ஒத்துப்போகாமலும் இருக்கலாம். இது ஒரு நபரின் பாலினம் குறித்த ஆழ்ந்த, அக மற்றும் தனிப்பட்ட அனுபவமாக இருக்கலாம்.’ எனக் குறிப்பிட்டது.
இந்தப் புதிய திருத்த மசோதா, ஆண், பெண் எனும் இருமை நிலையை ஏற்காதவர்களுக்குத் தேவையான நுணுக்கங்கள் எதையும் கொண்டிருக்கவில்லை. ஒரு திருநங்கையை அல்லது திருநம்பியை, ‘முழுமையாகப் பெண்ணும் அல்ல, முழுமையாக ஆணும் அல்ல’ , ‘பெண் அல்லது ஆணின் கலவை’ அல்லது ‘பெண்ணும் அல்ல, ஆணும் அல்ல’ என்று வரையறுக்கிறது இப்புதிய மசோதா. இதன் மூலம், ஒரு தனிநபர் தன் பாலின அடையாளத்தைத் தேர்வு செய்யும் உரிமையை இது கட்டுப்படுத்துகிறது.
திருநங்கைகளை ‘ஆண்’ மற்றும் ‘பெண்’ ஆகியவற்றின் கலவையாக வரையறுப்பதன் மூலம், இந்த மசோதா ‘அவர்கள் முழுமையற்றவர்கள்’ என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இந்த மசோதாபடி ஒருவர் தன் பாலின அடையாளத்தை மருத்துவ பரிசோதனையின் மூலம் நிருபிக்க வேண்டும். ஒரு மருத்துவ அதிகாரி, மற்றும் மனநல மருத்துவர் அடங்கிய மாவட்டப் பரிசோதனைக் குழுவால் திருநங்கைகளின் அடையாளம் சரிபார்க்கப்பட்டு நீதிபதிக்கு ‘பரிந்துரைக்க’ வேண்டும். திருநங்கை வெறுப்பு நிறைந்த ஒரு அமைப்பில் மருத்துவர் குழுவிடம் தனது அடையாளத்தை நிரூபிப்பது அவர்களுக்கு கடினமானதாக, அவமானகரமானதாக, பிற்போக்கானதாக இருக்க வாய்ப்புண்டு. சுருக்கமாகக் கூறுவதெனில் , ஒருவரது சுய அடையாளம் அவரது கைகளில் இல்லாமல் இருப்பது, திருநங்கைகளின் உரிமை இயக்கத்திற்கு எதிரானது.
நமது சட்டங்கள் பெருமளவு ஆண் , பெண் எனும் பாலின இருமை கோட்பாட்டின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. இந்நிலையில் சில விசயங்களில் LGBTQI சமூகத்துக்கு தெளிவான வழிகாட்டல்களை இம்மசோதா வழஙாகத் தவறி உள்ளது.
அரசுப் பணியில் இருக்கும், பிறப்பால் பெண்ணான ஒருவர் , தன்னை ஆணாக அடையாளப்படுத்திக் கொண்டால், அவர் தனது வேலையை இழப்பாரா? அறுவை சிகிச்சைக்கு முந்தைய திருநம்பி ஒருவர், தனது உயிரியல் பாலினத்திறாகு ஏற்ப அடையாளம் கொண்ட ஒரு சிஸ்ஜெண்டர் பெண்ணை சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்ய முடியுமா? திருநங்கைகள் சட்டப்பூர்வமாக ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடியுமா? திருநங்கைகள், தங்களைப் பெண்களாக அடையாளப்படுத்திக் கொண்டு, திருநங்கைகளாக அல்லாமல் பெண்களுக்கான வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியுமா? குடும்ப வன்முறைச் சட்டத்தைத் திருநங்கைகள் பயன்படுத்த முடியுமா? போன்ற சந்தேகங்களை இம்மசோதா தீர்க்கவில்லை.
திருநங்கைகளின் விசயத்தில் கற்பழிப்புக்கு ஒரு தெளிவான வரையறையை இது வழங்கவில்லை. வேலைவாய்ப்பு இல்லாமை, பொதுச்சமூகத்தின் நிராகரிப்பு போன்றவற்றால் பெரும்பாலான திருநங்கைகள் பிச்சை எடுக்கும் சூழல் நிலவுகிறது. திருநங்கைகளை பிச்சை எடுக்கத் தூண்டினால் தண்டனை உறுதி என்கிறது இப்புதிய மசோதா. சமூகத்தில் பிற ஆண், பெண் அனுபவிக்கும் அடிப்படை உரிமைகளை LGBTQI சமூகத்துக்கும் சமமாக உறுதி செய்யும் வகையில் இப்புது மசோதா திருத்தியமைக்கப்பட வேண்டும்.