Monday, September 7, 2026

Writer Karikalan

எழுத்தாளர் கரிகாலன்

தொடர்

நிகிதா கில் – அநீதிக்கு எதிரான கவிதைச் சீற்றம்

இன்ஸ்டா 20

1. நிகிதா கில் – அநீதிக்கு எதிரான கவிதைச் சீற்றம்

கவிதை படிப்பது குறித்து ஒரு மரபார்ந்த சித்திரம் நமக்கு இருக்கிறது. ஒரு மழை நாள். மேசையில் தேநீர்க் கோப்பை. அதைப் பருகியபடி கவிதை வாசிப்பது. இப்போது கவிதையைத் திறம்பட வாசிப்பதற்கு வேறு வழிகளும் சாத்தியமாகி உள்ளன. அவற்றுள் ஒன்று இன்ஸ்டாவில் கவிதைகள் வாசிப்பது. இன்ஸ்டாகிராம் கவிதைகள், ரூபி கவுர், டோனா ஆஷ்வொர்த் போன்ற எழுத்தாளர்களைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றுள்ளது. ஆயிரக்கணக்கான பின்தொடர்பவர்களைப் பெற்றுத் தந்துள்ளது. கணிசமான அளவில் பொருளையும் ஈட்டித் தந்துள்ளது.
இன்ஸ்டா கவிதையின் ஈர்ப்புக்கு முக்கியக் காரணம் அதன் அணுகல்தன்மை. படைப்பாளருக்கும் வாசகர்களுக்கும் இடையே நேரடித் தொடர்பை இன்ஸ்ட்டா சாத்தியமாக்குகிறது. கவிதைக்கான தங்கள் எதிர்வினைகளை வாசகர்கள் வெளிப்படுத்தவும் கவிஞரோடு உரையாடவும் முடிகிறது.

பழமைவாத விமர்சகர்கள் இன்ஸ்டா கவிதைகளுக்கு இலக்கிய அந்தஸ்த்து அளிக்க தயங்குகிறார்கள். அதேவேளை பெங்குயின், ஓரியன் மற்றும் சைமன் அண்ட் ஷுஸ்டர் போன்ற பாரம்பரியப் பதிப்பகங்கள், இன்ஸ்டா கவிஞர்களின் நூல்களை வெளியிடத் தயங்குவதில்லை. போலவே இன்ஸ்டா கவிஞர்கள் இலக்கியப் பரிசுகளால் அங்கீகரிக்கப்படுவதும் நிகழ்ந்தேறுகின்றன. நிகிதா கில், போன்றோர் குட்ரீட்ஸ் சாய்ஸ் விருதுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றனர்.

ஆகவே இன்ஸ்டா கவிதைகளின் இலக்கிய அந்தஸ்து குறித்து பேசுவதைவிட அது இளைஞர்களிடம் கவிதையின் மீது ஆர்வத்தைப் புதுப்பித்துள்ளதை கவனிக்க வேண்டும். வாசிப்பின் ருசியை ஜென் Z சமூகத்திடம் அறிமுகப்படுத்தி அவர்களை நூலகம் நோக்கி செல்லும் ஆர்வத்தையும் இன்ஸ்டா உருவாக்கி உள்ளது. இப்போது கவிதைகள் சமூக ஊடகத் தளத்திற்குள் மட்டும் கட்டுப்பட்டிருக்கவில்லை. அது புத்தகங்கள், சமூக ஊடகங்களைத் தாண்டி அவற்றை சட்டைகள், காஃபி குவளைகள் மற்றும் தோலில் பொறிக்கப்பட்ட டாட்டூ வடிவங்களிலும் காணமுடிகிறது.

இன்ஸ்டா கவிதைகள் படங்களுடன் காணப்படுபவை./ நிறுத்துக்குறிகள்/ பொதுவாகக் குறைவாகவே இருக்கும். இதன்பொருட்டே இவை கவிதை இயலின் ஒரு துணை வகையாக முக்கியமற்றவையாக, தீவிர கவிதை /விமர்சகர்களால்/ கருதப்படுகின்றன. இருப்பினும், இதன் பிரபலத்தையும், கவிதை விற்பனைக்கு அளிக்கும் ஊக்கத்தையும், இளைஞர்கள் இதன் மீது காட்டும் அன்பையும் கருத்தில் கொண்டு இலக்கிய வர்க்கம் இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இன்ஸ்டாவில் கவிதைகளை முதன் முதலாக எழுதியவர் யார்? என்பதைக் கண்டறிவது சற்று கடினமான செயல். கம்போடிய-ஆஸ்திரேலிய எழுத்தாளரான லாங் லீவ் தான் இந்த வெற்றிக் கதைக்கு சொந்தமானவராக இருப்பார், என்பதற்கு வலுவான ஆதாரங்கள் கிடைக்கின்றன . அவர் கவிதைகள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றபோது, ஆண்ட்ரூஸ் மெக்மீல் பதிப்பகம் அவரது ‘லவ் அண்ட் மிஸ்அட்வென்ச்சர்’ என்ற புத்தகத்தை வெளியிட்டது. அப்புத்தகம் 150,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்தது. இந்த வெற்றிக்கதையைத் தொடர்ந்து பிரபலமானவர் ரூபி கவுர்.

11 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகளை விற்று, 11 மாத உலகச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார் கவுர். இவர்கள் வரிசையில் இன்ஸ்டாவில் அதிகம் தேடப்படும் இன்னும் ஒரு கவிஞர் நிகிதா கில். அதிகம் விற்பனையாகும் ஐரிஷ்-இந்தியக் கவிஞர் . இவரது ‘லவ் இன் தி டைம் ஆஃப் கொரோனா வைரஸ்’ கவிதை 20,000 முறைக்கும் மேல் இணையத்தில் பகிரப்பட்டது.

நிகிதா கில் தன்12 வயதில் எழுதத் தொடங்கினார். அவரது படைப்புகள் வெளியீட்டிற்காக 137 முறை நிராகரிக்கப்பட்டன. ஆனாலும் நிகிதாவின் உயிரோட்டமான கவிதைகளும் அழகான சித்திரங்களும் வாசிப்போரின் இதயங்களைக் கொள்ளை கொண்டன. இதுவரை அவர் எழுதியவற்றிலேயே ஆழமான உணர்வுப் பூர்வமான கவிதைகளை ‘தி கேர்ள் அண்ட் தி காடஸ்’ நூலில் தருகிறார். அந்தரங்கமான பருவமடைதலைத் தேடும் கவிதைகளிவை. இன்றைய பெண்ணாக அவர் உருவெடுப்பதில் அவருக்கு நவீன வாசிப்பு உதவியது. இது அவரது கவிதைகளில் , காதலை பெண்ணிய நோக்கில் அணுகும் தன்மையை உருவாக்கியது . இந்திய, கிரேக்கப் புராணங்களை தன் கவிதைகளில் பெண் நோக்கில் மறுவாசிப்புக்கு உள்ளாக்கினார் கில்.

சில்வியா பிளாத், மாயா ஏஞ்சலோ மற்றும் ராபர்ட் ஃப்ராஸ்ட் போன்றோர் கில்லின் மனதில் கவிதையைப் பற்ற /வைத்த/ முன்னோடிகள்.
தேசிய கவிதை தினத்தின் /தூதராக/ செயல்பட்ட பெருமையும் கில்லுக்கு உண்டு. நிகிதா கில்லின் கவிதைகளில் செயல்படும் பெண்ணிய பார்வைக்கு ‘தந்தையர்களே, உங்கள் மகன்களை மறக்க விடாதீர்கள்’ எனும் தலைப்பில் அமைந்த இந்த ஒரு கவிதையே சாட்சி.

‘தங்கள் சாராம்சம் எங்கே உருவானது என்பதையும்,
அவர்களின் உடல்கள்
மிகவும் பலவீனமாக இருந்தபோது,
அவர்கள் ஒரு பெண்ணின் கருப்பையால் பாதுகாக்கப்பட்டார்கள் என்பதையும்
உங்கள் மகன்களை மறக்க விடாதீர்கள்.
அவர்கள் எப்போதாவது
எல்லாப் பெண்களையும் பலவீனமானவர்கள் என்று அழைத்தால்,
அவர்களுக்கு ஓர் இல்லத்தை அளிப்பதற்காகத்
தன் உடல் முழுவதையும் அர்ப்பணித்த
/அவர்கள்/ தாயின் வலிமையை அவர்களுக்கு நினைவூட்டுங்கள்.’

தாய்வழிச் சமூகத்தை மிக எளிமையாக இக்கவிதையில் உருவகப்படுத்துகிறார் நிகிதா கில். பெண்களுக்கான அதிகாரம், குரல் மற்றும் இடத்தை மீட்டெடுப்பதில் தீவிரமாக இயங்குபவை கில்லின் கவிதைகள். ‘ஃபியர்ஸ் ஃபேரிடேல்ஸ்’ மற்றும் ‘கிரேட் காடஸஸ்’ கவிதைத் தொகுப்புகள் செயலற்ற பெண்மைச் சித்தரிப்புகளை நிராகரித்து, தப்பிப் பிழைத்தவர்கள் சுயமாகச் செயல்படும் திறனை மையப்படுத்துபவை. அவரது கவிதைகளில் மென்மையும் சீற்றமும் எதிர்ப்பின் கருவிகளாக இணைந்து செயல்படுகின்றன. பெண்கள் அமைதியாகவும், அடக்கமாகவும் இருக்க வேண்டும் . ஆண்களால் காப்பாற்றப்பட வேண்டும் . போன்ற பாரம்பரியக் கதைகளுக்கு தன் கவிதைகளில் கில் சவால் விடுகிறார். செவ்வியல் இளவரசிகளையும் வில்லிகளையும் கவிதைகளில் சுதந்திரமான முகவர்களாக மாற்றுபவை அவரது கவிதைகள். அவை பரிபூரணத்தை நிராகரிப்பவை. தார்மீக மற்றும் உடல்ரீதியான பரிபூரணத்திற்கான சமூகத்தின் கோரிக்கைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரையும் சிக்க வைக்கும் கட்டுப்பாட்டின் வடிவங்கள் என அவரது படைப்புகள் வாதிடுகின்றன.

ஆண் தெய்வங்களால் வரலாற்று ரீதியாக அரக்கர்களாகப் புறக்கணிக்கப்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளான பாத்திரங்களுக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காக, அவர் கிரேக்க, ரோமானிய மற்றும் இந்துப் புராணங்களை தனது கவிதைகளில் மறுவாசிப்பு செய்கிறார். கடந்த காலத்தை நிகழ்காலத்துடன் இணைக்கும் பின் நவீனத்துவ உத்தியையும் கவிதைகளில் மேற்கொள்கிறார் கில். ‘ஸியஸ், அதன் பிறகு’ போன்ற அவரது கவிதைகள், பண்டைய கால அதிகார துஷ்பிரயோகத்தை நவீன இயக்கங்களுடன் நேரடியாகத் தொடர்புபடுத்துபவை. #MeToo, போன்ற ஆணாதிக்க மேலாதிக்கம் மீண்டும் நிகழக்கூடியது என்பதைக் காட்டுபவை.

அவரது fire கவிதை பரவலாகப் பகிரப்பட்ட கவிதைகளில் ஒன்றாகும். பெண்ணின் கருணையைப் பலவீனமாகப் புரிந்துகொள்வது ஆபத்தானது என்று இக்கவிதையில் எச்சரிக்கிறார் கில். பெண்கள் தங்கள் உள்ளார்ந்த காட்டுத்தனத்தையும் அநீதிக்கு எதிரான சீற்றத்தையும் தட்டி எழுப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

‘அவர்கள் உங்களை மதிக்காதபோதும்,
உங்கள் மென்மையை
உங்கள் பலவீனமாகக் கருதும்போதும்,
உங்கள் கருணையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும்போதும்
நீங்கள் என்ன செய்ய வேண்டும்
என்பதை நினைவில் கொள்ளுங்கள் உங்களுக்குள் உறங்கும்
ஒவ்வொரு டிராகனையும்,
ஒவ்வொரு ஓநாயையும்,
ஒவ்வொரு அரக்கனையும்
நீங்கள் தட்டி எழுப்பி,
ஒரு சாந்தமான மனிதனின்
தோலைப் போர்த்தும்போது
நரகம் எப்படி இருக்கும் என்பதை
அவர்களுக்கு நினைவூட்டுகிறீர்கள்’

என்கிறார் கில்.

மென்மையும் பேரதிர்ச்சியும் ஒன்றுக்கொன்று துணை புரிபவை என்பதை இக்கவிதை நினைவூட்டுவதோடு, பெண்கள் தங்களைத் தாங்களே சுருக்கிக் கொள்வதை நிறுத்திவிட்டு, தங்களின் சுயமதிப்பை வரையறுத்துக் கொள்ளவும் ஊக்குவிக்கின்றன. பெண்களின் இயல்பான கருணையையும் பரிவுணர்வையும், வலிமையின்மை அல்லது முதுகெலும்பின்மை என ஆணாதிக்க அமைப்புகள் தவறாகப் புரிந்துகொள்வதை நிறுத்துமாறு எச்சரிக்கிறது இக்கவிதை . ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் குடியிருக்கும் அசாத்திய சக்தியைக் காட்டுவதற்காக, கில் உறங்கும் ‘டிராகன்’, ‘ஓநாய்’, ‘அரக்கன்’ போன்ற மூர்க்கமான படிமங்களைப் பயன்படுத்துகிறார்.

எல்லை மீறித் தள்ளப்படும்போது தங்கள் பணிவைக் கைவிட்டு, தங்களுக்குள் இருக்கும் உள்மனத் தீயை பெண்கள் எழுப்ப வேண்டும் என வலியுறுத்தும் கவிதையிது. மென்மையான வெளித்தோற்றத்திற்கு அடியில், எதிர்ப்பதற்கான ஒரு மகத்தான, அனல் பறக்கும் ஆற்றல் மறைந்திருக்கிறது. சீண்டப்படும்போது நரகம் எப்படி இருக்கும் என்பதைத் தங்களை ஒடுக்குபவர்களுக்கு நினைவூட்டி, பாதிக்கப்பட்ட நிலையை முழுமையான அதிகாரமாக மாற்றுமாறு பெண்களுக்கு இக்கவிதை அறிவுறுத்துகிறது.

பொழுதுபோக்கு ஊடகமான இன்ஸ்டாகிராமை ஆழமான இலக்கிய ஊடகமாக மாற்றுவதில் கில்லின் பங்கு மகத்தானது. சாதாரணமாகப் பார்ப்பதை அர்த்தமுள்ள வாசிப்பாக உருமாற்றும் சக்தி நிகிதாவின் கவிதைகளுக்கு இருக்கின்றன. தன் கவிதைகளால் இன்ஸ்டாவுக்கு தனித்துவமான கலை அடையாளத்தை உருவாக்கியதுடன், பார்வையாளர்களுடன் ஆழமான தொடர்பையும் ஏற்படுத்தினார்.
சிந்தனைத்திறன் மிக்க இவரது கவிதைகள், வேகமாக நகரும் பதிவுகளுக்கு இடையே ஒரு அமைதியான /இடைவெளியை/ உருவாக்குகின்றன.
இன்ஸ்டாவில் கவிதைகள் எழுதத் தொடங்கிய நிகிதா கில் Wild Embers (2017), Fierce Fairytales (2018), மற்றும் Great Goddesses (2019) உள்ளிட்ட பல பிரபலமான கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டார்.

கவிதை வடிவில் எழுதப்பட்ட அவரது நாவலான ஹெகேட்: தி விட்ச் (2025)] நியூயார்க் டைம்ஸ் அதிகம் விற்பனையாகும் புத்தகங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. அவரது கவிதை நூல்கள் கார்னகி பதக்கத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டன , CLiPPA விருதுக்குத் தகுதிப் பட்டியலில் இடம்பெற்றன . ஜலக் பரிசுக்கான நீண்ட தகுதிப் பட்டியலிலும் இடம்பெற்றன.

தி வீக் ஜூனியர் புக் அவார்ட்ஸ்’ விழாவில்,இவரது ‘ அனிமல் டேல்ஸ் ஃப்ரம் இந்தியா’ என்ற சிறுவர் ஒலிப்புத்தகம் பெரும் பாராட்டுகளைப் பெற்றது. இவரது ‘கன்னிகள், புராணங்கள் மற்றும் அரக்கர்கள்’என்ற நூல் மேடை நாடகமாக /அரங்கேறியது/. பிரிட்டிஷ் நூலகத்திலும் முக்கிய இலக்கிய விழாக்களிலும் இவரது படைப்புகள் நிகழ்த்துக் கலைகளாகவும் மாறின. புகழ்பெற்ற சிதார் கலைஞரும் ஓவியருமான அனுஷ்கா ஷங்கருடன் இணைந்து ‘சிஸ்டர் சுசானா’ மற்றும் ‘இன் ஹர் நேம்’ போன்ற தனிப்பாடல்களுக்கு இசைப் பங்களிப்பும் செய்தார். கலையை குணமளிக்கும் ஒரு கருவியாக முன்னிறுத்தும் நோக்கில், சிறைச்சாலைகள், நூலகங்கள் போன்ற மாற்று இடங்களில் சிகிச்சைசார் கவிதைப் பயிலரங்குகளை வடிவமைத்தார்.

இன்ஸ்டா கவிஞர் என்கிற அடையாளம் அதற்கே உரிய பல அர்த்தங்களைக் கொண்டிருந்தாலும், நிகிதா ஒருபோதும் மேலோட்டமானவர் அல்ல. இளம் உள்ளங்களின் சந்தேகங்களுக்கு அவர் செவிசாய்ப்பவர். உதவி, இலட்சியம், மற்றும் சரியான திசையை நோக்கியவற்றின் மீது கவனத்தைத் திருப்புபவர். உணர்ச்சிப் பொங்குதல்களுக்கு அப்பாற்பட்டு, வாழ்க்கைக்கு உகந்த அறிவுரைக்கு நெருக்கமான ஒன்று அவரிடம் உள்ளது.

தன் கவிதைகளில் உள்ள மனவேதனையின் கலவையுடன், வழிதவறிய இளம் ஆன்மாக்களுக்கு நிகிதா ஒரு வழிகாட்டியாகத் திகழ்கிறார். பிரபல நாவலாசிரியரான நிகேஷ் சுக்லாவுடன் இணைந்து நிகிதா நடத்தும் எழுத்துப் பயிற்சிப் பட்டறைகள், பிரபலம் அடைந்துள்ளன. ‘கவிஞராக இருப்பது என்பது, உலகம் உங்களைத் தொடர்ந்து வியப்பில் ஆழ்த்த அனுமதிக்கும் ஒரு வித்தியாசமான வாழ்க்கையைத் துணிந்து மேற்கொள்வதாகும்’ என்கிறார் நிகிதா கில்.

பெல்ஃபாஸ்டில் பிறந்து, டெல்லி, காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் வளர்ந்தவர் நிகிதா. இத்தகைய நாடோடி வளர்ப்பு முறையும், தனது தொழில் வாழ்க்கையின் சிறப்பம்சங்களும், தனது படைப்புகளுக்கு உத்வேகம் அளிப்பதாகக் கூறுகிறார் நிகிதா. பயணம் என்பது அவருக்கு, என்ன அர்த்தம் தருகிறதோ? அதுதான் அவரது கவிதையாகவும் வடிவம் கொள்கிறது.

கவிதையைப் புனித நாற்காலியில் அமர்த்துவதில் நிகிதாவுக்கு விருப்பம் இல்லை. குறிப்பாக அவர் சிறைச்சாலைகளுக்கு சென்று அங்கிருக்கும் கைதிகளோடு கவிதைகளைப் பகிர்ந்து கொண்டபோது, அவர்களது கவிதை ஆர்வத்தை அறிகிறார். கவிதையை ரசிக்கும் எழுதும் விழைவு எல்லா மனிதர்களுக்கும் இருப்பதை உணர்ந்தார்.

‘மொழி நம் அனைவருக்கும் சொந்தமானது என்பதையும், கலைப்படைப்புகளை உருவாக்கவோ அல்லது மொழியைக் கையாளவோ நீங்கள் ஒரு நிபுணராக இருக்க வேண்டியதில்லை என்பதையும் நாம் மறந்துவிடுகிறோம். படைப்புகளை உருவாக்க விரும்பும் அனைத்து மக்களுக்கும் நாம் அளிக்க வேண்டிய உறுதி இதுதான். அந்தச் சிறை நூலகத்தில், மனித அனுபவத்தின் சிக்கலான தன்மையை எடுத்துக்காட்டி, மிகுந்த நம்பிக்கையுடன் எழுதப்பட்டிருந்த கவிதைகளைக் கண்டபோது நான் நெகிழ்ந்து போனேன். சிறை அறைகளின் குறுகிய எல்லைக்குள் இருந்துகொண்டு, ஜன்னல்கள் வழியே வெளியே பார்த்தவாறு, மீட்பு, சிறு நன்மைகள் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டு, அவற்றுக்கு மிகுந்த பரிவுடனும் அக்கறையுடனும் பதிலளிக்கப்பட்டிருந்தன.

அங்கு நான் வாசித்த கவிதைகளின் கருணையில், நானே தேடிக்கொண்டிருந்த ஒன்றைக் கண்டேன். இறுதியாக ‘கவிதைக்கு உலகை மாற்றும் சக்தி உண்டா?’ எனக் கேட்டால் ‘ஆம்’ என்பதே என் பதில் என்கிறார் நிகிதா கில்.

(நிகிதா கில்லின் இன்ஸ்டாகிராம் கணக்கு – @nikita_gill)

நிகிதா கில் கவிதைகள்

1

நம் எலும்புகளில் கால்சியம்,
இரத்த நாளங்களில் இரும்பு,
ஆன்மாக்களில் கார்பன்,
மூளைகளில் நைட்ரஜன் உள்ளன.
93 சதவீதம் விண் தூசியாலும்,
சுடர்விடும் ஆன்மாக்களாலும் ஆன
நாம் அனைவரும்,
மனிதப் பெயர்களைக் கொண்ட
வெறும் நட்சத்திரங்களே.

2

அவளைப் போன்ற பெண்கள்
ஒரு புயலில் பிறந்தவர்கள்.
அவர்களின் ஆன்மாவில்
மின்னல் இருக்கிறது.
இதயத்தில் இடி இருக்கிறது.
எலும்புகளில் குழப்பம் இருக்கிறது.

3

சில பெண்கள் மனவேதனையும்
கவிதையும் நிறைந்தவர்கள்;
அவர்கள்தான் ஓநாய்களிடமிருந்து
ஓடி ஒளிவதற்குப் பதிலாக
அவற்றைக் காப்பாற்ற முயற்சிப்பார்கள்.

4

இந்த உலகில் துணிவுள்ளவர்களும்,
மனமுடைந்தவர்களும் மட்டுமே
கருணை காட்டுவார்கள்.

5

உனக்குள் ஒளிந்திருக்கும் இருள் இல்லாமல்
நான் உன்னை அடைய மாட்டேன்.
என்னை உருவாக்கும் அந்தப் பைத்தியம் இல்லாமல்
நான் உன்னை
என்னை அடைய விடமாட்டேன்.
நம்முடைய பேய்களால் நடனமாட முடியாவிட்டால்,
நம்மாலும் முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *