Wednesday, April 22, 2026

Writer Karikalan

எழுத்தாளர் கரிகாலன்

அரசியல் | பண்பாடு

இடப்பகிர்வு – திமுக பேண வேண்டிய இணக்கம்

கடந்த 5 ஆண்டுகளில், திமுக ஆட்சியில் பல சங்கடங்களை அனுபவித்தக் கட்சிகள் எனில் அவை இடதுசாரிகளும் விசிக வும்தான்.

தொழிலாளர் வேலை நேரத்தை அதிகப்படுத்த முயன்றது, மின் கட்டண உயர்வு, வேங்கை வயல் பிரச்சனை, மோதல் கொலைகள், லாக்கப் மரணங்கள், துப்புறவுத் தொழிலாளர் பிரச்சனை, ஆணவக் கொலைகள், பாலியல் பலாத்காரங்கள், கள்ளச்சாராய மரணங்கள், இப்படி மக்களை பாதிக்கிற பல பிரச்சனைகளில், இக்கட்சிகளால் நியாயமான எதிர்ப்பைக் காட்ட முடியவில்லை. போராட முடியவில்லை. காரணம், திமுகவோடு இவர்கள் கொண்டிருந்த கூட்டணி உறவு.

மாநில அரசிடம் தம் எதிர்ப்பைக் காட்ட முடியாது போனாலும் இந்தியாவை ஆளும் பாஜக வை எவ்வித சமரசமும் இல்லாமல், சொல்லப்போனால் திமுகவைவிட கடுமையாக எதிர்த்தன இக்கட்சிகள். விஜய் கட்சி தொடங்கியிருக்கிற நிலை. தமிழ் தேசிய நலன், சூழல் அக்கறை, கிராமப் பொருளாதாரம், தமிழ் இறைமை இவை குறித்த கவனத்தை, சீமானின் நாம் தமிழர் ஈர்த்திருக்கும் சூழல், ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை வாக்காளர்களை அதிமுக குறித்து சிந்திக்க வைத்திருக்கும் போக்கு, இத்தகு தருணத்தில், கூட்டணிக் கட்சிகளிடம் திமுக காட்டும் big brother attitude வருத்தம் அளிப்பதாக இருக்கிறது.

யாதார்த்தத்தில் திமுக கூட்டணியில், அதற்கு அடுத்ததாக வாக்கு வங்கி உள்ள கட்சி விசிக தான். ஆனால் அதை திமுக தலைவர் தொடர்ந்து பதற்றத்திலேயே வைத்திருக்கிறார். இது விசிக கட்சியின் அடிமட்டத்தில் எதிர்மறை விளைவுகளை உருவாக்கும், என்பதை திமுக தலைவர் புரிந்து கொள்ள வேண்டும். ‘இவர்களை நம்ப முடியாது’, எனும் எச்சரிக்கை உணர்வு, விசிகவை எதிர்காலத்தில் அதிமுக, தவெக போன்ற கட்சிகளை நோக்கி நகர்த்தும் நிலையை உருவாக்கிவிடும்.

போலவே, சொற்பமான வாக்கு வங்கியை வைத்திருந்தாலும்கூட தமிழக மக்களின் நன்மதிப்பை இரு கம்யூனிஸ்ட்டுகளும் பெற்றுள்ளனர்.பாஜகவை எதிர்க்கப் போதுமான கருத்தியல் வலிமை திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களிடம்கூட இல்லை. ஆனால் சனாதன சக்திகளை சிந்தனையளவிலும் எதிர் முனையில் வைத்திருப்பவர்கள், விசிக தொண்டர்களும் மற்றும் சிபிஎம், சிபிஐ தோழர்களும்.

இன்று திமுக கூட்டணிக் கட்சிக்குள் காங்கிரஸ் மற்றும் தேமுதிக வை ஒப்பிட்டுப் பார்க்கும் மனநிலையை, திமுக இதர கூட்டணிக் கட்சிகளிடம் உருவாக்கியிருக்கிறது. தேர்தல் நெருக்கமாக இருக்கிற சூழலில் இது கூட்டணியின் உட்பிளவை அதிகரிக்கச் செய்யும். பாஜகவை எதிர்ப்பதாகக் காட்டிக் கொள்ளும் திமுக, தமிழகத்தைப் பொருத்த அளவில் பாஜகவின் மினியேச்சர் மாடலாக மாறி வருகிறதோ? எனும் சந்தேகம் எழுகிறது. தன்னால் போஷிக்கப்படும் ஊடகவியலாளர்கள் சொல்லும் பொய்களை, அது நம்பத் தொடங்கிவிட்டதோ ? எனும் அய்யமும் எழுகிறது. கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது, அவற்றை தன்னுடைய சின்னத்தில் நிற்க வைப்பது போன்றவை, சனநாயகத்தில் அக்கறை இல்லாத ஜெ போன்றோர் கடைபிடித்த மலிவான யுக்தி.

ஸ்டாலின் கலைஞரைவிட டேன்ஜரானவர் என்பதில் எவ்விதப் பெருமையும் இல்லை. ஸாடாலின் கூட்டணிக் கட்சிகள் மீது அக்கறை கொண்டிருந்தார். எதிர்க் கட்சிகளை கண்ணியமாக இயங்க அனுமதித்தார். குடும்ப நலனைவிட தேசநலனுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். நாட்டு மக்களை நேசித்தார். இதுதான் திமுக தலைவருக்குப் பெருமையைத் தரும்.

இன்னும்கூட காலம் கடக்கவில்லை. விசிக, சிபிஎம் போன்ற கட்சிகளுடன், தோழமை உள்ளத்தோடு, அக்கட்சியின் தொண்டர்கள் நிறைவடைகிற வகையில், இடப்பகிர்வில் கண்ணியமும் அக்கறையும் காட்ட வேண்டும். நவீன அரசியலில் பன்மைவெளியை இன்று திமுகதான் உருவாக்கியிருக்கிறது. அதை பலப்படுத்தும்போதுதான், ஃபாசிச சக்திகளை முறியடிக்கத் தேவையான வலிமையை அது களத்தில் பெற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *