வைரமுத்துவுக்கு ஞானபீடம்
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது கிடைத்திருப்பதாக ஒரு செய்தி கண்ணில்பட்டது. ஞானபீடு விருது டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தைச் சேர்ந்தவர்களால் வழங்கப்படும் விருது. டைம்ஸ் ஆஃப் இந்தியா மார்வாடி பின்னணி உடையது. சமஸ்கிருதம், இந்துத்வா, இந்தியப் பெருந்தேசியம், இந்தி, நலன்களில் அக்கறை கொண்டது. இதனுடைய தாக்கம் ஞானபீட விருதிலும் காணப்படும். ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர எழுதியதற்காக முன்பு இவ்விருதை ஜெயகாந்தன் பெற்றார்.
பொதுவாக இவ்விருது இலக்கிய மதிப்பை கணக்கில் கொள்வதில்லை. 2024 இல், இவ்விருது ராம்பத்ராச்சாரியார் என்கிற ஆர்எஸ்எஸ் சாமியாருக்கு வழங்கப்பட்டது. இவர் இலக்கியவாதியாக அறியப்பட்டவர் அல்லர். முஸ்லிம் எதிர்ப்பு மற்றும் தலித் எதிர்ப்பு அறிக்கைகளால் பிரபலமானவர் . பாபர் மசூதியை இடித்து, ராமர் கோயில் கட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தவர். இவரோடு திரைப்படப் பாடலாசிரியர் குல்சாருக்கு வழங்கப்பட்டது. குல்சார் நல்ல மனிதர். திறமையான திரைப்பட தயாரிப்பாளர். பிரபலமான பாடலாசிரியர். என்றாலும், இலக்கியத்தில் அவரை விட ஆழமான படைப்பாளிகள் உள்ளனர். குல்சார் பாடல்கள் பெரும்பாலும் காதலை மையமாகக் கொண்டவை. சமூகம் மற்றும் அரசியலின் தீமைகள் குறித்த அக்கறையற்றவை. வைரமுத்துவின் இலக்கிய இயக்கமும் இத்தகையதுதான். பாடலாசிரியர்கள், மேடைக் கவிஞர்கள், மத போதகர்கள் போன்றோருக்கான விருதாக ஞானபீடம் மதிப்பிழந்திருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு தருண் விஜய் என்கிற பாஜக எம்பிக்கு (தமிழ் தொண்டுக்காக) வைரமுத்து பாராட்டு விழா எடுத்தது பலருக்கு ஞாபகம் இருக்கலாம். உண்மையில் தருண் விஜய் ஒரு சமஸ்கிருத வெறியர். எம்.பி ஆகும்போது சமஸ்கிருதத்தில் உறுதி மொழி எடுத்தவர். அதுமட்டுமில்லை. தருண்விஜய் இப்போதும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவர். தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவாக TOI வில் எழுதிவருபவர்.
கூட்டிக்கழித்துப் பாருங்கள். பொதுவாக, இப்போதெல்லாம் விருதுகள் வழங்கப்படுவதில்லை. வாங்கப்படுகின்றன.
ஜெ.மோவின் தூண்டில்
~
வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டபோது எனது ஏமாற்றத்தைப் பகிர்ந்திருந்தேன். அது வைரமுத்துவின் இலக்கியத் தகுதியால் எழுந்த ஏமாற்றம் அன்று. ஞானபீடம் வழங்கும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ் பின்னணி உடையதாக இருக்கிறது. மேலும் வைரமுத்து மேல் நமக்கு இருக்கிற விமர்சனம் , அவரது மேட்டிமை தன்மை. கவி ஆளுமையைக் குலைக்கும் வகையில் அவர் மீது எழுந்த மீ டு புகார்கள் குறித்துதான். அதேவேளை வைரமுத்து குறித்து ஜெ.மோ வின் விமர்சனங்கள் ஏற்கத்தக்கவை அல்ல. கண்டிக்கக் கூடியவை.
அகிலன், வைரமுத்து போன்றோரது படைப்பிலக்கியத்தை தரப்படுத்த முனையும் சுரா, ஜெ.மோ போன்றோரிடம் செயல்படுவது இந்து சனாதன மனம். இதுவரை இந்திய ஞானமரபு குறித்து அதிகம் அக்கறைப்பட்ட ஜெ.மோ, இப்போது தமிழ் இலக்கிய மரபு குறித்து கண்ணீர் வடிக்கிறார். ஞானபீடம் வைரமுத்துவுக்கு கிடைத்துவிட்டதா? இதோ, நான் அதைவிட பெரிய விருதை உருவாக்குகிறேன். ஒரு கோடி தருகிறேன். அதை நியூயார்க்கிலிருந்து, டெல்லியிலிருந்து அறிவிக்கிறேன் என ஜெ.மோ அறிவிப்பதில், அவரது தமிழ் அக்கறையைவிட, பெண்கள் மீது கொண்ட பரிவைவிட, அவரது அகங்காரமே அதிகம் வெளிப்படுகிறது.
தொன்மையும் அறமும் கொண்ட தமிழ்ச்சமூகம், வலதுசாரி எழுத்தாளரான ஜெயமோகன் தரும் விருதை ஒரு போதும் பெரிய விருதாக கருதப்போவதில்லை. ஒரு விருது அதன் பொருள் மதிப்பால் மட்டுமே பெரிய விருதாகக் கருதப்படுவதில்லை. விருதுகளின் நிறுவனத்தன்மையை எதிர்க்கும் விதமாக நோபல் விருதையே மறுத்தார் ஃப்ரெஞ்ச் தத்துவவியலாளர் சார்த்தர். பாரத ரத்னா, பத்ம விருதுகள் தொகை மதிப்பற்றவை. ஆனாலும் அவை, ஒரு பெரிய சனநாயக தேசத்தின் முதல் குடிமகன்/ள் ஒப்பமிட்டுத் தருவதால் மதிப்பைப் பெருகிறது. போலவே அமெரிக்காவில் தரக்கூடிய Purple Heart, இங்கிலாந்து அரசால் வழங்கக்கூடிய Order of the British Empire விருது போன்றவை பண மதிப்பு அற்றவை.
ஆகவே ஒரு கோடி ரூபாய் கொடுப்பதனாலேயே ஒரு விருது பெரிய விருதாகக் கருதப்படப் போவதில்லை. ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்களால் விஷ்ணுபுரம், லிவிங் டமில் போன்ற கம்பெனிகளை, எப்படி உருவாக்க முடிகிறது? ஒரு எழுத்தாளர் என்பவர் மைய நீரோட்ட மதிப்பீடுகளுக்கு எதிர்ப்பாக இயங்க வேண்டும். மையநீரோட்டத்தோடு இணக்கமின்மையைப் பேண வேண்டும். இந்தியாவில் இந்துத்துவா ஒரு மைய நீரோட்ட கருத்தியலாக, விழுமியமாக இருக்கிறது. அதை ஆதரிப்பவர் ஜெ.மோ.
இன்று பா.ச.க வினர்கூட, தலித் விடுதலை பேசுகிறார்கள், அம்பேத்கரை ஆதரிக்கிறார்கள். சாதி இல்லை என்கிறார்கள். ஆனால் இவற்றைப் பேணுகிற சனாதனத்தை எதிர்த்தால் பொங்கி எழுவார்கள். ஜெ.மோ வும் இத்தகையவர்தான். தமிழ் இலக்கிய மரபு என்பது சனாத எதிர்ப்பு மரபு. சனாதனத்தை ஆதரிக்கிற பக்தி இலக்கியத்தை விமர்சித்தே, அதன் நேர்மறைக் கூறுகளை ஏற்றுக்கொள்கிறோம். ஜெ.மோ சில காலம் பி.எஸ்.என்.எல் இல் பணியாற்றினார். சில நாவல்களை எழுதினார். சில தோல்விப் படங்களுக்கு வசனம் எழுதினார். ஆனால் அவரது வாழ்க்கைமுறை இன்குலாப் போலவோ, அ.மார்க்ஸ் போலவோ இல்லை. அவரால் எப்படி இத்தகைய நிதி திரட்டல்களைச் சாத்தியமாக்க முடிகிறது? காவி , கார்ப்ரேட் சக்திகளோடு இணக்கம் பேணும் அவரது இயக்கமே காரணம்.
ஒரு எழுத்தாளர் எப்படி செயல்பட வேண்டும்? என வாழ்ந்தவர்கள் நம்மிடையே பலருண்டு. ரஷ்யாவில், 50,000 அளவு எண்ணிக்கையுள்ள தம் தேசத்து டுகோபார்ஸ் மக்களை, இடையூறாக கருதியது அந்நாட்டு அரசு. இவர்களை அகதிகளாக வெளியேற அறிவுறுத்தியது. இவர்களில் 8000 பேர் கனடாவுக்கு புலம் பெயர்ந்தனர். கிட்டத்தட்ட 7000 மைல்கள் இவர்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது. 19 ஆம் நூற்றாண்டு வரலாறு இந்நிகழ்வை டுகோபார்ஸ் இயக்கமாகப் பார்த்தது. இவர்களது நீண்ட பயணத்திற்கான செலவை தல்ஸ்தோய் ஏற்றுக்கொள்ள விரும்பினார். தனது புத்தியிர்ப்பு நாவல் மூலம் சம்பாதித்த பொருளை, டுகோபார்ஸ் மக்களின் புலம் பெயர் நிதியாக வழங்கினார். இதுதான் ஓர் எழுத்தாளர் கடைபிடிக்கிற வழிமுறை. ஜெ.மோவோ தன்னை தமிழ் இலக்கிய உலகின் ஐகானாக நிறுவ முயல்கிறார். வைரமுத்துவிடம் இருப்பதும் இத்தகு வேட்கைதான்.
வைரமுத்துகூட தன்னை ஓர் இந்துத்துவாவாதியாக காட்டிக்கொள்ள வெட்கப்படுவார். ஜெ.மோ? வளரும் எழுத்தாளர்களை விருது ஆசை காட்டி அரசியலற்ற எழுத்தாளர்களாக, மைய நீரோட்ட மதிப்பீடுகளைக் குலைக்காதவர்களாக, மாற்றுவதுதான் ஜெமோ வின் அஜென்டா. இளம் எழுத்தாளர்கள், இந்த ஒரு கோடி மண்புழுவுக்கு ஆசைப்பட்டு, துண்டில் முள்ளை விழுங்கி விடக்கூடாது.