Sunday, April 19, 2026

Writer Karikalan

எழுத்தாளர் கரிகாலன்

அரசியல் | பண்பாடு

ஏப்ரல் – சட்ட மன்றத் தேர்தலும் தலித் வரலாற்று மாத அனுசரிப்பும்

பிப்ரவரி மாதம் கறுப்பின வரலாற்று மாதமாக ஆண்டுதோறும் அமெரிக்காவில் , அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஆபிரகாம் லிங்கனின் பிறந்தநாள் பிப்ரவரி 12 . ஃபிரடெரிக் டக்ளஸின் பிறந்தநாள் பிப்ரவரி 14 . இந்த நாட்களை அடையாளமாகக் கொண்டு, பிப்ரவரியை கருபுபின வரலாற்று மாதமாகக் கொண்டாடுகிறார்கள்.

ஒரு இனத்திற்கு வரலாறு இல்லையென்றால், அதற்கு மதிப்புமிக்க பாரம்பரியம் இல்லை. அது உலகின் சிந்தனையில் ஒரு புறக்கணிக்கத்தக்க காரணியாகிறது. எனும் அடிப்படையில், கருப்பின வரலாற்று மாதம் கொண்டாடப்படுகிறது.

இதுபோலவே இந்தியாவில் தலித்துகளின் வரலாறு, எதிர்ப்பு மற்றும் பங்களிப்புகளைக் கொண்டாட, ஏப்ரல் மாதம், தலித் வரலாற்று மாதமாக அனுசரிக்கப்படுகிறது.

ஏப்ரல் 14 , டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்த நாள். ஏப்ரல் 11, ஜோதிராவ் பூலே பிறந்த நாள். இவர்களது பிறந்த நாட்களை மையமாகக் கொண்டு ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாகக் கொண்டாடுகிறார்கள்.

நீதி, சமத்துவம் மற்றும் சாதி ஒடுக்குமுறையை வெல்வதில் கவனம் செலுத்துவது. தலித் வரலாறுகள் அழிக்கப்படுவதற்கு எதிரான நிகழ்வுகளை ஒருங்கிணைப்பது. இம்மாதத்தில் கடைபிடிக்கப்படுகின்றன .

இம்மாதத்தில் புறக்கணிக்கப்படும் தலித்துகளின் அறிவுசார், சமூக, மற்றும் அரசியல் பங்களிப்புகளை முன்னிலைப்படுத்த வேண்டும். சாதி அடிப்படையிலான பாகுபாட்டிற்கு எதிரான தலித்துகளின் போராட்டத்தை ஊக்கப்படுத்த வேண்டும்.

குறிப்பாக தமிழக சட்டமன்றத் தேர்தல் இந்த தலித் வரலாற்று மாதத்தில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தலித்துகள் தங்களை ஓர் அதிகாரம் மிக்க, விடுதலை பெற்ற, சக்தியாக மாற்றிக் கொள்வதற்கான தந்திரோபாயங்களைக் கடைபிடிக்க வேண்டும்.

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் கூற்றுப்படி, தேர்தல் அமைப்பின் குறைபாடுகள் காரணமாக, தலித் மக்களால் இந்தியத் தேர்தல்களை , சுதந்திரமான, நியாயமான ஜனநாயக நடைமுறையில் எதிர்கொள்ள முடியவில்லை. பெரும்பாலும் அவர்களின் அடிமைத்தனத்தை நிலைநிறுத்தும் ஒரு கருவியாகவே தேர்தலை எதிர்கொண்டனர்.

1932 ஆம் ஆண்டு பூனா ஒப்பந்தத்தால் நிறுவப்பட்ட கூட்டுத் தேர்தல் முறையின் கீழ் , பெரும்பான்மையாக இருந்த சாதி இந்து வாக்காளர்களே தலித் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைக் கொண்டிருந்தார்கள். இந்தத் தேர்தல்முறை தலித்துகளை உண்மையாகப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்குப் பதிலாக, சாதி இந்துக்கள் செல்வாக்கு செலுத்தும் கட்சிகளின் நலன்களுக்கு உகந்த ஒரு பொம்மையாக செயல்பட வைப்பதாக அம்பேத்கர் கருதினார்.

இந்திய சனநாயகத்தில் பெரும்பான்மை என்கிற சொல்லாடல் அரசியலாக இல்லாமல் மதமாக இருப்பதாக அம்பேத்கர் கருதினார். அதாவது இந்தியாவில் பெரும்பான்மை என்பதை இந்து பெரும்பான்மையாக இருக்கிறது. இந்த பெரும்பான்மை மாறக்கூடிய தன்மையில் இல்லை. இந்து இந்தியாவில் அரசின் அதிகாரத்தை சாதி இந்து சமூகம் தன்வசப்படுத்தும் என்பதை அம்பேத்கர் கணித்தார். இந்திய தேசியவாதத்தில், பெரும்பான்மையினர் தங்கள் விருப்பப்படி ஆட்சி செய்யும் உரிமையை அச்சத்தோடு பார்த்தார் அம்பேத்கர்.

ஏனெனில், தலித்துகள் மற்றும் மதச்சிறுபான்மையினர் எண்ணிக்கை அளவில் சிறுபான்மையினராக உள்ளார்கள். தலித்துகள் தவிர்த்த சாதி இந்துக்கள் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். தலித்துகள் தம் உரிமைகளுக்காகப் பரிந்துரைக்கும் தன்னாட்சி கொண்ட, நம்பிக்கைக்குரிய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதை உறுதி செய்வதற்கான நம்பகமான வழியாக தனித் தொகுதிகளைக் கருதினார் அம்பேத்கர்.

இத்தகு தனித் தொகுதிகளில் தலித் வாக்காளர்கள் தலித் ஆதரவு சக்திகள் விழிப்போடு செயல்பட வேண்டும். கூடியவரை தனித் தொகுதிகளில் போட்டியிடும் தலித் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகளை செலுத்துவதன் மூலமே தலித் அரசியலை வலுப்பெறச் செய்ய முடியும்.

சிலவேளை விசிக, புதிய தமிழகம், புதிய பாரதம் போன்ற தலித் கட்சிகள் இடம்பெற்றிருக்கும் கூட்டணிகளில், சாதிக் கட்சிகள் இடம்பெறவும் வாய்ப்புண்டு. பொதுத் தொகுதிகளில் இத்தகு சாதிக்கட்சி வேட்பாளர் போட்டியிடும்போது, ஒருவேளை மாற்று அணியில் மதச் சிறுபான்மைச் சமூக வேட்பாளர்கள் போட்டியிட்டால் அவர்களை ஆதரிக்கலாம்.

இல்லை, நோட்டாவுக்கு வாக்களிக்கலாம். இத்தகைய தொகுதிகளில் நோட்டா எண்ணிக்கை பெருகும்போது அடுத்தத் தேர்தல்களில் சாதிக்கட்சிகளை சேர்த்துக் கொள்ள பெரிய கட்சிகள் யோசிக்கத் தொடங்கும்.

நடைபெறுகிற தமிழகத் தேர்தலை எதிர்கொள்ள, இந்த தலித் வரலாற்று மாதம் தலித் அரசியலுக்கு உத்வேகத்தை வழங்குமென நம்புவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *