சின்னர்ஸ் – விடுதலை அவா!
நேற்று காலை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் 98 வது ஆஸ்கர் விருது விழா சிறப்பாக நடைபெற்றது. எதிர்பார்த்தது போலவே ‘சின்னர்ஸ்’ மற்றும் ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர், இரு படங்களும் விருதுகளை அள்ளியிருந்தன.
ரியான் கூக்லர் இயக்கிய சின்னர்ஸ் அதிகபட்சமாக 16 பரிந்துரைகளில் இருந்து. நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்றது. இந்த வாம்பயர் திகில் திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, மற்றும் சிறந்த இசை ஆகிய பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.
சின்னர்ஸ் படத்தின் வெற்றி சொல்வது இதுதான். கலை, இலக்கியங்கள் யாவும் அரசியல்மயப்பட வேண்டும். குறிப்பாக விடுதலை விழைவு, அதிகார எதிர்ப்பு, ஒடுக்கப்பட்டோர் மீதான கரிசனம், போன்ற உள்ளடக்கங்களே நவீன படைப்புகளாகக் கருதுப்படும். சின்னர்ஸ் வெற்றி கலை ஊலகுக்கு சொல்கிற செய்தி இதுதான்.
பிளாக் பேந்தர் மற்றும் க்ரீட் போன்ற படங்கள் வாயிலாக முற்போக்கும் தொலைநோக்கு சிந்தனையும் கொண்டவராக அறியப்பட்ட ரையன் கூக்லர் எழுதி, இயக்கி , தயாரித்துள்ள படம் ‘சின்னர்ஸ் ‘ . மைக்கேல் பி. ஜோர்டான் ஸ்மோக் மற்றும் ஸ்டாக் எனும் இரட்டையர்களாக நடித்திருக்கிறார். மிசிசிப்பி டெல்டா பகுதியில் நடைபெறுகிற கதை. ஸ்மோக் , ஸ்டாக் இருவரும் வன்முறையும் குற்றப்பின்னணியும் உடைய தம் பழைய வாழ்வை விடுத்து, புதிய எதிர்காலத்தை விரும்பி, சிகாகோவிலிருந்து திரும்புகிறார்கள். தங்கள் சொந்த ஊருக்கு வருகிறார்கள்.
இசையில் ஆர்வம் கொண்ட அவர்கள் ஓர் இசை விடுதியை நிறுவுகிறார்கள். ப்ளூஸ் இசையில் நாட்டமுடைய தம் இளைய சகோதரன் ஒருவனையும் இம்முயற்சியில் இணைத்துக் கொள்கிறார்கள். இப்போது, அந்த இசைவிடுதிக்கு மூன்று வெள்ளையர்கள் வருகிறார்கள். படம் இப்போது ஒரு அமானுஷ்யத் திருப்பத்தை அடைகிறது. அவர்கள் மூவரும் ரத்தக்காட்டேரிகளாக மாறுகிறார்கள். அவர்களால் கடிபடும் மனிதர்களை ரத்தக் காட்டேரிகளாக மாற்றுகிறார்கள்.
ரியான் கூக்லரின் படைப்புகள், பெரும்பாலும் கறுப்பினக் கலாச்சாரத்தின் பின்னணியைக் கொண்டவை. இனப்பிரச்சனை , அதற்குள் உருவாகும் காதல் விளைவுகள் , சிக்கலான சமூக இயக்கவியல், இத்தகைய கருப்பொருள்களை உள்ளிழையாகக் கொண்டவை. சின்னர்ஸ் வழக்கம்போல அவரது தனித்துவத்தைக் கொண்டிருக்கிறது.
சின்னர்ஸ் திரைப்படத்தில், நிறம் ஒரு அமைதியான கதைசொல்லியாகிறது. இரவு வரும்போது, மிசிசிப்பி டெல்டாவின் நீல நிறம் சிறிது சிறிதாக சிவப்பாக மாறுகிறது. ஸ்டாக் சிவப்பாக, ஸ்மோக் நீலமாக உருவகப் படுத்தப்படுகிறார்கள். நீலம் நிலத்தில் வேரூன்றிய பழமையை, பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது. சிவப்பு சீர்குலைவைக் குறிக்கிறது.
ஸ்டாக்கின் காதலி மேரி. அவள் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுகிறாள். வெள்ளையரைப் போல் தோற்றமளிக்கிறாள். அவள்தான் முதலில் வேம்ப்யராக மாற்றப்படுபவர். அவள் வெள்ளை இனத்தவருடன் நெருக்கமாக இருப்பது தற்செயலானது அல்ல. இது ஓர் உருவகம். காலனித்துவம் எவ்வாறு சமூகங்களை ஒன்றுக்கொன்று எதிராகத் திருப்புகிறது என்பதைப் பற்றிய கூக்லரின் பார்வை இது.
இரட்டையர்களின் ஒன்றுவிட்ட சகோதரன் சாமி (மைல்ஸ் கேடன்) பழுப்பு நிற ஆடைகளை அணிகிறவனாக காணப்படுகிறான். அவனது இசை ‘சாத்தானுடன் நடனமாடுவது’ என எச்சரிக்கப்படுகிறான். வரலாற்றில் ப்ளூஸ் இசை கலகமாக விடுதலையாக அறியப்பட்ப இசை. ஸ்மோக்கின் தோழி ஆனி (மொசாகு). அவர்தான் முதலில் ரத்தக்காட்டேரிகளை அடையாளம் காண்பவர். சடங்குகள் மற்றும் உள்ளுணர்வால் அவர் ரத்தக்காட்டேரிகளை எதிர்கொள்கிறார்.
ரத்தக்காட்டேரிகள் இயற்கைக்கு அப்பாற்பட்ட வெறும் அமானுஷ்யங்கள் மட்டும் இல்லை. இங்கு அவை உருவகங்கள். இனவாதமாக, மதவெறியாக, சாதிவெறியாக, ஆண் வெறியாக இத்தகைய ரத்தக்காட்டேரிகள் உலா வருகின்றன.
மனிதர்களிடம் மதவெறியை, சாதிவெறியை, இனவெறியை இவைத் தொற்ற வைக்கின்றன. காலனித்துவத்தின், சனாதனத்தின் ஊடுருவலோடு நுட்பமான வன்முறையின் பிரதிநிதிகளாகவும் இவை திகழ்கின்றன. வெள்ளை நிறவெறி கருப்பின மக்களைப் பாடாய்ப்படுத்தியது. அதிலிருந்து மீண்டெழ கருப்பினத்தவர் நடத்திய இசைவடிவம், உள்ளுணர்வுகள், கலகக்கூறுகள் வழியான போராட்டங்களை உள்ளடக்கமாகக் கொண்டது இப்படம்.
இந்திய சூழலில் சாதி/ மத வெறியோடு இந்த ரத்தக்காட்டேரிகளைப் பொருத்திப் பார்க்க முடியும். சின்னர்ஸ் ஜியோ ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது. இந்தப் படத்தைப் பார்ப்பதென்பது விடுதலையாக வாழ்வதற்கான ஒரு பயிற்சி.