துரந்தர் 2 – நான்கு மணி நேர ரீல்ஸ்
ஏதோ, தேர்வுக்குப் போவதுபோல அலாரம் வைத்து எழுந்து குளித்துவிட்டு ஒன்பது மணிக்கு ரோகினிக்கு ஓடினேன். துரந்தர் தி ரிவென்ஜ் இரண்டு நாட்களாக டிக்கெட் கிடைக்கவில்லை. அதுதான் இந்த வெறித்தனம். மீண்டும் வீட்டுக்கு வந்து தூங்கி எழுந்து, மாலை 6.00 மணிக்கு ஓட்டம். ஆடு 3 பார்க்க. ரோகினி தியேட்டரிலேயே வாழ்வது போலத் தோன்றியது.
+2 படித்த காலம். ஹாஸ்டலில் இருந்து திருட்டுத்தனமாக செகண்ட் ஷோ பார்க்கப் போனோம். அங்கு நாங்கள் எதிர்பார்த்த படம் இல்லை. சம்பூர்ண ராமாயணம். ஆனாலும் பார்த்தோம். படம் முடிந்தால் விடிந்துவிட்டது. வார்டன் வெளுத்துவிட்டார். துரந்தர் 2 வும் ராமாயாணம் போலத்தான். ராமர் இலங்கைக்குப் போனார். ராவணன், இந்தரஜித், கும்பகர்ணன் இப்படி பலரைக் கொன்றார். வென்றார். துரந்தரில் ரன்வீர் சிங் பாகிஸ்தான் போகிறார்.
உலகில் எத்தனை இசுலாமிய தீவிரவாத அமைப்புகள் இருக்கிறதோ. அத்தனை தலைவர்களையும் அங்கு கொல்கிறார். இந்தியாவைப் பாதுகாக்க முப்படைகள் தேவையில்லை. ரன்வீர் சிங் ஒருவர் இருந்தால் போதும். நாம் ரோகினியில் அமர்ந்திருக்ககறோமா? ஆர்எஸ்எஸ் Shakha வில் உட்கார்ந்திருக்கிறோமா? குழப்பமாக இருந்தது. மரணதண்டனை எல்லாம் துரந்தரில் காட்டப்படும் கொலைக் காட்சிகளுக்கு முன்னால் சாதாரண தண்டனை. மிகப்பழங்காலத்தில் குற்றவாளிகளின் தோலை உரிக்கிற வழக்கம் இருந்தது. இந்தியா, சீனா போன்ற நாடுகளில் கழுமரம் ஏற்றுகிற வழக்கும் இருந்தது. மனிதர்களை வாளால் செங்குத்தாகப் அறுக்கும் தண்டனைகள் இருந்தன.
இவற்றைவிடவும் குரூரமாக மனிதராகளை எப்படி கொல்வது? நூற்றுக்கும் மேற்பட்ட சித்ரவதைக் கொலைகளை துரந்தரில். அடிக்கடி கண்ணை காதை மூக்கை தடவிப்பார்த்தபடி இருந்தேன். ரத்தம் ஏதும் வழிகிறதா? என்று.
துரந்தர் படம் நான்கு மணி நேரம் ஓடுகிறது. ரீல்ஸ் யுகத்தில் நான்குமணி நேரம் பார்வையாளர்களை எப்படி இயக்குனர் அமரவைக்கிறார்? யோசித்தேன். ஒருவர் நான்கு மணி நேரம் பார்க்கிற ரீல்ஸ்களின் தொகுப்பாகத்தான் துரந்தரும் இருக்கிறது. நிறைய வைரல் உள்ளடக்கங்கள். இசுலாமிய மதவெறுப்பை உருவாக்கும் கூஸ்பம்ப் காட்சிகள். அதற்கேற்ற அதிரடியான பின்னணி இசை.
அடிதடி எனச் செல்லும் படத்தில் சிரிப்புக்கு இடமில்லையா? கேட்கலாம். நிறையவே இருக்கிறது. 2014-ல் மோடி பதவியேற்கும் காட்சி டிவியில் காட்டப்படுகிறது. ஓய்வுபெற்ற பாகிஸ்தானிய பிரிகேடியர் ஒருவர், ’நாம் இந்தியாவின் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டோம்,’ என்கிறார். படத்தின் வில்லன்கள் அடிக்கடி, ‘இந்த டீ கடைக்காரன் நம்ம நிம்மதியைக் கெடுத்துட்டான்!’ டன்கிறார்கள். தியேட்டரில் சிரிக்கிறார்கள்.
பணமதிப்பிழப்பின்போது ஏடிஎம் வரிசையில் காத்திருந்த காலம் மறக்கவில்லை. துரந்தர் புது விளக்கம் கொடுக்கிறது. 60,000 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகளை ஐஎஸ்ஐ இந்தியாவுக்கு அனுப்புகிறது. இவை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், மற்றும் சோசலிச அமைப்புகள் வழியாக இந்தியாவுக்குள் அனுப்பப்படுவதாக காட்டப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள கசாப்புக் கடைகள் மூலம் கள்ள நோட்டுகள் விநியோகிக்கப்படுவதாக கூறுகிறார்கள்.
ஆனால் , பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட நோட்டுகளில் 99.3% மீண்டும் புழக்கத்திற்கு வந்துவிட்டதாக கூறுகிறது இந்திய ரிசர்வ் வங்கி கூறியது. பொய் சொல்வதற்கு இயக்குனர் ஆதித்யா தார் கூச்சப்படுவதாகத் தெரியவில்லை. துரந்தர் 2 படந்தின் பல காட்சிகள் பாஜகவின் வார் ரூம் கிசுகிக்கள், வாட்சப் ஃபார்வர்டுகள்.
இந்தியப் பெண்களைக் கற்பழிப்பது, இந்திய ஆண்களுக்கு விருத்தசேதனம் செய்வது, அனைவரையும் கலிமாவை (முஸ்லிம் மத நூல்) படிக்க வைப்பது, ஆகியவையே தனது இலக்கு! என மேஜர் இக்பால் (அர்ஜுன் ராம்பால்) பேசும் வெறிகொண்ட வசனங்கள் இத்தகையவைதான். இவை ஆதாரமற்றவை. மதவெறுப்பை வளர்க்கும் நோக்கம் கொண்டவை.
சமீபத்தில் இந்திய உளவுத்துறை (RAW ) மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளைத் தடை விதிக்கக் கோரியிருந்தது, USCIRF எனப்படும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம். ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை செயல்படுத்தும் அமைப்பாக இந்திய உளவுத்துறையான RAW வைச் சித்தரிக்கிறது துரந்தர் படம்.
துரந்தர் முதல் பாகம் வசூலில் 1300 கோடியைத் தாண்டியது. இரண்டாவது பாகம் வெளியான ஐந்து நாட்களில் தாருமாறாக வசூலைக் குவிக்கிறது. காஷ்மீர் ஃபைல்ஸ், கேரளா ஸ்டோரி போன்ற ptopaganda படங்கள் சினிமா பார்வையாளர்களை entertain செய்யத் தவறின. பெரிதாக இப்படங்கள் கவனம் பெறவில்லை. ஆனால் துரந்தர் 1 மற்றும் 2 , பெரிய ஹிட் படங்களாக மாறுகின்றன. இதுதான் கவலை அளிக்கிறது.