சனநாயகத் திருவிழா
இது பாழடஞ்ச பங்களா
கோத்ரெஜ் பூட்டை மாட்டினா
பாதுகாப்பா வாழலாம்
கொக்கு சின்னத்தின் வாக்குறுதி
வாஸ்து சரியில்ல
செப்டிக் டேங்க்கை மாத்தினா
சரஸ்வதி குடியேறுவா
சொல்வது குருவி சின்னம்
மொத்தமா புதுசாக்கப் போறோம்
பெயின்ட் அடிக்க பிரஷ் வாங்குகிறது
நடிகரின் புதுக்கட்சி
தாய்மொழியில் வாக்கை
இரந்து கொண்டிருக்கிறது
வண்டி மாடு கட்சி
பாதி ராத்திரியில் கதவைத்தட்டி
குக்கர் கொடுத்தவங்களுக்கு
போடுவதா?
ஹாட் பாக்ஸ் தந்தவங்களுக்கு
போடுவதா?
சந்தேகத்தோடு ரீல்ஸை
ஸ்க்ரோல் செய்கிற பெரிசுகளும்
தென்னைமரத்துல ஒரு குத்து
பனைமரத்துல ஒரு குத்து
ஆஃப் பாயில் ஆர்டர் செய்து
கட்டிங் பிரித்துக் கொள்ளும்
சமத்துவ மனங்களும்
25 லைக்ஸுக்கு
அரசியல் கவிதை எழுதும்
மெட்டாவாசிகளும்
வசிக்கும் இந்த பாழடஞ்சா பங்களா
ஈரான் குண்டு போட்டு
விழும் அளவுக்கெல்லாம்
வொர்த் இல்லை
தீர்ந்துவிட்ட எரிவாயுவால்
பாதி வேக்காட்டில் பல்லிளிக்கும்
தோசைக் கல்லைவிட சூடாகி
போடா ‘ … ‘
மோசமான கெட்ட வார்த்தையால்
திட்டுகிறாளே குடும்பத்தலைவி
அது பிரதமரையா?
முதலமைச்சரையா?
எதிர்க்கட்சித் தலைவரையா?
கேஸ் சிலிண்டர் போடுபவரையா
அல்லது தன்னையா?
திகைக்கிறான் தலைவன்
அந்தத் தலைவியின்
ஒற்றைச் சுடு சொல்லுக்கு
ஆடும் வலிமை படைத்ததே
இந்த பாழடைஞ்ச
பங்களாவின் பேஸ்மென்ட்.