Monday, April 20, 2026

Writer Karikalan

எழுத்தாளர் கரிகாலன்

அரசியல் | பண்பாடு

அன்பின் பரிசு

வியனுக்கு கிறிஸ்துமஸ் பரிசளிக்க வேண்டும். புத்தகங்களை கிஃப்ட் பேக் செய்து அவனது பையில் வைத்து அனுப்புமாறு பள்ளியில் கேட்டிருந்தார்கள்.

புத்தகம் வாங்க அருகில் உள்ள V.R மாலுக்கு சென்றிருந்தேன். நுகர்வு ஆர்வத்தைப் பெருக்குவது எப்படி? முதலாளிகளுக்குத் தெரியாதா என்ன? மால் முழுவதும் கிறிஸ்த்மஸ் உணர்வு தோன்றும்படி விதம் விதமான பின்னணிகள்.

இளம் பருவத்தில் கிறித்துவ மிஷனரி நடத்துகிற பள்ளியில் படித்தவன் நான். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள், சாண்டா கிளாஸ் அனுப்பும் பரிசுகள் என டிசம்பர் உற்சாகமாக இருக்கும். எங்கள் ஆங்கில ஆசிரியர் சம்பந்தம். திருஞானசம்பந்தர் மரபில் வந்தவர்தான். ஆனாலும் அவர் விவரிக்கும் கிறிஸ்துமஸ் கவிதைகள், எங்களை விக்டோரியன் காலத்துக்கு அழைத்துச் செல்லும்.

பனி மூடிய வீடுகள். மெழுகுவர்த்தி தீபம் ஒளிரும் சன்னல்கள். பக்தியின் அமைதியான தருணங்கள். பொங்கல் வாழ்த்து அட்டைகளைப் போல் கிறிஸ்த்துமஸ் வாழ்த்து அட்டைகளைத் தயாரிப்போம்.

அவ்வாழ்த்து அட்டைகளில் எழுதிய கிளெமென்ட் கிளார்க் மூரின் கவிதைகளை நினைவுகொள்கிறைன். ‘கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவு’ எனும் தலைப்பில் அமைந்த கவிதையது.

‘கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவு
வீடு முழுவதும்
ஓர் உயிரினம் கூட அசையவில்லை
ஒரு எலி கூட இல்லை
புனித நிக்கோலஸ் விரைவில்
அங்கு வருவார் என்ற நம்பிக்கையில்
புகைபோக்கியில் காலுறைகள்
கவனமாக தொங்கவிடப்பட்டன’

சான்டா கிளாஸ் பற்றிய கதைகள் ஐரோப்பா முழுவதும் வளர்ந்தபடி இருந்தன. டச்சு உருவாக்கிய சின்டர்கிளாஸை புராட்டஸ்டன்ட்டுகள் அழிக்க முயன்றனர்.

சீர்திருத்தத்தின் போது இவ்வுருவகம் புனித நிக்கோலஸுடன் ஆன தொடர்பிலிருந்து விலகிச் செல்ல முயன்றது. பதிலாக, இயேசுவை பரிசு வழங்குபவர் மற்றும் கிறிஸ்துமஸ் ஆவியின் உருவகமாகக் கொண்டவர் எனும் கருத்தை அவர்கள் முன்வைத்தனர்.

ஜெர்மானியர்கள் அவரை கிறிஸ்ட்கிண்டல், (கிறிஸ்து குழந்தை) என்று அழைத்தனர். இருப்பினும், சான்டா கிளாஸ் மரபு ஒருபோதும் முழுமையாக மறையவில்லை.

பின்னர் இம்மரபு ஆங்கில மொழியில் கிறிஸ் கிரிங்கிள் என்று பரிணமித்தது. டச்சு காலனித்துவவாதிகள் அந்தக் கதைகளை நியூ ஆம்ஸ்டர்டாமிற்கு எடுத்துச் சென்றனர். வானத்தில் பறந்து புகைபோக்கிகளின் வழியாக பரிசுகளை வீசிய ஒரு மகிழ்ச்சியான மனிதனின் கதைகளை அவர்கள் உயிரோடு வைத்திருந்தனர்.

சில வேளை இப்பத்திரம் ‘சாங்க்டே கிளாஸ்’ என்று அழைக்கப்பட்டது. அக் கதாபாத்திரம் அமெரிக்க குழந்தைகளுடன் பொதுவான தொடர்புடையதாக மாறியது.

பெயர் மறக்கப்பட்ட கவி ஒருவர், கலைமான் ஓட்டும் பனியில் சறுக்கி ஓடும் வாகனத்தில் சவாரி செய்யும் ஒரு மனிதராகவும், கிறிஸ்துமஸ் ஈவ் அன்று பரிசுகளை வழங்குவதாகவும் கிறிஸ்துமஸ் தாத்தாவை சித்தரித்தார். இக்கதையின் அடிப்படையில்தான் கிளெமென்ட் கிளார்க் மூர் ‘எ விசிட் ஃப்ரம் செயிண்ட் நிக்கோலஸ்’ என்ற கவிதையை எழுதினார்.

வி. ஆர் மாலில் இரண்டு கலைமான்கள் (rain deer) கிறிஸ்துமஸ் பரிசுகளை பனி வண்டியில் இழுத்துச் செல்வதுபோல் ஒரு சிற்பத்தை அமைத்திருந்தனர். ஆனால் மூர் கவிதையில் சாண்டாவின் எட்டு கலைமான்கள் இழுத்ததாகக் கூறப்படுகிறது. டாஷர், டான்சர், பிரான்சர், விக்சன், வால்மீன், க்யூபிட், டோனர் மற்றும் பிளிட்சன், போன்றவை அந்த கலைமான்களின் பெயர்கள்.

வியனுக்கு என்ன வாங்கலாம்? யோசித்தபடி புத்தகக் கடையை சுற்றிவந்தேன். சிப்பந்தியான யுவதி ‘உங்களுக்கு உதவலாமா?’ கேட்டார். ‘நிச்சயமாக ‘ என்றேன் .

A Christmas carole, Stories of Santa, The big book christmas activities, 5 minute christmas stories இப்படி புத்தகங்களை முன்னால் குவித்தார். வியனால் இப்போது கவிதைகளைப் புரிந்து கொள்ள முடியாது. மூர் விவரித்த சான்டாவின் மின்னும் கண்களை, குழி விழுந்த ரோஜாக்கள் போன்ற கன்னத்தை, செர்ரி போன்ற மூக்கை படத்தில் ரசிக்க முடியும். மூர் என்றில்லை. ஆல்ஃபிரட் லார்ட் டென்னிசன், ஹென்றி வாட்ஸ்வொர்த், கிறிஸ்டினா ரோசெட்டி இப்படி நிறைய கவிஞர்கள், விக்டோரியன் காலத்தில் கிறிஸ்துமஸை கவிதையில் கொண்டாடினார்கள்.

‘இரவில் வருடம் இறந்து கொண்டிருக்கிறது
காட்டு மணிகளை
ஒலிக்கச் செய்யுங்கள்
அது இறக்கட்டும்
பழையதை ஒலிக்கச் செய்யுங்கள் 
புதியதை ஒலிக்கச் செய்யுங்கள்
மகிழ்ச்சியான மணிகளை
ஒலிக்கச் செய்யுங்கள்
பனியின் குறுக்கே
வருடம் போகிறது
அது போகட்டும்
பொய்யை ஒலிக்கச் செய்யுங்கள்
உண்மையை ஒலிக்கச் செய்யுங்கள்.’

பக்தியை நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் டென்னிசனின் கவிதை. ஒரு பருவத்தின் இடையில் சோகத்தை, மனச்சோர்வை, அப்பட்டமாக வெளிப்படுத்தும் இக்கவிதை காலத்தின் பொக்கிஷமாக இன்றும் மதிக்கப்படுகிறது.

முந்தைய ஆண்டின் துன்பங்களில் இருந்து விடுபட, புதிய ஆண்டின் சாத்தியங்களைத் தேடும் உத்வேகத்தை அளிக்கும் கவிதை. லேசான பனிவிழும் டிசம்பர் முன்னிரவு. உலகை மீட்கும் தேவமைந்தனுடைய பிறப்பைக் கொண்டாட உலகம் ஆவல் மேலுற காத்திருக்கிறது.

சாய் பிளிஸில் மசாலா டீ குடித்தபடி சான்டாவோடு செல்ஃபி எடுக்கும், ரீல்ஸ் உருவாக்கும் இளைஞர் கூட்டத்தை ரசிக்கிறேன். டிசம்பர் இரவை உற்சாகமாகிறது.

நவயுகத்தை எதிர் கொள்ள, நம் குழந்தைகளை பன்மைத்துவ வெளியில் பழக்க வேண்டும்.
எந்தை அவர் வாழ்ந்த காலத்திலேயே என்னை ஒரு கிறித்துவ கல்வி நிறுவனத்தில் சேர்த்தார். என் இதயத்தை வளப்படுத்தினார்.

வியனுக்கு சான்டா நூல்களை வாங்குவதும் இத்தகைய விழுமியங்களைப் பழக்கவே. ‘இன் தி ப்ளீக் மிட்வின்டர்’ எனும் கிறிஸ்த்துமஸ் கவிதையில் ரோசெட்டி கூறுவதுதான்.

‘நான் ஏழையாக இருந்தபோதும்
அவருக்கு என்ன கொடுக்க முடியும்?
நான் ஒரு மேய்ப்பராக இருந்தால்
ஓர் ஆட்டுக்குட்டியைக் கொடுப்பேன்
நான் ஒரு ஞானியாக இருந்தால்,
என் பங்களிப்பைச் செய்வேன்
ஆனாலும் நான் அவருக்கு
என்ன கொடுக்க முடியும்?
என் இதயத்தைக் கொடுப்பேன்.

என்கிறார் ரோசெட்டி. இன்னும் சில நாட்கள். கலைமான்கள் இழுத்துவரும் பனிச்சருக்கு வண்டியில் சாண்டா நமக்கு எடுத்துவரப்போகிற பரிசு என்ன?  அது ரோசெட்டி போன்ற கவிஞர்களின் இதயம். உலகம் முழுவதும் அன்பை, இணக்கத்தை, நல்லெண்ணத்தை வைத்திருக்கும் இதயம். அப்படி ஒரு சாண்டாவாக வியனுக்கான பரிசுகளோடு திரும்பும்போது, வீசுகிற மார்கழிக் காற்றில் ஈரம் இருக்கிறது.

இந்த புவியை அன்பால் குளிர்விக்கிற ஈரமது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *