எது ஹைகூ?
இலை நகர்த்தும் நதி
அனிஷ்கா
(பாலஜோதி)

எனக்கு ஹைகூ எழுதத்தெரியாது. ஹைகூ என்பது நுணுக்கம். நாம் துய்க்கும் அபூர்வ தருணத்தில் இருக்கும்
அனைத்து மிதமிஞ்சிய கூறுகளையும் பிரித்தெடுத்து அகற்ற வேண்டும். பிறகு அந்தத் தருணத்தில் எஞ்சியிருப்பது வெறும் சாராம்சம் மட்டுமே. ஹைகூ வடிவத்திற்கு இடமளிக்க வேண்டிய அவசியம், ஒருவித பதற்றத்தை உருவாக்குகிறது. இத்தகைய பதற்றம்தான் ஒரு ஹைகூவில் எதிரொலிக்கும் அழகை மேம்படுத்துகிறது என நம்புகிறேன். பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிற எனக்கு இதன் பொருட்டும் ஹைகூ வாய்க்காமல் இருக்கலாம். புதுக்கோட்டை சகோதரர் பாலஜோதி என்மீது ‘பெருவாரியான’ அன்பு கொண்ட சகோதரர். களம் புதிது நிகழ்வுகளுக்காக புதுக்கோட்டையிலிருந்து சென்னை வரும் அன்பு அது.
விரிவாகப் புனைவுகளை எழுதும் அவருக்கு ஹைகூ நுணுக்கமும் கைவரப் பெற்றிருக்கிறது . இந்த ஹைகூ ஆர்வத்தை அவரது பயணங்கள், இயற்கையை உற்றுநோக்கம் குணம் , இவையெல்லாம் சேர்ந்து உருவாக்கியிருக்க வேண்டும். ஹைகூவுக்காக பாலஜோதி ‘அனிஷ்கா’ வாக மாறியிருக்கிறார்.
அவரது ஹைகூ நூல் ‘இலை நகர்த்தும் நதி’. பாஷோவின் ஹைகூக்களில் செர்ரி , டியூட்சியா, ஃபுயா போன்ற மலர்கள் வருகின்றன. ஹைகூவில் பாஷோ போன்றவர்கள் பொதுவாக மலர், பறவை என்று குறிப்பிடுவதில்லை. அதன் பெயரைக் குறிப்பிடுகிறார்கள். இதுதான் சூழல் மீதான ஆழ் நோக்கு.
பாஷோ மலர்களை குறிப்பிடுகின்றார் என்றால் அது வெறும் மலர் மட்டும் அல்ல. ஒரு மலரைச் சொல்வதன் மூலம் அது மலரும் பருவம், பண்பு என அனைத்தையும் வெளிப்படுத்துகிறார். டியுட்சியா என்பது கோடையில் காணப்படுகிற மலர். ஃபுயோ மலர் மழைக் காலத்தைக் குறிப்பது. செர்ரி வாழ்வின் நிலையற்றத் தன்மையை வெளிப்படுத்துகிற மலர். தமிழ் மண்ணிலிருந்து கவிதை எழுதும்போது நாம் செர்ரியை எழுத முடியாது.
‘உழவனின் குடிசையில்பூத்திருக்கிறது நூறுபூசணிப்பூ ‘
என்கிறார் அனிஷ்கா. பூசணி தை மாதத்தில் பூப்பது. அறுவடைக் காலத்தில் மலர்வது. வெப்ப மண்டல மலர். இது கூந்தலில் சூடிக்கொள்கிற மலர் அல்ல. தெய்வத்துக்கு சூட்டுகிற மலரும் அல்ல. உழுகுடிகளின் வாசலில் மலர்கிற கோலத்தை அலங்கரிக்கிற பூ. மல்லிகை பூக்கும். காய்க்காது. பூசணி அப்படியில்லை. அறுவடைக்காலத்தை, வளத்தை குறிப்பது.
ஹைகூவில் தேசத்துக்கு தேசம் பூக்கள், பறவைகள், மாறுகின்ற. ஆனால் அவை அந்த நிலத்தின் பருவத்தை, பண்பை வெளிப்படுத்தத் தவறவில்லை.
ஹைகூ என்பது ஜப்பானியர்களின் வாழ்க்கை முறையோடு இணைந்தது. ஹைகூக்கள் கற்பனையிலிருந்து அல்ல. நேரடி அனுபவத்திலிருந்தோ, நினைவிலிருந்தோ எழுதப்படுபவை. மற்ற கவிதை வடிவங்களுக்கும் ஹைகூவுக்கும் உள்ள ஒரு முக்கியமான வேறுபாடு . பெரும்பாலும் கவிதைகள் நம் உள்ளத்தின் கொந்தளிப்பை அல்லது அமைதியை வெளிப்படுத்துபவை. ஆனால் ஹைகூ வெளி உலகில் என்ன நடக்கிறது? என்பதில் கவனம் செலுத்துகிறது. நமது சூழலை உணர்வதில் முழு கவனத்தையும் செலுத்தி அதை எழுத்துக்கு கொண்டுவரும் புத்துணர்ச்சி ஹைகூவில் கிடைக்கிறது.
ஹைக்கூ என்பது அழகுக்கான ஒரு வாசல். உங்கள் கவனத்தை நிதானமாக்குவதற்கும், உங்கள் முன்னால் இருக்கும் தருணத்தின் பரந்த தன்மையை சுருக்குவதற்குமான ஒரு கருவி.
ஒருவர் ஹைக்கூவால் இந்த உலகைப் பார்க்கத் தொடங்கும்போது, எல்லா இடங்களிலும் உத்வேகத்தைக் காண்கிறார்கள். வாழ்க்கையின் விலைமதிப்பற்ற தன்மையையும் பலவீனத்தையும் அங்கீகரிக்கிறார்கள்.
ஹைக்கூ வடிவ அளவில் சிறியதாக இருக்கலாம். ஆனால், அச்சிறிய அளவு எத்தகையது? எனில், இதயத் துடிப்பு அளவிலானது. ஹைகூவை எழுதுகிறவர் ஒரு தருணத்தைப் பிடிக்கிறார். ஹைகூவை படிக்கிறவர் அந்த தருணத்திற்குள் நுழைகிறார்.
அதேவேளை ஒரு கவிதை வடிவம் இன்னொரு மொழிக்கு வருகிறபோது அந்த மொழியின் தனித்துவத்துக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்கிறது. அனிஷாவும் ஹைகூவை அரசியலோடு சூழல் பாதுகாப்போடு இசைவாக்க முயல்கிறார்.
‘மரத்தை வெட்ட வெட்ட
கண்டன முழக்கமிடுகின்றன
பறவைகள்’
பறவைகளின் பாடலை கண்டனமாக.
‘உழைப்பாளர் சிலைபார்க்கும்போதெல்லாம்வேர்க்கிறது’
சிலையை அழகியலாகப் பார்க்காமல் அரசியலாக.. ஹைக்கூவின் பண்புகளில் இருந்து விலகுகிறார் அனிஷ்கா . ஜப்பானில் இருந்து வந்த ‘யாகிசோபா’ சில வடிவ, சுவை, மாறுபாடுகளோடு நூடுல்ஸாகியது. ஜப்பானிய ‘யாகினிகு’ சில மாறூதல்களோடு BBQ வாக மாறியது. அப்படிதான் ஹைகூவும்.
நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தின் அற்புதம் முதல், ஒரு பட்டாம்பூச்சியின் இறக்கையின் மிகச்சிறிய அசைவுவரை, படம்பிடிக்கிற வாழ்வைத் தமிழர்களும் பெறவேண்டும். மாட்சுவோ பாஷோ கூறியபடி பைன் மரத்தைப் பற்றி அறிய, பைன் மரத்திற்குச் செல்ல வேண்டும். மூங்கிலைப் பற்றி அறிய, மூங்கிலுக்குச் செல்ல வேண்டும். ஆனால் பிழைப்பின் நிமித்தம் கவிஞர்கள் ஏதாவதொரு வேலைக்குப்போக வேண்டிய சூழல்.
பாஷோ காலமில்லை இது. டிரம்ப்பும் நிர்மலா சீத்தாராமனும் கோலோச்சுகிற காலம். இரைச்சிக்காக பறவைகள் விற்கப்படுகிற காலம். இருப்பினும் அனிஷ்கா வாழ்வின் வெளிப்பாட்டை, அதன் நேர்த்தியான கவனத்தை, கூடியவரை தன் ஹைகூக்கள் வழியாக, வாசகருக்குள் எழுப்ப முயல்கிறார்.
ஹைகூவை பலரும் தனிமையைப் பற்றிப் பேசுவது என நினைக்கிறார்கள். இல்லை. இலையுதிர்காலத்தின் அந்தியில், வெற்றுக் கிளையில் அமர்ந்திருக்கும் , ஒரு காகத்தைப் பாடுவதுதான் ஹைகூ.
●
வெளியீடு:
பிறகு பதிப்பகம்
No 75 & 76, 1 Floor, Kuppusamy street,
Balaji Nagar, Padi, Chennai 600050.