நவி பிள்ளை – சர்வதேச அமைதி முகம்
டிரம்ப் ஆதரவாளர்கள் இம்முறையும் ஆர்வமாகக் காத்திருந்தார்கள். அவரது ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவை எந்தவொரு புதிய வெளிநாட்டுப் போரிலும் ஈடுபடுத்தவில்லை. உலகெங்கிலும் பல மோதல்களைத் தீர்த்து வைத்திருக்கிறார். காரணமும் சொன்னார்கள். ‘இப்பல்லாம் நாதஸ் திருந்திட்டான் ?’ யார் சொல்றாங்க ? விசாரித்தால், ‘ அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொல்றாங்க!’, இஸ்ரேல் பாகிஸ்தான் தலைவர்கள் சொல்றாங்க!’ என்றார்கள்.
நோபல் விருது நவநீதம் பிள்ளைக்கு, (செல்லமா நவி பிள்ளை) அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்ப் பின்னணி கொண்டவர். இந்த pillay அனேகமாக தமிழ் வம்சாவழி கொடுத்தக் கொடையாக இருக்க வேண்டும். எளிய குடும்பத்தில் பிறந்து, சர்வதேச நீதித்துறையின் உச்சிக்குச் சென்ற அவரது வாழ்க்கை வரலாறு நிசயம் நம் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்க்கூடியது.
மனித உரிமைகள், சர்வதேசச் சட்டம், உலக அமைதிக்கான போராட்டத்தில் தவிர்க்க முடியாத ஆளுமை நவி பிள்ளை . தென்னாப்பிரிக்காவில் நிறவெறி ஆட்சிக்கு எதிரான ஒடுக்குமுறைகளைத் தாண்டி, சர்வதேச அரங்கில் நீதி மற்றும் சமத்துவத்தின் அடையாளமாக உயர்ந்தவர்.
உலகளாவிய மனித உரிமைப் பணிகளுக்காக மதிப்புமிக்க 2026-ம் ஆண்டிற்கான நோபல் அமைதிக்கான பரிசை வென்றுள்ளார். செப்டம்பர் 23, 1941 அன்று தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் பிறந்த நவி பிள்ளையின் வேர்கள் இந்தியாவைச் சேர்ந்தவை. தமிழ் வழித் தோன்றலான இவரது பெற்றோர் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியவர்கள். தந்தை பேருந்து ஓட்டுநர். பணியாற்றினார். அம்மா குடும்பத் தலைவி.
தென்னாப்பிரிக்காவின் கொடூரமான நிறவெறி ஆட்சியில் அடிப்படை உரிமைகளின்றி ஒடுக்கப்பட்ட சூழலில் வளர்ந்தார் நவி பிள்ளை. சமூகத்தில் நிலவிய கடுமையான வர்க்க மற்றும் இனப் பாகுபாடுகளைச் சிறு வயதில் கண்டவர். கல்வி ஒன்றே தன்னை விடுவிக்கும் வழி என்பதை உணர்ந்து கடுமையாகப் படித்தார். டர்பன் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார் . 1963-ல் இளங்கலை பட்டம் (BA). 1965-ல் சட்டப் பட்டமும் (LLB) பெற்றார். நிறவெறிச் சூழலில் பெண்கள், குறிப்பாக கறுப்பின மற்றும் இந்திய வம்சாவளிப் பெண்கள் உயர் கல்வி பெறுவது, சட்டம் பயில்வது மிகக் கடினம். பல தடைகளைத் தாண்டி சட்டக் கல்வியை நிறைவு செய்தார்.
1967-இல் தென்னாப்பிரிக்காவின் நடால் மாகாணத்தில் சொந்தமாகச் சட்ட அலுவலகத்தைத் தொடங்கினார். அப்பகுதியில் சட்ட நிறுவனம் தொடங்கிய முதல் பெண் வழக்கறிஞர் என்ற பெருமையைப் பெற்றார். தென்னாப்பிரிக்காவில் நிறவெறி அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்த அரசியல் கைதிகள், கறுப்பின இயக்கத் தலைவர்கள் மற்றும் மனித உரிமைப் போராளிகளுக்கு ஆதரவாக நீதிமன்றங்களில் வாதாடினார்.
காவலில் கைதிகள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதை வெளிச்சம் போட்டுக் காட்டினார். அரசியல் கைதிகளின் அடிப்படைச் சட்ட உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்தார். நெல்சன் மண்டேலா தலைமையிலான சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு சட்ட உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கிய முன்னணி வழக்கறிஞர்களில் இவரும் ஒருவர். அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் (1982 ) சட்ட முதுநிலைப் பட்டம் (LLM), மற்றும் 1988-ல் சட்டவியலில் டாக்டர் பட்டம் (SJD) பெற்றதன் மூலம் உயர்த்திக் கொண்டார்.
நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்தது. நெல்சன் மண்டேலா நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றார். தென்னாப்பிரிக்க நீதித்துறையில் சிறப்பான மாற்றங்கள் நிகழ்ந்தன. 1995-ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்க உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் கறுப்பினப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை நவி பிள்ளை படைத்தார். இதனைத் தொடர்ந்து இவரது திறமை சர்வதேச நீதித்துறையில் வெளிப்பட்டது.
ருவாண்டா சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் (ICTR) நீதிபதியாக நியமிக்கப்பட்டார் நவி பிள்ளை . 1999 முதல் 2003 வரை அதன் தலைவராகப் பணியாற்றினார். 1994-ல் ருவாண்டாவில் நடைபெற்ற இனப்படுகொலையின் போது பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகளை வெறும் போர்க்கால நிகழ்வாகப் பார்க்க முடியாது. அவை இனப்படுகொலையின் ஒரு வடிவம் என்று தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பு சர்வதேசச் சட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
2003 முதல் 2008 வரை நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாகச் செயல்பட்டார். போர் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் தலைவர்களைத் தண்டிக்க சர்வதேச சட்ட விதிகளை வலுப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டார்.
2008 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையராக, ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனால் நியமிக்கப்பட்டார். 2008 முதல் 2014 வரை இப்பொறுப்பில் இவர் ஆற்றிய பணிகள் உலகளாவிய கவனத்தைப் பெற்றன.
எந்தவொரு வல்லரசின் அழுத்தத்திற்கும் பணிந்துபோகாமல், உலகெங்கிலும் நடக்கும் மனித உரிமை மீறல்களை வெளிப்படையாக விமர்சித்தார். போர்க்காலங்களில் பொதுமக்கள் தாக்கப்படுவதைக் கண்டித்ததார். சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்க அரணாகச் செயல்பட்டார்.
பாலஸ்தீனம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுயேச்சையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக நின்றவர்.
சட்டப் போராட்டங்கள் மற்றும் நீதிபதிப் பணிகளைத் தாண்டி, பெண்களின் உரிமைகளுக்காகவும் சமத்துவத்திற்காகவும் தீவிரமாகக் களமிறங்கினார். 1992-ஆம் ஆண்டில் ஜெசிகா நியூவிருத் (Jessica Neuwirth) போன்ற மனித உரிமைத் தலைவர்களுடன் இணைந்து ‘ஈக்வாலிட்டி நௌ’ (Equality Now) என்ற சர்வதேச அமைப்பைத் தோற்றுவித்தார். இந்த அமைப்பு உலகெங்கிலும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடூரமான நடைமுறைகள், கட்டாயக் குழந்தைத் திருமணங்கள், மற்றும் பெண் உறுப்பு சிதைப்பு போன்றவற்றுக்கு எதிராகச் சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
பல்வேறு உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும், சர்வதேச சட்ட விதிகளை நிலைநிறுத்தவும் மனித உரிமைகளுக்காகவும் சமரசமின்றி வாழ்நாள் முழுவதும் போராடிய நவி பிள்ளை, 2026-ஆம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசுக்கு தேர்வாகி உள்ளார். துணிச்சல், நேர்மை மற்றும் மனிதநேயத்தின் குறியீடான இவரது வாழ்வு, உலகெங்கிலும் நீதிக்காகப் போராடும் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டக் கூடியது.