Thursday, October 22, 2026

Writer Karikalan

எழுத்தாளர் கரிகாலன்

தொடர்

ஷெல்பி மேரி – ஆன்மக் கலைஞர்

இன்ஸ்டா 20/20

தொடர் – 9

அன்றன்றைய  உணர்வுகளை அவ்வப்போதே கடத்திவிடுகிற சூழல்.  கவிதை இப்போது உயர்குடி சிந்தனையாளர்களுக்கு என்பது மாறிவிட்டது.  சராசரி மனிதரின் அன்றாடத் துயரம், காதல், மனக்காயம் மற்றும் மீண்டெழும் நம்பிக்கை ஆகியவை நவீன கவிதையின் இயல்பாக மாறியுள்ளது.

​கனடா நாட்டின் ஒன்ராறியோ (Ontario) மாகாணம். அங்கு  இங்கர்சால் (Ingersoll) என்றொரு எழில்மிகு சிறு நகரம். அங்கிருந்து  தன் செழித்த வரிகளால் உலகெங்கும் உள்ள கவிதை விரும்பிகளின் இதயங்களை வென்றவர் ஷெல்பி மேரி (Shelby Marie). 1911 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பழமையான அச்சுப்பொறியில் விரல்களால் கவிதைகளை தட்டச்சு செய்கிறார். இந்த எழுத்துருவே கவிதைக்கு  ரம்மியமான vintage aesthetic ஆன்மீகத் தன்மையை தருகிறது.

​சிறுவயதிலிருந்தே மேரிக்கு வாசிப்பிலும், நாட்குறிப்பு எழுதுவதிலும், கலைப்படைப்புகளை உருவாக்குவதிலும் தீராத ஆர்வம்.  பூனைகள், பழங்காலப் பொருட்கள் , இலையுதிர்காலத்தின் (Autumn) மெல்லிய குளிர்,  வண்ணங்கள், இவற்றை நேசிக்கும் இயல்பு. இவை இவரது கவிதைகளிலும்  ஊடுருவியதில் வியப்பில்லை.

​2017 ஆம் ஆண்டின் தொடக்கம்.  Shelby Marie Poetry என்ற பெயரில் ஒரு இணையவழி கைவினை மற்றும் கவிதைப் அங்காடியைத் தொடங்கினார். தான் எழுதும் கவிதைகளை வெற்றுப் பக்கங்களில் அச்சிடாமல், பழமையான அச்சுப்பொறியில் தட்டச்சு செய்தார்.  அவற்றுக்குத் தானே கைப்பட ஓவியங்கள் வரைந்தார். அவற்றை சட்டமிட்டு விற்கும்  புதுமையான முயற்சியை மேற்கொண்டார்.

கவிஞராக மட்டுமின்றி, ஒரு கலைப் படைப்பாளியாக, தொழில்முனைவோராகப் பரிணமித்த ஷெல்பி மேரி, கைவினைப் பொருட்களுக்கு ஆன்மா உண்டு என்பதைத் தன் படைப்புகள் மூலம் நிரூபித்தார். இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக்கில் இவரது வரிகள் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைக் கவர்ந்தன.

​​ஷெல்பி மேரி வெளியிட்ட கவிதைத் தொகுப்புகள், தனிமனித மனப்போராட்டங்களை இயல்பாகப் படம் பிடித்துக் காட்டுபவை. ​2019-இல் வெளியான டு வாக் ஆன் மூன்பீம்ஸ் தொகுப்பு ஷெல்பி மேரியின் முதல் கவிதை நூல். நிலவொளியில்  நடத்தல். தலைப்பே உணர்த்துவது போல, இத்தொகுப்பு மனிதரொருவர் இதய முறிவிலிருந்து (Heartbreak) எவ்வாறு மெல்ல  மீண்டு வருகிறார்? என்பதை அழகுற விவரிக்கிறது.

காதல் தோல்வி, துக்கம், காயங்களை ஆற்றுதல் மற்றும் தன்முனைப்புடன் சுய அன்பைக் கண்டடைதல், எனபதாக இக்கவிதைகளின் பாடுபொருட்கள் அமைந்திருக்கின்றன. வாழ்க்கை சோதனைகளைக் கொடுக்கும்போது, சோர்ந்து போகாமல் அன்றாடக் காரியங்களில் இருக்கும் சிறு சிறு அற்புதங்களைக் கண்டறிந்து வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் வரிகளால் நிரம்பியவை. தோல்வியுற்ற பிறகும் மீண்டும் வாழத் துணியும் ஒவ்வொரு போராளிக்கும் சமர்ப்பணம் செய்யப்பட்ட நூலாக இது திகழ்கிறது.

​டு டான்ஸ் இன் ஸ்டார்டஸ்ட், ​2023-இல் வெளியான தொகுப்பு. ஷெல்பி மேரியின் கவிதை முதிர்ச்சியை உலகிற்குப் பறைசாற்றியது.  சரியான நபரை தவறான காலத்தில் சந்தித்தால் என்னவாகும்?( Falling for the right person at the wrong time) என்ற கேள்வியை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட தொகுப்பு இது.

பிரிவின் வலியைக் கடந்து, சரியான நேரம் வரும்போது மீண்டும் அந்த அன்பைப் புதுப்பிக்கத் துணியும் ஆன்மாவின் தைரியத்தைப் பற்றி இக்கவிதைகள் பேசுகின்றன. இந்நூலில் உள்ள ஒவ்வொரு கவிதைக்கும் ஷெல்பி மேரியே வரைந்த  மெல்லிய ஓவியங்கள் (Ethereal Illustrations) வாசகர்களுக்கு புதுவித வாசிப்பு அனுபவத்தைத் தருகின்றன.

​நம்கால  இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் மன அழுத்தம். உறவுகளில் ஏற்படும் விரிசல்கள்.  ‘உடைந்த பிறகும் நீ அழகாகத்தான் இருக்கிறாய்’ என்ற செய்தியை இவர் கவிதைகள் மீண்டுமீண்டும் வலியுறுத்துகின்றன. வாழ்க்கையின் மிகப்பெரிய மகிழ்ச்சி பெரிய சாதனைகளில் இல்லை. மாறாக, ஒரு கோப்பை சூடான தேநீரில், இலையுதிர்கால இலைகளின் சலசலப்பில், அல்லது இரவில் நிலவைப் பார்க்கும் சில நொடிகளில் இருக்கிறது என்பதை Seeking magic in the ordinary என்ற தன் தத்துவத்தின் மூலம்  உணர்த்துகிறார்.

​​ரூபி கவுர்  போன்ற  இன்ஸ்டா கவிஞர்கள் உரைநடை  கவிதைகளால் புகழ்பெற்ற சூழலில், ஷெல்பி மேரி அந்த பாணியோடு செவ்வியல் கவிதையின் மென்மையையும் கைவினைப் பொருட்களின் அழகியலையும் இணைத்துத் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொண்டார். கனடாவின் சிறு நகரமான இங்கர்சாலில் இருந்து கொண்டு, தன் ‘ஹோம் ஸ்டுடியோ’ மூலமாக உலகளவில் கவிதைகளை ஏற்றுமதி செய்யும் இவர், டிஜிட்டல் யுகத்திலும் அச்சுப் புத்தகங்களுக்கும், கைப்படத் தட்டச்சு செய்யப்பட்ட கவிதைகளுக்கும் இருக்கும் மதிப்பை உலகிற்கு மீட்டுத் தந்துள்ளார்.

​​ஷெல்பி மேரி கவிதைகளில் வார்த்தைகளைக் கோர்ப்பவர் மட்டுமல்லர். மனித மனங்களின் காயங்களுக்கு மருந்தும், நம்பிக்கையற்றவர்களுக்கு நிலவொளியும் தருகிற ஒரு கலை ஆன்மா. துயரத்தின் இருண்ட இரவுகளில் தடுமாறும் வாசகருக்கு, ‘மீண்டும் எழுந்து விண்மீன்களோடு நடனம் ஆடு’ என்று வழிகாட்டுபவர்.  தூய்மையான அன்பையும், ஆறாத மனக்காயங்களின் மீட்சியையும், இயற்கையின் மென்மையையும் ரசிக்க விரும்பும் ஒவ்வொரு கவிதை ரசிகரின் புத்தக அலமாரியிலும் ஷெல்பி மேரியின் நூல்களுக்கு இடம் இருக்கிறது.

​

ஷெல்பி மேரி கவிதைகள்

 

1

நான் தனிமையாக உணர்கிறேன் என்றான் அவன்.

‘பரவாயில்லை,

கொடுப்பதற்கு என்னிடம்

இன்னும் கொஞ்சம் அன்பு இருக்கிறது’

அவனிடம் சொன்னாள்.

 

2

நீ என்னை பார்த்து சிரித்தது நினைவிருக்கிறது

தீயில் நடனமாடியது

என் சுடர்களில் திளைத்தது

என் இருள் என்னை நெருங்கும் போது

நான் தப்பி ஓடலாம்

அல்லது அதற்கு பதிலாக இன்னும் பிரகாசமாக எரியலாம் என்று சொன்னது

 

3

நீயும் நானும் மட்டும்தான்

நாம் உருவாக்கிய இந்த உலகில்

நாம் இப்படி காதலில் திளைத்திருக்கும்போது

எந்த வலியும் மனவேதனையும்

நம்மைத் தொட முடியாது

 

நாம் என்றென்றும் ஒன்றாக இருப்போம்.

 

4

நாளை ஒரு பொருட்டல்ல

இவற்றில் எதுவுமே ஒரு பொருட்டல்ல

நீ இல்லாமல்

 

5

சிலர் நம் வாழ்வில்

தற்காலிக அன்பாக வருகிறார்கள் ஆனால் நீங்களோ

தற்காலிக அன்பு அல்ல.

நீங்கள் நித்தியமானவர்.

(ஷெல்பி மேரியின் இன்ஸ்டாகிராம் கணக்கு – iseesomeletters )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *