Sunday, October 25, 2026

Writer Karikalan

எழுத்தாளர் கரிகாலன்

தொடர்

கேட் பேர் – இன்ஸ்டாகிராம் யுகத்தின் எளிய குரல்

கேட் பேர் (Kate Baer) – இன்ஸ்டாகிராம் யுகத்தின் எளிய குரல்

~~~

​’மானுக்குப் பொறி வைப்பது விதிமீறல் என்பார்கள், ஆனால் ஒரு பெண்ணுக்கு விஷம் வைப்பது டேட் என்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?’ இந்தக் கவிதைதான் அமெரிக்க கவிஞரான கேட் பேரை (Kate Baer) தேட வைத்தது. டிஜிட்டல் யுகம், இலக்கியத்தின் வடிவத்தையும் அதன் நுகர்வுத் தன்மையையும் இன்று முற்றிலும் மாற்றிய அத்திருக்கிறது. குறிப்பாக, ‘இன்ஸ்டா கவிதைகள்’ எனும் புதிய இலக்கிய அலை  இப்போது உருவாகி இருக்கிறது. இந்த அலையில் எழுந்த கேட் பேர், தன் இயல்பான குரலாலும், ஆழமான சமூகப் பார்வையாலும், பெண்மையின் எதார்த்தங்களைப் பேசும் வரிகளாலும் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளார்.

​நியூயார்க் டைம்ஸ் (New York Times) விற்பனைப் பட்டியலில் முதலிடம் பிடித்த ‘வாட் கம்ஸ் வித் இட்’ (What Comes With It), ‘ஐ வுட் லீவ் மீ டூ’ (I Would Leave Me Too), மற்றும் ‘ஆண்ட் யேட்’ (And Yet) போன்ற கவிதைத் தொகுப்புகளின் மூலம் நவீன கவிதை உலகிலும், இணைய சமூகத்திலும் முன்னணி இடத்தை பிடித்தவர் கேட் பேர்.

​அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் பிறந்தவர். சிறு வயது முதலே எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.  கல்லூரியில் ஆங்கில இலக்கியம் மற்றும் படைப்பாக்க எழுத்து (Creative Writing) பயின்றவர். பட்டம் பெற்ற பிறகு, நாளிதழ்கள் மற்றும் இணைய இதழ்களுக்குச் சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதி வந்தார்.

​இதற்கிடையே நான்கு குழந்தைகளுக்குத் தாயானார்.  குடும்பப் பொறுப்புகள், தாய்மையின் சவால்கள் இவற்றினூடாக தனிப்பட்ட அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான போராட்டமே இவரை கவிதையின் திசையில் நகர்த்தியது.  வீட்டுப் பணிகளக்கு மத்தியிலும்,  கிடைத்த சொற்ப நேரங்களில் தன் எண்ணங்களைக் கவிதைகளாக வடிக்கத் தொடங்கினார்.

​சமூக ஊடகங்கள் வளரத் தொடங்கிய காலத்தில், கேட் பேர் தன் எழுத்துகளைப் பகிர்வதற்கான தளமாக இன்ஸ்டாகிராமைத் தேர்ந்தெடுத்தார். இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிடும் கவிதைகள் மிகவும் எளிமையானவை. வெள்ளைப் பின்னணியில்,டைப்ரைட்டர் எழுத்துருவில் கவிதைகளைப் பதிவிட்டார். இந்த பாணியால் கவனம் சிதறாமல், சொற்களின் மீது மட்டுமே வாசகர்களின் கவனம் குவிந்தது. கவிதைகளைப் பகிர்வதுடன் நிறுத்தாமல், கமெண்ட் பகுதியில் வாசகர்களின் கருத்துகளுக்குப் பதிலளிப்பது, தன் வாழ்க்கையின் எதார்த்தமான தருணங்களை பிரதிபலிக்கிற ஃபில்டர் இல்லாத  புகைப்படங்களைப் பகிர்வது எனத் தன் கணக்கை ஒரு திறந்த புத்தகமாகப் பராமரித்தார்.

​இன்ஸ்டாகிராமில் அவருக்குக் கிடைத்த ஆதரவு, பாரம்பரியப் பதிப்பகங்களின் கவனத்தை ஈர்த்தது.  விளைவாக, 2020-ஆம் ஆண்டு வெளியான அவரது முதல் கவிதைத் தொகுப்பான “வாட் கம்ஸ் வித் இட்” (What Comes With It) நியூயார்க் டைம்ஸ் பெஸ்ட் செல்லர் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.

கேட் பேரின் கவிதைகள் மனித வாழ்க்கையின் நுட்பமான, கவனிக்கப்படாத தருணங்களை மையமாகக் கொண்டவை. ஒரு கவிதையைப் பார்ப்போம்.

 

‘நான் என்னை

ஒரு தாயாகக் கனவு கண்டேன்,

ஆனால் நான் அவளாக மாறியபோது, ​​

அவளை மீண்டும் ஒரு பெண்ணாக,

மீண்டும் ஒரு பெண்ணாக,

மீண்டும் ஒரு பெண்ணாகக்

கனவு காண வேண்டியிருந்தது.

நல்ல தாய்: அவள் மல்லாந்து படுத்திருக்கிறாள்,

காயம் போலத் திறந்த சட்டையுடன்,

தன் குழந்தையின் அழுகை தொடங்குவதற்காகக் காத்திருக்கிறாள்.’

 

​தாய்மை என்பதைப் பெரும்பாலான சமூகங்கள் புனிதப்படுத்தி, சிரமங்களை மறைத்து ஒரு அழகான சித்திரமாக மட்டுமே சித்தரிக்கின்றன. ஆனால் கேட் பேர், தாய்மையின் உண்மையான, எதார்த்தமான பக்கத்தைப் பேசுகிறார். தாய் என்பது ஒரு பெண்ணின் அடையாளத்தின் ஒரு பகுதிதானே தவிர, அதுவே முழுமையான அடையாளம் அல்ல என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.

​இவரது கவிதைகளில் மீண்டும் மீண்டும் வெளிப்படும் சில விசயங்கள் இடம்பெறுகின்றன. தூக்கமின்மை, உடல் சோர்வு, தன் தனிப்பட்ட அடையாளத்தை இழந்துவிடுவோமோ என்ற பயம், அதே வேளையில் குழந்தைகளிடம் இருக்கும் பேரன்பு என அனைத்தையும் வெளிப்படையாக எழுதுகிறார்.

​பெண்களின் உடல் குறித்த சமூகத்தின் கட்டுப்பாடுகளையும், அழகுத் தரநிலைகளையும் கேட் பேர் கடுமையாக விமர்சிக்கிறார். பிரசவத்திற்குப் பிறகு மாறும் பெண்களின் உடல் அமைப்பு, சுருக்கங்கள், தழும்புகள் ஆகியவை அசிங்கமானவை அல்ல. அவை ஒரு வாழ்வின், ஒரு மாற்றத்தின் சாட்சியங்கள். என்பதைத் தன் கவிதைகளில் உரக்கச் சொல்கிறார். பெண்கள் தங்கள் உடலை நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நேர்மறை எண்ணத்தை விதைக்கிறார்.

​திருமணம் என்பது ஒரு மாயாஜால வாழ்க்கை அல்ல.  அது தினசரி சமரசங்களும், புரிதல்களும் கொண்ட ஒரு பயணம் என்பதை அவரது கவிதைகள் உணர்த்துகின்றன. அன்பும் அக்கறையும் இருக்கும் அதே நேரத்தில், திருமண வாழ்க்கைக்குள்ளும் ஒரு பெண் உணரக்கூடிய தனிமை, முரண்பாடுகள் ஆகியவற்றை ஒளிவு மறைவின்றி எழுதுகிறார்.

​கேட் பேரின் படைப்புகளில் மிகவும் புகழ்பெற்ற ஒன்று அவரது ‘Erasure’ கவிதைகள். சமூக ஊடகங்களில் வரும் வெறுப்புச் செய்திகள் , பாலியல் ரீதியான வசைபாடல்கள்,  எதிர்மறைக் கருத்துகளைக் கொண்ட மின்னஞ்சல்களை எடுத்துக்கொண்டு, அதில் உள்ள தேவையற்ற வார்த்தைகளைக் கறுப்பு நிறத்தால் அழித்து, எஞ்சியிருக்கும் வார்த்தைகளைக் கொண்டு முற்றிலும் அழகான, சக்திவாய்ந்த எதிர்வினைக் கவிதையாக மாற்றுவார்.

உதாரணமாக ஒருவர்  அவரைத் தரக்குறைவாக விமர்சித்து அனுப்பிய நீண்ட மின்னஞ்சலில் உள்ள வார்த்தைகளை அழித்து, ‘நான் என் குரலை உயர்த்தப் போகிறேன், நீங்கள் என்னைத் தடுக்க முடியாது’ என்ற நேர்மறையான வரிகளை உருவாக்குவார். இந்த உத்தி, தனக்கு எதிராக ஏவப்படும் நச்சுக் கருத்துகளையே (Toxicity) தனக்கான கலையாக மாற்றும் அவரது முற்போக்கான சிந்தனையைக் காட்டுகிறது.

​​இன்ஸ்டா கவிதைகள் என்றாலே அது அவை ஆழமற்றது, மேலோட்டமானது, போன்ற விமர்சனங்களை கேட் பேர்   பொய்யாக்கினார். கேட் பேர், இன்ஸ்டாகிராமை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தினார். தவிர, தன் கவிதையின் தரத்தைக் குறைத்ததில்லை. மிகச் சிறிய வரிகளிலும் ஆழமான அரசியல், பெண்ணியம் மற்றும் மானுட உணர்வுகளைக் கடத்த முடியும் என்பதை நிரூபித்தார்.

​கேட் பேர் கவிஞர் மட்டுமல்லர். சமூக ஊடகங்கள் வழியாக மனநலம் மற்றும் பெண் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் ஒரு செயல்பாட்டாளராகவும் திகழ்கிறார். கவலை, மனச்சோர்வால் மற்றும் தாய்மார்களுக்கு ஏற்படும் பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு (Postpartum Depression) குறித்து வெளிப்படையாகப் பேசி, வாசகர்களுக்குத் தான் தனியாக இல்லை என்காற நம்பிக்கையைத் தருகிறார்.

பெண்களுக்கான சுதந்திரம், சுயமரியாதை, மற்றும் முடிவெடுக்கும் அதிகாரம் ஆகியவற்றை வலியுறுத்தி தொடர்ந்து எழுதி வருகிறார். இன்ஸ்டாகிராமில் மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ள கேட் பேர், பெண்களுக்கான ஒரு பாதுகாப்பான உரையாடல் தளத்தை உருவாக்கியுள்ளார். ​சமூக ஊடகம் என்ற நவீன மேடையைப் பயன்படுத்தி, காலத்தால் அழியாத மானுட உணர்வுகளையும், பெண்களின் எதார்த்தமான வாழ்க்கையையும் கவிதைகளாக மாற்றியதே அவரது வெற்றி.

​இன்ஸ்டாகிராம் போன்ற வேகமான உலகத்திலும், ஒரு சில விநாடிகள் நின்று நிதானித்து, யோசிக்க வைக்கும் வல்லமை இவரது கவிதைகளுக்கு உண்டு. தாய்மை, பெண்மை, அன்பு, மற்றும் எதிர்ப்பு என வாழ்க்கையின் அனைத்துப் பக்கங்களையும் தன் எளிய சொற்களால் தொட்டுச் செல்லும் கேட் பேர், நவீன கவிதை வரலாற்றில் இன்ஸ்டா யுகத்தின் முன்னணி கவிஞராகத் தொடர்ந்து மிளிர்கிறார்.

 

கேட் பேர் (Kate Baer) கவிதைகளில் இருந்து சில வரிகள்

 

1

நீங்கள் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை:

ஒரு கனவு அல்லது கனவு காண்பவர்,

பறவை அல்லது பறவை ஆர்வலர்.

நீங்கள் பரபரப்பும் அமைதியும் கொண்ட பெண்ணாக இருக்கலாம்.

மாயமும் அறிவும் நிறைந்தவராக இருக்கலாம்.

 

நீங்கள் ஒரு தாயாகவும் கவிஞராகவும் இருக்கலாம்.

ஒரு மனைவியாகவும்

காதலியாகவும் இருக்கலாம். செவ்வாய்க்கிழமை நீங்கள் தோண்டிய கல்லறைகளின் மீது நடனமாடலாம்

நீங்கள் இழக்கத் தொடங்கிய

உங்கள் எலும்புகளை வெளியே எடுக்கலாம்.

 

2

ஒரு மனைவியைப் போல…

 

என் திருமணத்திற்கு முந்தைய வாரம்,

என் நண்பனின் அப்பா சொன்னார்

மற்ற மனைவிகளைப் போல

நீயும் குண்டாகிவிடாதே.

 

அதனால், நான் அவரை

ஆழமான உப்பு நீரில் மூழ்கடித்து,

தைம் மற்றும் செலரியைச் சேர்த்தேன் .

ஒரு பெண்ணுக்கு எவ்வளவு

பசியாக இருக்கும் என்பதை

அவர் பார்க்க வேண்டும் என்பதற்காக,

அவரை ஒரு பெரிய கடியில்

முழுவதுமாக விழுங்கிவிட்டேன்.

 

 

3

எந்த ஒரு தருணத்திலும்,

யாரோ ஒருவர் தான் எப்போதுமே விரும்பியதைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்.

இதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதை விட

 

ஒரு நாளைக் கெடுப்பதற்கு வேறு விரைவான வழி இருப்பதாக

எனக்குத் தெரியவில்லை.

 

 

4

நம்மை வீடு வரை

அழைத்துச் செல்லும் பெண்கள்.

 

ஒரு பை நிறைய துணிகளுடனும்,

வாடிய நான்கு எலுமிச்சைகளுடனும்,

தன் சகோதரியின்

பராகுவே பயணத்தைப் பற்றிய

ஒரு அரைகுறை கதையுடனும் வருபவர்கள். நமது இரகசியங்களைக் காப்பவர்கள்

நாம் அறிந்த ஒவ்வொரு பெருங்கடலிலும், தொட்டிச் செடிகளிலும்

நாம் யாருடைய இரகசியங்களைக் காக்கிறோமோ,

அவர்களுடைய இரகசியங்களைக் காப்பவர்கள் .

நமது கணவர்களையும்,

அவர்களின் சிறு இன்பங்களையும் அறிந்தவர்கள்.

நமது காதலர்களையும்,

நமது வடுக்களையும் அறிந்தவர்கள்.

ஒரு விட்டில் பூச்சியைப் போல நம்பிக்கையுடன் தங்கியிருப்பவர்கள். பிளந்து கிடக்கும் கல்லறையை உற்றுப் பார்த்து, அது திறக்கப்படுவதைக் கண்டு அஞ்சாதவர்கள். அப்போதும் கூட

நம்மை வீடு வரை அழைத்துச் செல்ல

அங்கே இருப்பவர்கள் .

 

5

பிரிந்து செல்லும் எண்ணத்தை விடுவித்து,

அதை கதவில் கட்டிவிடு

(கேட் பேர் இன்ஸ்டாகிராம் கணக்கு – iseesomeletters )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *