Saturday, October 24, 2026

Writer Karikalan

எழுத்தாளர் கரிகாலன்

தொடர்

ஆர்ச் ஹேடிஸ் – கவிதைகளை டிஜிட்டல் கலையாக மாற்றியவர்

இன்ஸ்ட்டா 07/20

சமூக ஊடகங்கள் உலகளவில் கலை மற்றும் இலக்கியப் படைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக இன்ஸ்டாகிராம். காட்சி சார்ந்த இயங்குதளமாக அது, ‘இன்ஸ்டா கவிதை’ என்ற  இலக்கிய வகையை உருவாக்கியுள்ளது. குறுகிய, எளிமையான, காட்சி வடிவிலான வரிகளால் லட்சக்கணக்கான வாசகர்களைக் கவர்ந்து வருகிறது.  இந்தத் துறையில், தனக்கென ஒரு தனித்துவமான தடம் பதித்தவர் பிரிட்டனைச் சேர்ந்த கவிஞரும் எழுத்தாளருமான ஆர்ச் ஹேடிஸ் (Arch Hades).

​அனாயாசமான காதல் வரிகள், மன அழுத்தம், தனிமை மற்றும் சமகால வாழ்க்கையின் சவால்களைப் பிரதிபலிக்கும் இவரது கவிதைகள் இன்ஸ்டாகிராமில் பெருமளவில் வைரலாகின்றன. இன்ஸ்டா கவிஞராகத் தன் பயணத்தைத் தொடங்கி,  புத்தக வெளியீடு, நாடகம், காட்சி கலை மற்றும் உலகளாவிய இலக்கிய மன்றங்கள் எனத் தன் எல்லைகளை விரிவுபடுத்தியிருக்கிறார் ஆர்ச் ஹேடிஸ்.

1992-ஆம் ஆண்டு செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் (ரஷ்யா)  பிறந்தவர். சிறுவயதிலேயே இங்கிலாந்துக்கு  இடம்பெயர்ந்தார். அங்குள்ள முன்னணிப் பள்ளிகளில் கல்வி கற்றார்.  லண்டன் பல்கலைக்கழகத்தின் மதிப்புமிக்க ‘கிங்ஸ் காலேஜ்’ நிறுவனத்தில் அரசியலறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார்.

​அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் சார்ந்த அவரது கல்விப் பின்புலம், மனித சமூகத்தின் மனநிலை, அதிகாரக் கட்டமைப்புகள் மற்றும் தனிமனித முரண்பாடுகளைப் பற்றிய ஆழ்ந்த பார்வையை அவருக்கு வழங்கியது. இருப்பினும், இயல்பிலேயே கலையின் மீதும் மொழியின் மீதும் இருந்த ஈர்ப்பு, அவரை கவிதை உலகை நோக்கித் திருப்பியது.

​தான் எதிர்கொண்ட தனிப்பட்ட வாழ்க்கைப் போராட்டங்கள், காதல் முறிவுகள், மன உளைச்சல்கள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களை எழுத்து வடிவில் மாற்றத் தொடங்கியதே அவரது கவிதைப் பயணத்தின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

​இன்ஸ்டாகிராம் இயங்குதளம் , கவிதைகளை அணுகும் முறையை அடியோடு மாற்றியமைத்தது. பாரம்பரிய கவிதைகள் கடினமான சொற்களாலும், சிக்கலான உருவகங்களாலும் நிரம்பியிருந்த நிலையில், இன்ஸ்டா கவிதைகள் நேரடியான, எளிய மற்றும் காட்சிப்பூர்வமான அனுபவத்தை வழங்கின.

​ஆர்ச் ஹேடிஸ்,  காதல், ஏமாற்றம், சுய பரிசோதனை, மன நலம் மற்றும் காலத்தின் ஓட்டம் போன்ற மனிதனின் அடிப்படை உணர்வுகளை மையமாகக் கொண்டு கவிதைகளை உருவாக்கினார்.  சமூக ஊடகப் பயனர்களின் குறுகிய கவன ஈர்ப்பு நேரத்தைக் கருத்தில் கொண்டு, ஓரிரு வரிகளிலேயே ஆழமான சிந்தனையைத் தூண்டும் வகையில் வரிகளை அமைத்தார்.

​இன்ஸ்டாகிராமில் கிடைத்த பிரம்மாண்டமான வரவேற்பு, அவருக்கு ஆயிரக்கணக்கான பின்தொடர்பாளர்களைப் பெற்றுத் தந்ததோடு, பாரம்பரிய பதிப்பகங்களின் கவனத்தையும் அவர் பக்கம் திருப்பியது.

​இன்ஸ்டாகிராமில் புகழ்பெற்ற போதிலும், ஆர்ச் ஹேடிஸ் தன்னை வெறும் சமூக ஊடகக் கவிஞராக மட்டும் சுருக்கிக் கொள்ளவில்லை. அவர் தனது கவிதைகளைத் தொகுத்து  புத்தகங்களாக வெளியிட்டு,  புகழ்பெற்ற எழுத்தாளராக உருவெடுத்தார்.

High Tide (2018) அவரது முதல் தொகுப்பு. காதல், மனமுறிவு மற்றும் மனித உணர்ச்சிகளின் கொந்தளிப்பை ‘அலைகளின் ஏற்ற இறக்கங்களோடு’ ஒப்பிட்டு எழுதப்பட்ட நூல். குறுகிய காலத்தில் அமேசான் விற்பனையில் முதலிடம் பிடித்து, அவரை ஒரு முக்கிய கவிஞராக அடையாளம் காட்டியது.Fool’s Gold (2019) அவரது இரண்டாவது தொகுப்பு. போலி உறவுகள், சமூக எதிர்பார்ப்புகள் மற்றும் சுயமதிப்பு பற்றிய கருத்துக்களை மையப்படுத்தினார். மனித உறவுகளில் இருக்கும் போலித்தன்மையை அவிழ்த்துக் காட்டும் வரிகள் இதில் இடம் பெற்றிருந்தன.

Chasing Clouds (2020), இந்த நூல் அவரது கவிதைப் பயணத்தின் ஒரு முக்கிய மைல்கல். இதில் கவிதைகளோடு சேர்த்து, ஒரு முழுமையான நீண்ட கவிதை நாடகத்தையும் இவர் எழுதியிருந்தார். நவீன சமுதாயத்தில் நிலவும் மன அழுத்தம், தனிமை மற்றும் நுகர்வோர் கலாச்சாரம் தனிமனிதனை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆழமாகப் பேசியது.

​ஆர்ச் ஹேடிஸ் கவிதை உலகிற்கு அளித்த மிக முக்கியமான விசித்திரமான பங்களிப்பு — NFT (Non-Fungible Token) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கவிதைகளை டிஜிட்டல் கலையாக மாற்றியதுதான். 2021-ஆம் ஆண்டில், “Arcadia” என்ற தனது நீண்ட கவிதை நாடகத்தை, இசை மற்றும் காட்சிப் படங்களுடன்இணைத்து ஒரு டிஜிட்டல் கலைப் படைப்பாக மாற்றினார். ‘கிறிஸ்டிஸ்’ ஏல நிறுவனத்தின் மூலம் இந்த NFT கவிதை ஏலம் விடப்பட்டது. இது $525,000 (சுமார் அரை மில்லியன் டாலர்) தொகைகக்கு விற்பனையாகி, உலக வரலாற்றிலேயே மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட கவிதை என்ற உலக சாதனையைப் படைத்தது.

இந்த முயற்சி, கவிதைக்கு நிதிசார்ந்த மதிப்பையும், டிஜிட்டல் காலத்தில் கவிதையை எவ்வாறு பாதுகாத்து சந்தைப்படுத்த முடியும் என்பதற்கான புதிய வழியையும் காட்டியது.

​ஆர்ச் ஹேடிஸ் வெறும் கவிஞராக மட்டும் நின்றுவிடாமல், சமகால சமூகப் பிரச்சினைகளுக்கான குரலாகவும் செயல்பட்டு வருகிறார். தனது கவிதைகள் மூலமும், பொதுமேடைகள் மூலமும் இளைஞர்களிடையே நிலவும் மன அழுத்தம், தனிமை மற்றும் தற்கொலை எண்ணங்களுக்கு எதிராகப் பேசி வருகிறார். உலகின் முன்னணி விவாத மேடையான ஆக்ஸ்போர்டு யூனியனில் உரையாற்றியுள்ளார். அங்கு ‘டிஜிட்டல் யுகத்தில் கவிதையின் எதிர்காலம்’ மற்றும் ‘சமூக ஊடகங்கள் மனித மனநலத்தில் ஏற்படுத்தும் தாக்கம்’ குறித்து ஆழமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். அச்சுப் புத்தகங்களைப் படிக்காத தலைமுறையினரை, கவிதை வாசிப்பை நோக்கி ஈர்த்த பெருமை இவருக்கு உண்டு.  பிற இன்ஸ்டா கவிஞர்களைப் போலன்றி, ஆர்ச் ஹேடிஸ் தனது நீண்ட கவிதை தொகுப்புகளில் செவ்வியல் இலக்கிய நயத்தையும், தத்துவார்த்த சிந்தனைகளையும் இணைத்து எழுதினார்.

​21-ஆம் நூற்றாண்டின் டிஜிட்டல் யுகத்தில் கவிதை எவ்வாறு தனது வடிவத்தை மாற்றிக் கொண்டு மக்களிடம் போய்ச்சேர்கிறது என்பதற்கு ஆர்ச் ஹேடிஸ் சிறந்த சான்றாவார். இன்ஸ்டாகிராம் என்ற சமூக ஊடகத்தில் சிறிய வரிகளுடன் தனது பயணத்தைத் தொடங்கி, இங்கிலாந்தின் முன்னணி கவிஞராகவும், NFT தொழில்நுட்பத்தின் மூலம் கவிதை உலகையே வியப்பில் ஆழ்த்திய புதுமைப்பித்தனாகவும் அவர் உயர்ந்துள்ளார்.

​தொழில்நுட்பமும் கலையும் இணையும் புள்ளியில் நின்று, மனித மனதின் ஆழமான உணர்ச்சிகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் ஆர்ச் ஹேடிஸின் முயற்சி, வருங்கால இளம் கவிஞர்களுக்கு ஒரு புதிய வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

 

ஆர்ச் ஹேட்ஸ் கவிதைகள்

 

1

மனிதர்கள் அரிதாகவே மாறுகிறார்கள். பெரும்பாலும் அவர்கள்

ஏற்கனவே என்னவாக இருக்கிறார்களோ

அதன் தீவிர வடிவமாகவே மாறுகிறார்கள்.

 

2

உங்கள் மகிழ்ச்சிக்காக நீங்கள்

ஒருவரைச் சார்ந்திருக்கும்போது

உங்களைத் துயரப்படுத்துவதற்கான

அதே அதிகாரத்தையும் நீங்கள்

அவர்களுக்கே வழங்குகிறீர்கள்.

 

3

உங்கள் கண்முன் இருப்பதை

உங்களால் ஒருபோதும் பார்க்க முடியாது.

நீங்கள் திரும்பிப் பார்த்துக் கொண்டே இருந்தால்.

 

4

உடைந்த உன் இதயம்

என் இதயத்தைப் போலவே துடிக்கிறது.

ஆனால் என்னுடையது

உனக்காக மட்டுமே துடிக்கிறது.

 

5

நான் உன்னை மிகவும் நம்ப விரும்பினேன்.

நான் எனக்கு நானே பொய் சொல்ல ஆரம்பித்தேன்.

 

6

முழுமையான, உடைந்த அல்லது உடைந்து கொண்டிருக்கும்,

என் இதயம் எப்போதும் அன்பால் நிறைந்திருக்கிறது.

 

7

நீங்கள் அதிகமாகக் கேட்கவில்லை.

நீங்கள் தவறான நபரிடம் கேட்கிறீர்கள்.

 

8

உங்கள் மகிழ்ச்சிக்கு

யாரும் கடன்பட்டவர்கள் அல்லர்.

 

9

ஒருவரின் உண்மையான குணத்தை அறிய, அவர்கள் நடந்துகொள்ளும்

விதத்தைக் கவனியுங்கள்.

அவர்கள் விரும்பியது கிடைக்காதபோது.

 

10

உங்கள் தரத்தைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்.

தனியாக இருக்கக் கூடாது என்பதற்காக.

 

(ஆர்ச் ஹேடிஸ் இன்ஸ்டாகிராம் கணக்கு – iseesomeletters )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *