மொழி நமது வேறுபாடுகளின் வெளிப்பாடு
நேற்று (செப்டம்பர் 30) சர்வதேச மொழிபெயர்ப்பு தினம். விவிலியத்தை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர் புனித ஜெரோம். அவரது இப்பதிப்பு வல்கேட் (Vulgate) என்று அழைக்கப்படுகிறது. அவர் மொழிபெயர்ப்பாளர்களின் பாதுகாவலராக கருதப்படுகிறார். புனித ஜெரோமின் திருவிழாவுடன் ஒத்துப்போகும் வகையில், ஐக்கிய நாடுகள் சபையால் இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சாசனத்தின் நோக்கங்களையும் கோட்பாடுகளையும் நிலைநிறுத்துவதிலும், நாடுகளை ஒன்றிணைப்பதிலும், உரையாடல், புரிதல் மற்றும் ஒத்துழைப்பை எளிதாக்குவதிலும், வளர்ச்சிக்குப் பங்களிப்பதிலும், உலக அமைதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் ஐக்கிய நாடுகள் சபையால் மொழிபெயர்ப்பு நாள் கொண்டாடுகிறது.
ஒரு சலவைக் குறிப்பை மொழிபெயர்ப்பு ஒரு கவிதையை மொழிபெயர்ப்பது இரண்டுமே மொழிபெயர்ப்புகள்தாம். அப்படியானால், மொழிபெயர்ப்பு ஒரு செயலா? கலையா ? எனும் கேள்வி எழுகிறது. இரண்டுமே என்பதுதான் இதற்கான பதில்.
மொழிபெயர்ப்பு அதன் தேர்வைப் பொருத்தே கலை செயல்பாடாக அமையும். இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்க்கும்போது அது தானாகவே ஒரு கலைச் செயல்பாடாக மாறிவிடுகிறது.
மொழிபெயர்ப்பது என்பது கலையை பரப்பும் இயக்கம். இலக்கிய மொழிபெயர்ப்பு, இலக்கியத்தைப் உலகம் முழுவதும் பரப்பும் ஒரு கலைத்துவச் செயல்முறையாக இருக்க வேண்டும். மற்றவர்களால் எழுதப்பட்ட வசனங்களைப் பேசும் ஒரு நடிகரைப் போலவும், மற்றவர்களால் வடிவமைக்கப்பட்ட சைகைகள், மற்றும் பாடல்களுக்கு அசையும் ஒரு நடனக் கலைஞரைப் போலவும், ஒரு இலக்கிய மொழிபெயர்ப்பாளரின் இயக்கம் அமைகிறது. மொழிபெயர்க்கும் திறன் என்பது பன்மொழித் திறனின் ஒரு காரணி மட்டுமே என்று பெரும்பாலும் கருதப்படுகிறது. ஆனால் மொழிபெயர்ப்பு அதைக்கடந்தது. படைப்பின் மூலமொழி, மற்றும் படைப்பு கொண்டு சேர்க்கப்படும் மொழி இரண்டும் இரு சமூகத்தின் விளைபொருட்கள். இவை இரண்டுக்கும் துரோகம் இழைக்காமல் இரண்டின் ஆன்மாவையும் திருப்திபடுத்த வேண்டும்.
ஒரு படைப்பை வெளிக்கொணரும் மூல மொழிக்கும், அதன் மூல ஆசிரியருக்கும், அவர் இயங்கிய காலத்துக்கும் செலுத்தும் மரியாதையாக மொழிபெயர்ப்பு அமைய வேண்டும். மூல ஆசிரியரின் நோக்கங்கள், அவரது குரல், மற்றும் அவரது ஆளுமை ஆகியவற்றை மொழிபெயர்ப்பாளர் சிந்திக்கிறார். அவரது மொழிபெயர்ப்பின் மூலம் அவர்களைக் கௌரவிக்கிறார். மொழிபெயய்ப்பாளரின் சொந்த ஆர்வம், மனப்பான்மை, அழகியல், சுயம் ஆகிய அனைத்தும் மொழிபெயர்ப்பில் அர்ப்பணிப்புடன் பிணைக்கப்பட்டுள்ளது.
இப்போது ChatGPT, கூகுள் டிரான்ஸ்லேட்டர் என மொழிபெயர்ப்பு இயந்திரங்கள் வந்துவிட்டன. எதிர்காலத்தில் அழிந்துபோகும் உயிரினங்களில் மொழிபெயர்ப்பாளரும் ஒருவராக இருப்பார் என அஞ்சப்படுகிறது.
அதேவேளை நாம் அனைவரும் செயற்கை நுண்ணறிவின் சாத்தியமான மனிதவள அல்லது நிர்வாகத் திறன்களைப் பற்றிப் பேசுவவில்லை. மாறாக, இனி யாரும் ஒரு கட்டுரை கூட எழுத மாட்டார்கள், இசை அமைக்க மாட்டார்கள், அல்லது உண்மையான வண்ணத்தைப் பயன்படுத்த மாட்டார்கள் என்றே பேசிவருகிறோம்.
கூகிள் மொழிபெயர்ப்பு இயந்திரம் இரண்டு வெற்று சதுரங்களை வைத்திருக்கின்றன. ஒன்று உங்கள் சொல் அல்லது சொற்றொடரைத் தட்டச்சு செய்வதற்கு. மற்றொன்று பதிலைப் பெறுவதற்கு. இரண்டு சொற்கள், சொற்றொடர்கள், உரைகள் அல்லது மொழிகளுக்கு இடையே மறுக்க முடியாத சமநிலை உள்ளது என்பதை இது உணர்த்துகிறது. ஆனால் பிரம்மராஜன், ஜி.குப்புசாமி, அசதா, கார்த்திகை பாண்டியன், இல.சுபத்ரா போன்றோர் மூல சொல்லுக்கு இணையான ஒரு தமிழ்ச்சொல்லுக்காக அவ்வளவு தேடுதல் உடையவர்களாக இருக்கிறார்கள்.


ஜி.குப்புசாமி



இத்தகு தேடல், திருத்துதல் போன்றவற்றில் வீணடிக்கப்படும் மனித நேரம்அகற்றப்பட்டால் என்னவாகும்? என்பதை கூகுள் இயந்திரத்தின் பயனர்கள் புரிவார்கள். அதன் வேகமும், சம அளவுள்ள பெட்டிகளும் மொழிபெயர்ப்பு என்பதை ஒரு அளவுசார்ந்த செயல்முறையாக மாற்றுகின்றன. இரண்டு மொழிகளைப் பிரிக்கும் முடிவற்ற தூரத்தை ஒரு மென்மையான வெள்ளைத் திரையின் மூலம் கடந்துவிடலாம் என கூகுள் உபயோகிப்பாளர் நம்புவது பரிதாபத்துக்கு உரியது. நேரமின்மையால் மொழியை அறிதலில் ஏற்படும் பின்னடைவால் உதவிக்கு நாடும் செயற்கை நுண்ணறிவின் உடனடித்தன்மையுடன் ஒப்பிடும்போது, ஒரு மொழிபெயர்ப்பாளரின் நேரத்திற்கு என்ன மதிப்பு இருக்கிறது?
மொழிபெயர்ப்பு என்பது இரண்டு சொற்களுக்கோ, வாக்கியங்களுக்கோ அல்லது உரைகளுக்கோ இடையே ஒரு சமநிலையை உருவாக்குவதல்ல. அது இரு தரப்புக்கும் இடையே ஒரு பேச்சுவார்த்தை நடந்ததற்கான ஆதாரம்.
சேருமிட மற்றும் மூல மொழிகள் இரண்டிலும் திறமை கொண்ட ஒருவர், தான் புரிந்துகொண்டபடி மூலத்தை மீண்டும் உருவாக்குவதற்காக, தொடர்ச்சியான விட்டுக்கொடுத்தலையும் மனச்சான்றுக்கு உகந்த முடிவுகளை எடுக்கும்போதும் தன்னையே அவர் ஒரு ஊடகமாக மாற்றுகிறார்.
செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களின் உடனடி வசதிகள் வந்துவிட்டதில், மொழிபெயர்ப்பின் தேவை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும் என்பது, மனித இனத்துக்கிடையே அதன் பண்பாட்டுக்கிடையே நிலவும் வேறுபாடுகள் ஒழிக்கப்பட்டுவிடும் என நம்புவதைப்போல் அபத்தமானது. மொழி நமது வேறுபாடுகளின் வெளிப்பாடு. இந்த வேறுபாடுகளை ஒழிக்கவோ, தட்டையாக்கவோ, எளிமைப்படுத்தவோ, புறக்கணிக்கவோ, அல்லது ஊடுருவவோ முடியாது. மொழிபெயர்க்க மட்டுமே முடியும். நம் அதிர்ஷ்டம், அதைச் செய்வதற்கு அசதா போன்ற மொழிபெயர்ப்பாளர்கள் இன்னும் இங்கு இருக்கிறார்கள்.